எவ்வளவு ஆணவம்! விவேக் ராமசாமி படுதோல்வி! ஓஹியோ கவர்னர் தேர்தலில் திருப்பம்! நடந்தது என்ன?

  • நியூயார்க்: அமெரிக்காவின் ஓஹியோ மாகாண கவர்னர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரான இந்திய வம்சாவளி தொழிலதிபர் விவேக் ராமசாமி தோல்வியடைந்துள்ளார். ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட பொது சுகாதாரத்துறை மருத்துவர் ஏமி ஆக்டன் வெற்றி பெற்று புதிய கவர்னராகத் தேர்வாகியுள்ளார்.

    Advertisement

    கடந்த பல ஆண்டுகளாகக் குடியரசுக் கட்சியின் வலுவான கோட்டையாக இருந்த ஓஹியோ மாகாணத்தில், ஒரு ஜனநாயகக் கட்சி வேட்பாளர் வென்றிருப்பது அமெரிக்க அரசியலில் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏமி ஆக்டன் சுமார் 50.5% வாக்குகளைப் பெற்று முன்னிலை பெற்றபோது, விவேக் ராமசாமிக்கு 46.2% வாக்குகள் மட்டுமே கிடைத்தன. இதன் மூலம் ஓஹியோவின் முதல் பெண் கவர்னர் என்ற வரலாற்றுச் சாதனையையும் ஏமி ஆக்டன் படைத்துள்ளார்.

    Advertisement

    யார் இந்த விவேக் ராமசாமி?

    விவேக் ராமசாமி அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள சின்சினாட்டியில் 1985-ஆம் ஆண்டு பிறந்தார். கழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் உயிரியல் படிப்பை முடித்து, யேல் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பையும் பயின்றவர்.

    2014-இல் 'ரோய்வாண்ட் சயின்சஸ்' என்ற பயோடெக் நிறுவனத்தைத் தொடங்கி குறுகிய காலத்திலேயே பெரும் பணக்காரர் ஆனார். புத்தகங்கள் எழுதி அமெரிக்க அரசியல் களத்தில் ஒரு தீவிர வலதுசாரி கருத்தாளராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.

    அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் தீவிர ஆதரவாளராக விளங்கும் இவர், கடந்த சில ஆண்டுகளாகவே அமெரிக்க அரசியலில் மிகவும் கவனிக்கப்படும் முகமாக உருவெடுத்தார்.

    Advertisement

    விவேக் ராமசாமியின் இந்திய பின்னணி

    விவேக் ராமசாமியின் பெற்றோர் இந்தியாவின் கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தமிழ் பேசும் குடும்பப் பின்னணியைக் கொண்டவர்கள். விவேக்கின் தந்தை கணபதி ராமசாமி பொறியாளராகவும், காப்புரிமை வழக்கறிஞராகவும் பணியாற்றினார். தாயார் கீதா ராமசாமி முதியோர் நல மனநல மருத்துவராகப் பணிபுரிந்தார்.

    இவர்கள் அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்த பிறகு விவேக் பிறந்தார். விவேக் சிறுவயதாக இருந்தபோது விடுமுறை நாட்களில் தன் பெற்றோருடன் இந்தியாவுக்கு வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவர் தன்னை ஓர் இந்துவாகவே பொதுவெளிகளில் வெளிப்படுத்திக் கொண்டவர். அமெரிக்காவில் நிலவும் சாதிய விவாதங்கள் பற்றிய பேச்சுகளிலும் அவர் அவ்வப்போது கருத்து கூறி வந்தார்.

    Advertisement

    யார் இந்த ஏமி ஆக்டன்?

    ஏமி ஆக்டன் ஒரு பொது சுகாதார மருத்துவர். கொரோனா பெருந்தொற்று காலத்தின்போது ஓஹியோ மாகாண சுகாதாரத் துறையின் தலைவராகப் பணியாற்றினார். தொலைக்காட்சிகளில் தோன்றி மக்களுக்குப் புரியும் வண்ணம் எளிமையாகவும், பதற்றமின்றியும் அறிவியல் உண்மைகளைப் பேசி வழிகாட்டியதன் மூலம் ஓஹியோ மக்களின் நன்மதிப்பைப் பெற்றார். அரசியல் பின்புலம் அதிகம் இல்லாத ஒரு நடுத்தர குடும்பத்து மருத்துவராக இருந்தவர், அமைதியான மற்றும் மக்களைக் கவரும் பிரச்சாரத்தின் மூலம் விவேக் ராமசாமியை வீழ்த்தியுள்ளார்.

    விவேக் ராமசாமியின் முந்தைய தோல்வி

    விவேக் ராமசாமிக்கு இது முதல் தேர்தல் தோல்வி அல்ல.

