நியூயார்க்: 2026 அமெரிக்க இடைக்காலத் தேர்தல் டொனால்ட் டிரம்பின் அரசியல் பயணத்தில் மிகக் கடுமையான அடியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளான செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை இரண்டையும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் கைப்பற்றியுள்ளனர்.
செனட் சபையில் 54-44 என்ற கணக்கிலும், பிரதிநிதிகள் சபையில் குறைந்தது 30 புதிய இடங்களைக் கைப்பற்றி 240-147 என்ற அளவிலும் ஜனநாயகக் கட்சியினர் வலுவான முன்னிலையைப் பெற்றுள்ளனர். இதன் மூலம் அதிபர் டிரம்பின் கொள்கைகளுக்கு எதிரான கடுமையான சட்டக் கட்டுப்பாடுகளை விதிக்கும் அதிகாரத்தை அவர்கள் பெற்றுள்ளனர்.
டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு இது ஒரு மிகப்பெரிய அரசியல் பின்னடைவு. துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் போன்ற முக்கியத் தலைவர்கள் ஈரான் மீதான போர் மற்றும் இஸ்ரேல் கொள்கைகள்தான் தேர்தல் தோல்விக்குக் காரணம் என்று வெளிப்படையாகப் பேசத் தொடங்கிவிட்டனர். ஆனால் உண்மை அதுமட்டும்தானா? இல்லை.. சாதாரண அமெரிக்க மக்களின் அன்றாடப் செலவுகளையும், பட்ஜெட்டையும் பாதித்த டிரம்பின் வரிப் போர் மற்றும் அதில் இந்தியா வகித்த முக்கியப் பங்குதான் இந்த வரலாற்று தோல்விக்கு காரணமாக அமைந்தது. அமெரிக்காவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டிரம்பை ஆதரித்த வாக்காளர்கள், இப்போது அவரைப் புறக்கணித்து தண்டித்ததன் பின்னணியில் மிகக் கடுமையான பொருளாதார காரணம் உள்ளது. டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த குடியரசுக் கட்சி செனட்டர் டெட் குரூஸ் இது குறித்து ஒரு அதிர்ச்சியூட்டும் உண்மையைச் சுட்டிக்காட்டினார். அமெரிக்காவில் 2026-ஆம் ஆண்டில் மட்டும் 7.5 கோடிக்கும் அதிகமானோர் பணம் பெற்றுக் கொண்டு ரத்த பிளாஸ்மா தானம் செய்துள்ளனர். அதாவது தினமும் சுமார் 2 லட்சம் அமெரிக்கர்கள் ஊசியைக் கையில் ஏற்றிக் கொண்டு, கிடைக்கும் பணத்தில் அன்றாட வீட்டு மளிகைப் பொருட்களை வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். வாக்காளர்களைக் களத்திற்கு வரவழைக்க முடியாதது குடியரசுக் கட்சியின் தோல்வி அல்ல.. தங்கள் அரசு கொண்டுவந்த பொருளாதார தடை, வரி ஏற்றம் மக்களை துன்புறுத்தியதே தோல்விக்கு காரணம் என்று டெட் குரூஸ் ஒப்புக்கொண்டார். ராய்ட்டர்ஸ் மற்றும் இப்சோஸ் நடத்திய கருத்துக் கணிப்பில், 48% வாக்காளர்கள் பட்ஜெட் செலவு உயர்வுதான் தங்களது வாக்களிப்பைத் தீர்மானித்த முக்கியப் பிரச்சனை என்று கூறியுள்ளனர். மேலும், 49% பேர் டிரம்ப் பதவியேற்ற பிறகு தங்கள் குடும்ப நிதி நிலைமை மிக மோசமாகிவிட்டதாகத் தெரிவித்தனர். 2025 ஜனவரியில் மீண்டும் வெள்ளை மாளிகைக்குள் நுழைந்த டிரம்ப், "அமெரிக்கா ஃபர்ஸ்ட்" என்ற முழக்கத்துடன் மிகப்பெரிய வரிப் போரைத் தொடங்கினார். மற்ற நாடுகள் அமெரிக்காவை ஏமாற்றுவதாகக் கூறி, இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குக் கூடுதல் வரி விதித்தார். வெளிநாட்டுப் பொருட்களுக்கு வரி போட்டால் அந்தத் தொகையை வெளிநாடுகள்தான் கட்டும், அதனால் அமெரிக்கப் பொருளாதாரம் உயரும் என்று அமெரிக்க மக்களிடம் ஆசை வார்த்தை கூறப்பட்டது. ஆனால் நிஜத்தில் நடந்தது வேறு. ஜெர்மனியின் கீல் உலகப் பொருளாதார நிறுவனம்சுமார் 4 டிரில்லியன் டாலர் மதிப்பிலான 2.5 கோடி இறக்குமதிப் பதிவுகளை ஆய்வு செய்தது. அதில் வெளிநாட்டு ஏற்றுமதியாளர்கள் வெறும் 4% வரிச் சுமையை மட்டுமே ஏற்றுக் கொண்டனர். மீதமுள்ள 96% வரிச் சுமை அப்படியே அமெரிக்க இறக்குமதியாளர்கள் மற்றும் அமெரிக்க