நியூயார்க்: செயற்கை நுண்ணறிவுதொழில்நுட்பத்தில் சர்வதேச அளவில் முன்னிலை வகிக்கும் அமெரிக்காவின் நிவிடியா (Nvidia) நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான ஜென்சன் ஹுவாங் திருமணத்தை மீறிய உறவு காரணமாக சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம்.. அவர் சீனாவின் ஸ்பை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளார். அவர் ஆலிஸ் ஹுவாங் என்ற பெண்ணுடன் தனக்கு இருந்த திருமணத்தை மீறிய உறவை பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். ஆலிஸ் ஹுவாங், சீன உளவு அமைப்பான எம்எஸ்எஸ் உடன் தொடர்புடைய ஒரு உளவு நபராக இருக்கலாம் என்று அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் சந்தேகிப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விவகாரம் சர்வதேச அளவில் விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், ஜென்சன் ஹுவாங் தனது நிறுவன ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் ஒன்றை அனுப்பி, தன் தவறுக்கு மன்னிப்பு கோரியுள்ளார். தனது நிறுவன சகாக்களுக்கு எழுதிய விரிவான கடிதத்தில் ஜென்சன் ஹுவாங், என் சக ஊழியர்களுக்கு, நான் எனது குடும்பத்திற்கும் உங்கள் அனைவருக்கும் ஒரு மன்னிப்பைத் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். நான் என் மனைவிக்குத் துரோகம் இழைத்துவிட்டேன். எனது செயல்பாடுகள் அவருக்கும் எங்கள் குழந்தைகளுக்கும் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. நான் செய்த தவறுக்கு எந்தவித நியாயமும் காரணமும் சொல்ல முடியாது. இதற்காக நான் மனதார வருந்துகிறேன். எனது வாழ்நாள் முழுவதும் என் குடும்பம் எனக்கு அன்பையும் ஆதரவையும் கொடுத்துள்ளது.. அவர்கள் என் நேர்மையையும் விசுவாசத்தையும் பெற தகுதியானவர்கள். ஆனால் நான் அவர்களை ஏமாற்றி, நாங்கள் ஒன்றாக உருவாக்கிய வாழ்க்கையைச் சேதப்படுத்திவிட்டேன். எனது இந்த செயலுக்கும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கும் நான் முழுப் பொறுப்பேற்கிறேன். இதன் காரணமாக வரும் அனைத்து விமர்சனங்களையும் நான் தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறேன். என் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு ஒரு விஷயத்தை சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன்.. நான் உங்களை நேசிக்கிறேன். வெறும் மன்னிப்பு மட்டுமே நான் செய்ததை மாற்றிவிட முடியாது என்பதை அறிவேன். காலம் செல்லச் செல்ல உங்கள் நம்பிக்கையை மீண்டும் பெறுவேன் என நம்புகிறேன். நிவிடியா நிறுவனத்தை வழிநடத்துவது என் வாழ்நாளின் பெருமை. உங்களுக்கு உண்மையாக உழைத்து, உங்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருப்பதே என் கடமை.. அந்தப் பொறுப்பில் நான் சறுக்கிவிட்டேன். நான் நிவிடியாவுக்கு தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு உங்கள் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்பேன். ஊடகங்களில் வந்துள்ள தேசியப் பாதுகாப்பு தொடர்பான சந்தேகங்கள் குறித்து, நிவிடியா நிர்வாகக் குழு ஒரு சுதந்திரமான விசாரணையைத் தொடங்கியுள்ளது. அந்த விசாரணைக்கு நான் முழு ஒத்துழைப்பு வழங்குவேன். நான் என் நாட்டையும் என் நிறுவனத்தையும் நேசிக்கிறேன். நிவிடியாவைப் பாதுகாப்பதிலும் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் நான் உறுதியாக உள்ளேன். என் முடிவுகளுக்கு என் குடும்பம் பொறுப்பல்ல.. நானே பொறுப்பு. அவர்களுக்கு தனிப்பட்ட அமைதியை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன், என்று கூறி உள்ளார். இந்தக் கடிதத்தின் மூலம், நீண்ட நாட்களாக ஊடகங்களில் பேசப்பட்டு வந்த தனிப்பட்ட விவகாரத்தை அவர் வெளிப்படையாக உறுதி செய்துள்ளார். ஆலிஸ் ஹுவாங் ஒரு