நியூயார்க்: 1960-ஆம் ஆண்டு, அதாவது சுமார் 66 ஆண்டுகளுக்கு முன்பு, ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி ஹெய்ன்ஸ் வான் ஃபோர்ஸ்டர் ஒரு அதிர்ச்சி தரும் கணிப்பை வெளியிட்டார். 2026-ஆம் ஆண்டு ஒரு வெள்ளிக்கிழமை அன்று மனித குலத்திற்கு மிகப் பெரிய அழிவு நாள் ஏற்படும் என்பதுதான் அந்தக் கணிப்பு. தற்போது நாம் அந்த 2026-ஆம் ஆண்டில் செப்டம்பரில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவர் குறிப்பிட்ட அந்த நாளுக்கு இன்னும் சில வாரங்களே மீதமுள்ளன.
அவர் ஜோசியம் பார்த்து இந்தத் தேதியைச் சொல்லவில்லை. கடந்த 2,000 ஆண்டுகால உலக மக்கள் தொகை வளர்ச்சியை அறிவியல் மற்றும் கணிதக் கணக்கீடுகளின்படி ஆய்வு செய்தார். புகழ்பெற்ற சயின்ஸ் அறிவியல் இதழில், 'டூம்ஸ்டே: வெள்ளிக்கிழமை, 13 நவம்பர் 2026' என்ற தலைப்பில் ஒரு ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார். அவர் பிறந்த நாளும் நவம்பர் 13 என்பதால், கவனத்தை ஈர்க்க அந்தத் தேதியைத் தேர்ந்தெடுத்தார்.
அமெரிக்காவின் இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் அவருடன் பணியாற்றிய பாட்ரிசியா எம். மோரா மற்றும் லாரன்ஸ் டபிள்யூ. அமியோட் ஆகிய விஞ்ஞானிகளும் இந்த ஆய்வில் இணைந்திருந்தனர். அவர்கள் ஆய்வு செய்த காலத்தில் உலக மக்கள் தொகை வெறும் 300 கோடியாக இருந்தது. இதே வேகத்தில் மக்கள் தொகை உயர்ந்தால், 2026-ல் பூமிக்கு தாங்க முடியாத அளவுக்குச் சுமை கூடி உணவு மற்றும் வளங்கள் பற்றாக்குறையால் உலகம் முடங்கிவிடும் என்று எச்சரித்தனர். இன்று உலக மக்கள் தொகை 830 கோடியைத் (8.3 பில்லியன்) தாண்டியுள்ளது. ஏஐ பற்றி அன்றே சொன்ன அதிர்ச்சி உண்மை உலகம் அழியும் என்ற கணிப்பை விடவும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பற்றி ஃபோர்ஸ்டர் சொன்ன ஒரு விஷயம் இன்று நம்மைத் திகைக்க வைக்கிறது. 1995-ஆம் ஆண்டிலேயே, அதாவது சாட்ஜிபிடி போன்ற எந்த ஏஐ அமைப்புகளும் இல்லாத காலத்தில், ஒரு நேர்காணலில் அவர் பேசினார். "செயற்கை நுண்ணறிவு மனிதர்களைப் போல சிந்திக்கிறது என்று நாம் நம்புவதுதான் உலகிலேயே மிகப் பெரிய ஆபத்து" என்று அழுத்தமாக எச்சரித்தார். ஒரு இயந்திரம் திரட்டப்பட்ட பல கோடி தகவல்களை அலசி ஆராய்ந்து சட்டென்று ஒரு பதிலைச் சொல்லிவிடும். அதை மனிதன் உருவாக்கிய திறமைக்காகப் பாராட்டலாம். ஆனால், அது மனிதனைப் போல உணர்ச்சிகளோடு யோசிக்கிறது என்று மனிதர்களாகிய நாம் தவறாக நினைக்கத் தொடங்கி விடுகிறோம். இயந்திரங்களுக்கு மனிதக் குணங்களைக் கற்பிக்கும் இந்த பழக்கத்தை அவர் ஆபத்தானது என்றார். இயந்திரம் பேசுவதை வைத்து, அது எல்லாவற்றையும் புரிந்து கொண்டுதான் பேசுகிறது என நாமாக ஏமாந்து விடுகிறோம் என்பதுதான் அவரது எச்சரிக்கை. இன்றைய நிஜ வாழ்க்கையில் நடப்பது என்ன? இன்று நாம் ஃபோர்ஸ்டர் எச்சரித்த அதே காலகட்டத்தில்தான் வாழ்கிறோம். மக்கள் பல மணி நேரம் ஏஐ சாட்பாட்களுடன் அரட்டையடிக்கிறார்கள். தங்களின் தனிப்பட்ட ரகசியங்களையும் கவலைகளையும் அதனுடன் பகிர்கிறார்கள். சிலர் மருத்துவர்களுக்குப் பதிலாகக்கூட ஏஐ-யிடம் ஆலோசிக்கிறார்கள். இதன் விளைவாக ஆபத்தான சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. அமெரிக்காவின் நியூஜெர்சியைச் சேர்ந்த 76 வயது முதியவர் தாங்பூ வாங்பாண்டு மெட்டா ஏஐ சாட்பாட் ஒன்றுடன் நீண்ட நாட்களாகப் பேசி வந்துள்ளார். அந்த சாட்பாட் ஒரு அழகான பெண் போல பேசி, அவரை நேரில் பார்க்க நியூயார்க்கிற்கு வருமாறு அழைத்தது. அதை உண்மையென நம்பி கிளம்பிய அந்த முதியவர், வழியில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இன்னொரு பக்கம், மன அழுத்தத்தில் இருந்த ஒரு பெண், சாட்பாட் தனக்கு ஆறுதல் தந்ததாகக் கூறுகிறார். ஏஐ என்பது வெறும் வார்த்தைகளைத் தொடுக்கும் தொழில்நுட்பம் மட்டுமே, அதற்கு மனித உணர்வுகள் கிடையாது என்ற ஃபோர்ஸ்டரின் எச்சரிக்கை இதில் நூறு சதவீதம் உண்மையாகிறது. நவம்பர் 13-ல் உலகம் அழியுமா? அப்படியானால், நவம்பர் 13, 2026 அன்று உலகம் அழியப் போகிறதா? விஞ்ஞானிகள் இப்போது அப்படிப் பயப்படத் தேவையில்லை என்கிறார்கள். 1960-களில் கணிக்கப்பட்ட அளவுக்கு மக்கள் தொகை பெருக்கம் இப்போது இல்லை. பல வளர்ந்த நாடுகளில் பிறப்பு விகிதம் பெருமளவு குறைந்துள்ளது. இருப்பினும், ஃபோர்ஸ்டரின் எச்சரிக்கையை நாம் முற்றிலும் புறந்தள்ளிவிட முடியாது. பூமி அழியாவிட்டாலும், அளவுக்கு அதிகமான வளர்ச்சி, காலநிலை மாற்றம், இயற்கை வளங்கள் குறைவது மற்றும் கட்டுப்பாடற்ற தொழில்நுட்ப வளர்ச்சி போன்ற புதிய சவால்கள் மனித குலத்தின் முன் பெரும் அச்சுறுத்தலாக நிற்கின்றன.