நியூயார்க்: பாகிஸ்தான் - சவுதி இணைந்து உருவாக்கி உள்ள இஸ்லாமிய நேட்டோ அமைப்பில் எகிப்து சேர வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு பின் இந்தியாதான் காரணம் என்றும் கூறப்படுகிறது.
அமெரிக்காவின் நேட்டோ அமைப்பை போலவே புதிதாக இஸ்லாமிய நேட்டோ என்ற ஒரு அமைப்பு உருவாகி உள்ளது. நீண்ட மாதங்களாக நடைபெற்ற கூட்டங்கள், செய்தியாளர் சந்திப்புகள், அரசியல் ரீதியான ஆலோசனைகள் மற்றும் பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளும் கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் மெக்காவில் அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்திட்டுள்ளன.
சவுதி முடி இளவரசர் முகமது பின் சல்மான், துருக்கி அதிபர் ரசெப் தாயிப் எர்டோகன் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் ஆகியோர் இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்காவில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ஊடகங்களும் உலக அரசியல் வல்லுநர்களும் இந்த ஒப்பந்தத்தை இஸ்லாமிய நேட்டோ என்று வர்ணித்து வருகின்றனர். இந்தக் கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் மிக முக்கியமான அம்சம் அதன் பரஸ்பர பாதுகாப்பு விதியாகும். ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள மூன்று நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் மீது வெளியில் இருந்து ஆயுதமேந்திய தாக்குதல் நடத்தப்பட்டால், அது மற்ற இரு நாடுகளின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாகவே கருதப்படும். பாகிஸ்தான் - சவுதி இணைந்து உருவாக்கி உள்ள இஸ்லாமிய நேட்டோ அமைப்பில் எகிப்து சேர வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு பின் இந்தியாதான் காரணம் என்றும் கூறப்படுகிறது. இந்தியாவிற்கும் எகிப்திற்கு இடையிலான உறவு என்பது மிக நீண்டது. 1956-ஆம் ஆண்டு சுயஸ் கால்வாயை பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் படைகள் முற்றுகையிட்டு, இஸ்ரேல் சினாய் மீது தாக்குதல் நடத்தியபோது, அதனை வெளிப்படையாகக் கண்டித்து எகிப்தின் இறையாண்மைக்கு ஆதரவாக நின்றது இந்தியா. அதற்கு நன்றிக் கடனாக, 1961-ல் இந்தியா கோவாவை போர்ச்சுகீசிய ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க ராணுவத்தை அனுப்பியபோது, போர்ச்சுகீசிய போர் கப்பல்கள் சுயஸ் கால்வாய் வழியே செல்வதை எகிப்து தடுத்து நிறுத்தியது. பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட காலத்தில் இருந்தே அணிசேரா இயக்கத்த முன்னெடுத்துச் சென்ற இரு நாடுகளும், பல ஆண்டுகளாக வலுவான நட்புறவைப் பேணி வருகின்றன. தற்போது துருக்கி, பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா இடையே கையெழுத்தாகியுள்ள மெக்கா ஒப்பந்தத்தில் எகிப்து இணைவதற்குத் தயக்கம் காட்டுவதற்கு, இந்தியாவுடனான இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நட்பும் முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. சமீபத்தில் துருக்கி, பாகிஸ்தான், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் இணைந்து கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தமான 'மெக்கா ஒப்பந்தத்தில்' கையெழுத்திட்டன. 'இஸ்லாமிய நேட்டோ' என வர்ணிக்கப்படும் இந்தக் கூட்டணியை மேலும் பல நாடுகளுக்கு விரிவுபடுத்த முயற்சிகள் நடக்கின்றன. ஆப்பிரிக்கக் கண்டத்திலேயே மிகவும் சக்திவாய்ந்த ராணுவத்தைக் கொண்டுள்ள எகிப்து, அடுத்ததாக இதில் இணையும் என துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கான் ஃபிடான் தெரிவித்தார். எகிப்து வெளியுறவு அமைச்சரும் இதனைப் பரிசீலிப்பதாகக் கூறியிருந்தார். 4.4 லட்சத்துக்கும் அதிகமான ராணுவ வீரர்கள், நவீன ஆயுதங்கள் மற்றும் உலக வர்த்தகத்தின் முக்கியப் பாதையான சுயஸ் கால்வாய் ஆகியவற்றைக் கொண்டுள்ள எகிப்து இணைவது இந்தக் கூட்டணிக்குப் பலம் சேர்க்கும். இருப்பினும், எகிப்து இந்தக் கூட்டணியில் இணைவதற்குச் சவுதி அரேபியாவின் எதிர்ப்பு ஒரு காரணமாக உள்ளது. இன்னொரு காரணம் இந்தியா உடனான நட்பு. துருக்கி எகிப்தைச் சேர்க்க ஆர்வம் காட்டினாலும், சவுதி அரேபியா அதற்குத் தீவிர எதிர்ப்புத் தெரிவிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2013-ல் எல்.சிசி எகிப்து அதிபரான பிறகு, சவுதி சுமார் 25 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்கிய போதிலும், தனக்குத் தேவையான சமயங்களில் எகிப்து ராணுவ ரீதியாக உதவவில்லை என சவுதி கருதுகிறது. குறிப்பாக, ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் எகிப்து போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்ற அதிருப்தி சவுதிக்கு உள்ளது. மேலும், வளைகுடாவில் சவுதிக்கு போட்டியாக இருக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துடன் எகிப்து நெருக்கம் காட்டுவதும் சவுதியின் கோபத்திற்குக் காரணம். எகிப்து தனது வெளியுறவுக் கொள்கையில் சமநிலையைப் பேண விரும்புகிறது. துருக்கிக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட கிரீஸ் மற்றும் சைப்ரஸ், ஏன் இஸ்ரேல் உடன் கூட எகிப்து நட்பாக உள்ளது. மிக முக்கிய நட்பு நாடான அமீரகம் மற்றும் அசைக்க முடியாத நட்பைக் கொண்டுள்ள இந்தியா ஆகியவற்றுடன் எகிப்து நல்ல நெருக்கமான உறவை கொண்டுள்ளது. பாகிஸ்தான், துருக்கி மற்றும் சவுதி ஆகியவற்றுடன் கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொண்டால், அது இந்தியாவுடனான உறவில் விரிசலை ஏற்படுத்தக்கூடும். ஏற்கனவே இந்தியா - எகிப்தி ஆகிய இரு நாட்டு ராணுவங்களும் கூட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பொருளாதார ரீதியாக, எகிப்தில் 700-க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன; இதில் 70 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்திய நிறுவனங்கள் 5.5 பில்லியன் டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்து, சுமார் 40,000 எகிப்தியர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளன. இருதரப்பு வர்த்தகம் 6.5 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது. பாகிஸ்தான் இருக்க கூடிய ஒரு ராணுவக் கூட்டணியில் எகிப்து இணைவது, இந்தியாவுக்கு தவறான செய்தியைக் கடத்திவிடும் என சர்வதேச அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர். இதன் காரணமாகவே பாகிஸ்தானின் இந்த இஸ்லாமிய நேட்டோ அமைப்பில் எகிப்து இணையவில்லை என்று கூறப்படுகிறது.ஒருவர் மீது தாக்குதல் நடத்தினால் அனைவர் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல்
இஸ்லாமிய நேட்டோ
சவுதி அரேபியாவின் எதிர்ப்பு
இந்தியா உடன் நட்பு