நுகர்வோர் தலையில்தான் விடிந்தது. அதாவது, வெளிநாட்டினர் மீது விதிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட வரி, உண்மையில் அமெரிக்கக் குடிமக்கள் தலையில் கட்டப்பட்ட ஒரு கூடுதல் நுகர்வு வரியாக மாறியது. அமெரிக்கர்கள் தங்கள் வாங்கும் பொருட்களை கூடுதல் விலை கொடுத்து வாங்கினர். இந்த வரிப் போரில் இந்தியா மிக முக்கியமான மையப்புள்ளியாக மாறியது. டிரம்ப் நிர்வாகம் முதலில் இந்தியப் பொருட்களுக்கு 25% பரஸ்பர வரியை விதித்தது. பின்னர் 2025 ஆகஸ்ட் மாதத்தில், இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் காரணம் காட்டி, மேலும் ஒரு 25% அபராத வரியை விதித்தது. இதனால் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்குச் செல்லும் பல அத்தியாவசியப் பொருட்களுக்கு வரி 50% ஆக உயர்ந்தது. டிரம்ப் நினைத்தபடி இந்திய ஏற்றுமதியாளர்கள் விலையைக் குறைக்கவில்லை. மாறாக, கூடுதல் வரிச்சுமையால் அமெரிக்காவுக்கான ஏற்றுமதியை அவர்கள் கணிசமாகக் குறைத்துக் கொண்டனர். இதனால் அமெரிக்கச் சந்தையில் தட்டுப்பாடும் விலையேற்றமும் வெடித்தன: அமெரிக்கா இறக்குமதி செய்யும் துணிகளில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவிலிருந்து செல்கிறது. இக்ரா (ICRA) ஆய்வின்படி, பருத்தி உடைகள், ஆயத்த ஆடைகள் மற்றும் படுக்கை விரிப்புகளின் மொத்த விற்பனை விலை அமெரிக்காவில் தாறுமாறாக உயர்ந்தது. உலக வைர விற்பனையில் இந்தியா சுமார் 90% பங்கைக் கொண்டுள்ளது. இந்திய நகைகள் மற்றும் தீட்டப்பட்ட வைரங்களின் இறக்குமதி விலை உயர்ந்ததால் அமெரிக்க நகை வியாபாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அமெரிக்கக் குடும்பங்கள் அன்றாடம் பயன்படுத்தும் இந்திய பாசுமதி அரிசி, நறுமண மசாலாப் பொருட்கள் மற்றும் உறைந்த இறால் போன்றவற்றின் விலை பல்பொருள் அங்காடிகளில் எகிறியது. இந்திய வாகன உதிரிபாக உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (ACMA) தகவல்படி, கார் எஞ்சின் பாகங்கள் மற்றும் மாற்றுப் பாகங்களின் வரவு குறைந்ததால் அமெரிக்காவில் கார் பழுதுபார்க்கும் செலவு இரண்டு மடங்கானது. வரி வசூல் மூலம் அமெரிக்க அரசுக்கு 200 பில்லியன் டாலர் கிடைத்திருக்கலாம், ஆனால் அந்தப் பணம் முழுவதும் அமெரிக்க மக்களின் பாக்கெட்டுகளில் இருந்துதான் பிடுங்கப்பட்டது. தேர்தலின் போது அமெரிக்க மக்கள் வெளியுறவுக் கொள்கைகளையோ, ஈரான் போரையோ மட்டுமே யோசித்து வாக்களிக்கவில்லை. கான்சாஸ் மாகாணத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், 30.6% வாக்காளர்களுக்கு அன்றாட செலவு, எரிபொருள் மற்றும் மளிகைப் பொருட்கள் விலையேற்றம்தான் முதன்மையான கவலையாக இருந்தது. ஈரான் போர் 10% மக்களின் கவனத்தை மட்டுமே பெற்றது. டிரம்ப் இந்தத் தேர்தலைத் தனது ஆட்சிக்கான ஒரு மதிப்பீடாக மாற்ற நினைத்தார். மக்களும் அதையே செய்தனர். ஆனால், தங்கள் மாதாந்திரச் சம்பளத்தால் வீட்டு பட்ஜெட்டை சமாளிக்க முடியாத கோபத்தை வாக்குகளாக மாற்றி டிரம்பின் குடியரசுக் கட்சியை வீழ்த்தினர். இந்திய பொருட்களுக்கு வரி விதித்து அமெரிக்காவை உயர்த்துகிறேன் என்று டிரம்ப் தொடங்கிய வரி விளையாட்டு, குறிப்பாக இந்தியப் பொருட்கள் மீதான அதீத வரி விதிப்பு, கடைசியில் அமெரிக்க மக்களின் பட்ஜெட் கணக்கை உடைத்து, டிரம்பின் நாடாளுமன்ற அதிகாரத்தையே பறித்துவிட்டது.மக்களின் அன்றாடப் பாடு: ரத்தம் விற்று மளிகைப் பொருள் வாங்கிய நிலை
வெளிநாடுகளுக்கு வைத்த பொறி.. சொந்த நாட்டு மக்களைத் தாக்கிய விபரீதம்
இந்தியப் பொருட்கள் மீது 50% வரி
வாக்குச்சாவடியில் வெடித்த கோபம்