சீன தொழில்முனைவோர். தொடக்கத்தில் சீன அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான சிசிடிவி மற்றும் ஹுனான் தொலைக்காட்சியில் ஊடகப் பணியாளராக இவர் பின்னர் சொந்தமாக தொழில் தொடங்கி உள்ளார். பின்னர் தனியார் வங்கியியல் மற்றும் நிதி மேலாண்மை துறைகளில் பணியாற்றிய இவர், சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மெகாஸ்பீட் என்ற டேட்டா சென்டர் மற்றும் கிளவுட் நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்புக்கு வந்தார். மெகாஸ்பீட் நிறுவனம் நிவிடியாவின் முக்கியமான வாடிக்கையாளர்களில் ஒன்றாக விளங்கியது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் இந்நிறுவனம் சுமார் 4.8 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான நிவிடியா மைக்ரோசிப்களை வாங்கியுள்ளது. தொழில் நிமித்தமான சந்திப்புகள் மூலமாகவே ஜென்சன் ஹுவாங்கிற்கும் ஆலிஸ் ஹுவாங்கிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. 2024 ஜூன் மாதம் தைபேயில் நடந்த வர்த்தக கண்காட்சிக்கு பிறகும், 2025 மே மாதம் உணவக சந்திப்பிலும் இவர்கள் இருவரும் ஒன்றாக இருந்த புகைப்படங்கள் சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றன. அமெரிக்க புலனாய்வு அமைப்பான சிஐஏ தயாரித்த ரகசிய குறிப்பின்படி, ஆலிஸ் ஹுவாங் சீனாவின் உளவுத் துறையான 'எம்எஸ்எஸ்' அமைப்பால் தொடர்பு கொள்ளப்பட்டு, நிவிடியா தலைமை அதிகாரியுடன் இருக்கும் நெருக்கத்தைப் பயன்படுத்தி தகவல்களைத் திரட்டி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுப்பப்பட்டது. அமெரிக்க அரசு, சீனாவின் ராணுவ மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை மட்டுப்படுத்தும் நோக்கில், அதிநவீன ஏஐ கிராபிக்ஸ் பிராசசிங் யூனிட் சிப்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சிங்கப்பூரை மையமாகக் கொண்ட மெகாஸ்பீட் நிறுவனம் மூலம் விதிமுறைகளை மீறி, இந்த அதிநவீன சிப்கள் மறைமுகமாக சீனாவுக்கு அனுப்பப்பட்டதா என்ற விசாரணையை அமெரிக்க அரசு அமைப்புகள் ஏற்கனவே நடத்தி வருகின்றன. அதாவது இந்த நபரை பயன்படுத்தி சீனா சிப்புகளையும், அதன் தொழில்நுட்பங்களையும் பெற்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சீனா கடந்த 2-3 ஆண்டுளாக திட்டமிட்டு இந்த உளவுப்பணியை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஜென்சன் ஹுவாங்கின் அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து, நிவிடியா நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்த விவகாரம் தொடர்பாக சட்ட நிபுணர்கள் அடங்கிய சுதந்திரமான விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும், இதுவரை கிடைத்துள்ள தகவல்களின்படி, நிறுவனத்தின் தொழில்நுட்ப ரகசியங்களோ, தயாரிப்பு முறைகளோ அல்லது அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்போ எவ்விதத்திலும் சமரசம் செய்யப்படவில்லை என நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது. ஜென்சன் ஹுவாங்கின் தலைமைத்துவத்தின் மீது தங்களுக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும், அவர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகத் தொடர்ந்து நீடிப்பார் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், அமெரிக்க நாடாளுமன்றக் குழுக்கள் இந்த விவகாரம் குறித்து ஜென்சன் ஹுவாங் நேரில் விளக்கமளிக்க வேண்டும் என்று கோரி வருகின்றன. சீன வெளியுறவுத் துறை தரப்பில் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என்றும், அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட அதிகாரப்பூர்வ கடிதம்
யார் இந்த ஆலிஸ் ஹுவாங்?
அமெரிக்க உளவுத்துறை எழுப்பிய சந்தேகம் என்ன?
நிவிடியா நிர்வாகக் குழுவின் விளக்கம்