    Advertisement

    2024-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராகப் போட்டியிட விவேக் களம் இறங்கினார். டிரம்ப் உள்ளிட்ட பல மூத்த தலைவர்களுக்கு எதிராக ஆரம்பத்தில் தீவிர பிரச்சாரம் செய்தார். மேடைகளில் சரளமாகப் பேசி பலரது கவனத்தை ஈர்த்தாலும், ஐயோவா மாகாணத்தில் நடந்த உள்கட்சி வாக்கெடுப்பில் மிகக் குறைவான வாக்குகளை மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தார். அதன்பின் அதிபர் போட்டியில் இருந்து விலகி டொனால்ட் டிரம்பிற்கு ஆதரவு தெரிவித்தார். அதிபர் கனவு பாதியிலேயே முடிந்த நிலையில், இப்போது தன் சொந்த ஊரான ஓஹியோவிலேயே கவர்னர் தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் தோல்வியைச் சந்தித்துள்ளார்.

    Advertisement

    பேச்சில் திமிரும் அகந்தையும்: மக்கள் மத்தியில் எழுந்த அதிருப்தி

    விவேக் ராமசாமியின் பேச்சுத் திறன்தான் ஆரம்பத்தில் அவருக்குப் புகழைத் தேடித்தந்தது. ஆனால், அதே பேச்சு பின்னர் அவருக்குப் பாதகமாகவும் அமைந்தது. விவாத மேடைகளில் பிற தலைவர்களைத் தொடர்ந்து இடைமறித்துப் பேசுவது, மற்றவர்களை விடத் தானே புத்திசாலி என்பது போன்ற தோரணையை வெளிப்படுத்துவது போன்றவற்றை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

    அரசியல் கொள்கைகளை விவாதிப்பதை விட்டுவிட்டு, எதிராளிகளின் சொந்த வாழ்க்கையைக் கடுமையாக விமர்சித்தார். ஓஹியோ தேர்தலின் கடைசி கட்டத்தில், ஏமி ஆக்டனின் தாயாரைக் கொண்டு அவரது குடும்பப் பிரச்னையை விளம்பரப்படுத்தி வாக்கு சேகரிக்க முயன்றார். இது குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்களாலேயே கடுமையாகக் கண்டிக்கப்பட்டு, பின்னர் அந்த விளம்பரம் திரும்பப் பெறப்பட்டது.

    மேடைக்கு மேடை அவசரமாகப் பேசுவதும், தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பது போலப் பேசுவதும் நடுத்தர மக்களிடையே "இவர் ஒரு அகந்தை பிடித்தவர்" என்ற எண்ணத்தை ஆழமாக விதைத்தது.

    ஏன் விவேக் ராமசாமி ஒரு தோல்வியடைந்த அரசியல்வாதியானார்?

    ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக வலம் வந்த விவேக் ராமசாமி, அரசியலில் தொடர் தோல்விகளைச் சந்திக்க முக்கியக் காரணங்கள்: விவேக் மக்களுடன் நேரடியாக இணைந்து பணியாற்றிய எளிய மக்கள் தலைவர் அல்ல. அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ளாமல், சமூக ஊடகங்களிலும் கார்ப்பரேட் மேடைகளிலும் மட்டுமே அதிவேகமாகப் பேசியது பொதுமக்களை அவரிடம் இருந்து அந்நியப்படுத்தியது.

    அரசு அமைப்புகளையே ஒட்டுமொத்தமாகக் கலைக்க வேண்டும், அரசுப் பள்ளிகளைத் தனியார் மயமாக்க வேண்டும் போன்ற அதிரடியான பேச்சுகள் சாதாரணக் குடும்பத்தினருக்குப் பயத்தை மட்டுமே தந்தது.

    டொனால்ட் டிரம்பின் தீவிர பாணியைப் பின்பற்றினாலும், குடியரசுக் கட்சியின் பாரம்பரிய வாக்காளர்கள் பலரும் இவரை முழுமையாக நம்பவில்லை. இந்திய வம்சாவளி அடையாளமும், அதிதீவிர வலதுசாரி பிம்பமும் இவருக்கு இரட்டைச் சுமையாக மாறியது.

    விலைவாசி உயர்வு, கல்வி, சுகாதாரம் போன்ற அன்றாட வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லாமல், தேவையற்ற அரசியல் விவாதங்களையும் வன்மத்தையும் முன்னிலைப்படுத்தியது ஓஹியோ வாக்காளர்களை ஏமி ஆக்டன் பக்கம் சாய்த்தது.

    அரசியல் என்பது வெறும் தொலைக்காட்சி விவாதங்களும் சமூக வலைத்தள பரபரப்பும் மட்டுமல்ல.. அது மக்களிடம் பணிவாக நின்று நம்பிக்கையைப் பெறுவது என்பதை விவேக் ராமசாமியின் இந்தத் தொடர் தோல்விகள் மீண்டும் உணர்த்தியுள்ளன.

    English Summary

    Ohio Governor Election Results 2026: Why Vivek Ramaswamy Lost to Amy Acton Full Analysis