உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு

  • நியூயார்க்: அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான ஒப்பந்தம் இன்று (ஞாயிறு) கையெழுத்தாகவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். ஒப்பந்தம் கையெழுத்தாகும் நேரம் குறித்து சந்தேகம் எழுப்பியிருந்த ஈரானின் முந்தைய அறிவிப்புக்கு இது முற்றிலும் முரணாக அமைந்துள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த அமைதி ஒப்பந்தம், மிக முக்கியமான ஹார்முஸ் நீரிணையை உடனடியாக மீண்டும் திறக்க வழிவகுக்கும் என்று டிரம்ப் கூறினார். ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டவுடன் ஹார்முஸ் நீரிணை உடனடியாக "அனைவருக்கும் திறக்கப்படும்" என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    முன்னதாக ஞாயிற்றுக்கிழமை ஒப்பந்தம் கையெழுத்தாவது உறுதியல்ல என்று ஈரான் வெளியுறவு அமைச்சகம் சுட்டிக்காட்டிய சில மணிநேரங்களுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தாகாது என்று ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் முன்னதாகத் தெரிவித்திருந்ததாக ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த நிலையில் டிரம்ப் இந்த அறிவிப்பு வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Advertisement

    மேற்கு ஆசியாவில் கடந்த சில மாதங்களாகப் புகைந்துகொண்டிருக்கும் போர்ப் பதற்றத்திற்கு ஒருவழியாக முற்றுப்புள்ளி வைக்க, உலக நாடுகள் அனைத்தும் ஒற்றைக் காலில் காத்துக் கிடக்கின்றன. அமெரிக்கா - ஈரான் இடையேயான அந்தப் புகழ்பெற்ற அமைதி ஒப்பந்தம் எப்போது கையெழுத்தாகும் என்கிற உலக நாடுகளின் கேள்விக்கு, வழக்கம் போலத் தனது அதிரடிப் பாணியில் பதில் சொல்லியிருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.

    சனிக்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், "அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஒப்பந்தம் திட்டமிட்டபடி ஞாயிற்றுக்கிழமை (நாளை) கையெழுத்தாக உள்ளது" என்று மிக உறுதியாகக் குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார். ஆனால், இதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து வெளிவந்த தகவல்களோ, ட்ரம்பின் இந்த அவசரமான அறிவிப்பிற்கு முற்றிலும் முரணாக, உலக அரங்கில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    இது தொடர்பாகத் தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அதிபர் ட்ரம்ப், "ஈரான் அணு ஆயுதங்களை வாங்குவதையோ, தயாரிப்பதையோ அல்லது வேறு எந்த வழியிலும் அணு ஆயுதப் பொருட்களைப் பெறுவதையோ இந்த ஒப்பந்தம் நிரந்தரமாகத் தடுக்கும். இது ஈரான் அணுஆயுதமேந்தா நிலையை உறுதி செய்யும் ஒரு வலுவான சுவராக இருக்கும்" என்று கூறினார். மேலும், இந்த உடன்படிக்கையைத் தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படுவதுடன், அமெரிக்கா - ஈரான் இடையிலான உறவு, முந்தைய அரசாங்கங்களின் அணுகுமுறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    ட்ரம்ப் காட்டும் அவசரம்

    அதிபர் ட்ரம்பின் இந்த அதிரடி அறிவிப்புக்கு மிக முக்கியமான காரணம் இருக்கிறது. இந்த அமைதி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட அடுத்த கணமே, சர்வதேசப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் 'ஹார்முஸ் ஜலசந்தி' உடனடியாகத் திறக்கப்பட்டு, "அனைத்து நாடுகளின் போக்குவரத்திற்கும்" அது வழிவகை செய்யும் என்று ட்ரம்பே ஓப்பனாக ஒப்புக்கொண்டுள்ளார். உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்தில் பெரும் பங்கு வகிக்கும் இந்த வழித்தடம் திறக்கப்பட்டால் மட்டுமே உலகப் பொருளாதாரம் தப்பிக்கும் என்பதால், இந்த ஒப்பந்தத்தை ஞாயிறன்றே முடித்துவிட ட்ரம்ப் ஒற்றைக்காலில் நிற்கிறார்.

    ஈரானின் நிதானம், பின்னணியில் உள்ள இழுபறி

    ஆனால், ஈரான் தரப்போ இந்த ஒப்பந்தத் தேதி விஷயத்தில் மிகவும் நிதானமாகவும், எச்சரிக்கையாகவும் காய்களை நகர்த்துகிறது. ட்ரம்பின் அறிவிப்புக்கு சில மணி நேரங்களுக்கு முன்பாகப் பேசிய ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி (Esmaeil Baghaei), "இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தாவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு" என்று ஈரானிய அரசு ஊடகங்கள் வாயிலாகத் தெரிவித்தார்.

    Advertisement

    எனினும், பேச்சுவார்த்தைக்கான கதவுகளை ஈரான் முற்றிலும் சாத்திவிடவில்லை. "எதிர்வரும் நாட்களில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கான வாய்ப்புகளை எங்களால் மறுக்க முடியாது. மறுதரப்பில் (அமெரிக்கா) இன்னும் சில தயக்கங்கள் இருப்பதால், இப்போதே ஒரு குறிப்பிட்ட தேதியை உறுதி செய்வதில் நாங்கள் எச்சரிக்கையாக இருக்கிறோம்" என்றும் பாகாயி மனிதாபிமானத்தோடு கூடிய அரசியல் பக்குவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    திரைக்குப் பின்னால் உள்ள மர்மம்

    இரு நாடுகளின் இந்த முரண்பட்ட அறிவிப்புகள், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இன்னமும் சில முக்கியப் புள்ளிகளில் இழுபறி நீடிப்பதையே காட்டுகிறது. பாகிஸ்தான் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் தூதரக ரீதியான சமரச முயற்சியால், இந்த வரலாற்று ஒப்பந்தம் இணையவழிக் கூட்டம் மூலமாக மின்னணு முறையில் கையெழுத்தாகத் தயாராகி வருகிறது.

    Advertisement

    இந்த ஒப்பந்தத்தின்படி மூன்று முக்கிய விஷயங்கள் முன்வைக்கப்படுகின்றன:

    தற்போது நடைமுறையில் உள்ள தற்காலிகப் போர்நிறுத்தத்தை மேலும் 60 நாட்களுக்கு நீட்டிப்பது.

    சர்வதேசப் பொருளாதாரத்திற்காக ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது.

    ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த முறையான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவது.

    ஈரான் இந்த ஒப்பந்தத்தை அவசரப்படாமல் நிதானமாக அணுக நினைத்தாலும், அதிபர் ட்ரம்பின் தற்போதைய பேச்சு, ஒப்பந்தம் இன்னும் தண்டவாளத்தை விட்டு இறங்கவில்லை என்பதையே காட்டுகிறது. இரு நாடுகளும் தங்களின் எஞ்சிய கருத்து வேறுபாடுகளைக் கடந்து, ஞாயிற்றுக்கிழமை இந்த அமைதிப் பாதையில் முன்னேறிச் செல்லுமா அல்லது உலக நாடுகளின் காத்திருப்பு இன்னும் நீடிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    English Summary

    US President Donald Trump announced that an agreement between the United States and Iran is set to be signed today (Sunday). This stands in stark contrast to Iran's earlier statement, which had cast doubt on the timing of the agreement's signing.