ஏதோ பெருசா நடக்க போகுது! கேம்ப் டேவிட் பயணத்தை பாதியிலேயே முடித்து..வெள்ளை மாளிகை விரைந்த டிரம்ப்!

  • நியூயார்க்: அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பல மாதங்களாகத் தொடர்ந்து வரும் கடுமையான போர்ப் பதற்றத்தில் தற்போது ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. போரை முடிவுக்குக் கொண்டு வர ஈரான் மூன்று முக்கிய நிபந்தனைகளை அமெரிக்காவுக்கு முறைப்படி அனுப்பியுள்ள நிலையில், அமெரிக்கத் தரப்பிலும் சில எதிர்பாராத, தீவிரமான நகர்வுகள் தொடங்கியுள்ளன.

    Advertisement

    வார இறுதி விடுமுறையைக் கழிப்பதற்காக மேரிலாந்தில் உள்ள புகழ்பெற்ற அதிபர் மாளிகையான 'கேம்ப் டேவிட்' பகுதிக்குச் சென்றிருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது பயணத்தை அவசரமாகப் பாதியிலேயே ரத்து செய்துவிட்டு சனிக்கிழமை இரவே வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்குத் திரும்பியுள்ளார். முன்கூட்டியே திட்டமிடப்பட்ட பயணத்தை டிரம்ப் திடீரெனக் கைவிட்டுத் திரும்பியது சர்வதேச அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

    Advertisement

    கேம்ப் டேவிட் பயணம் பாதியில் நின்றது ஏன்?

    அதிபர் டிரம்ப் வழக்கமாக வார இறுதிகளில் கேம்ப் டேவிட் மாளிகையில் தங்கி ஓய்வெடுப்பது வழக்கம். இந்த முறையும் வெள்ளிக்கிழமை அங்கு சென்ற அவர், ஞாயிற்றுக்கிழமை வரை அங்கு தங்கியிருப்பார் என்றே வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. ஆனால், சனிக்கிழமை மாலையே அவரது அட்டவணை மாற்றப்பட்டு, 'மரைன் ஒன்' ஹெலிகாப்டர் மூலம் அவர் வெள்ளை மாளிகைக்கு அவசரமாக அழைத்து வரப்பட்டார்.

    அவர் ஏன் இவ்வளவு அவசரமாகத் திரும்பி வந்தார் என்பதற்கு வெள்ளை மாளிகை எந்தவித விளக்கத்தையும் அதிகாரப்பூர்வமாக அளிக்கவில்லை. அதே நேரத்தில், அதிபருடன் இருக்கும் ஊடகக் குழுவினருக்கும் டிரம்பைப் புகைப்படம் எடுக்கவோ அல்லது பேட்டி காணவோ உடனடியாகத் தடை விதிக்கப்பட்டது. இந்த ரகசியத்தன்மை கொண்ட திடீர் நகர்வு, ஏதோ ஒரு முக்கியமான பாதுகாப்பு அல்லது அரசியல் முடிவு எடுக்கப்பட உள்ளதையே காட்டுவதாகப் பத்திரிகையாளர்கள் கருதுகின்றனர்.

    Advertisement

    ஈரான் தூது மற்றும் டிரம்பின் முடிவு

    ஈரான் தனது போர் நிறுத்த நிபந்தனைகளைக் கத்தார் மற்றும் பாகிஸ்தான் தூதர்கள் வழியாக அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்துள்ளது. போரை அனைத்து முனைகளிலும் நிறுத்த வேண்டும், முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்களை விடுவிக்க வேண்டும், மற்றும் கடல்வழி தடைகளை நீக்க வேண்டும் என்பதே ஈரானின் கோரிக்கைகளாகும்.

    ஈரானின் உச்ச தேசியப் பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் மொஹ்சன் ரெசாயி, "நாங்கள் எங்கள் நிபந்தனைகளை அனுப்பிவிட்டோம்.. இப்போது அமெரிக்க அதிபர் டிரம்பின் பதிலுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம்" என்று வெளிப்படையாகத் தெரிவித்தார்.

    ஈரானின் இந்தத் தூது வாஷிங்டனுக்கு வந்து சேர்ந்த சில மணி நேரங்களிலேயே டிரம்ப் தனது கேம்ப் டேவிட் ஓய்வை முடித்துக் கொண்டு வெள்ளை மாளிகைக்கு விரைந்திருப்பது தற்செயலானது அல்ல என்று கூறப்படுகிறது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி, ஈரானின் நிபந்தனைகளை ஏற்பதா அல்லது நிராகரிப்பதா என்பது குறித்து விவாதிக்கவே டிரம்ப் உடனடியாக வெள்ளை மாளிகை திரும்பியுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Advertisement

    விரமடையும் பதற்றமும் பாதுகாப்பு எச்சரிக்கையும்

    டிரம்ப் வெள்ளை மாளிகைக்குத் திரும்பிய அதே நேரத்தில், அமெரிக்க வெளியுறவுத்துறை மத்திய கிழக்கு நாடுகள் முழுவதற்கும் கடுமையான பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது. சவுதி அரேபியா உள்ளிட்ட பகுதிகளில் எந்த நேரத்திலும் நிலைமை மோசமடையலாம் என்றும், அங்குள்ள அமெரிக்கர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான கதவைத் திறந்து வைத்திருந்தாலும், தங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை என்றால் எதற்கும் தயாராக உள்ளதாக எச்சரித்துள்ளது. மறுபுறம் அமெரிக்காவின் நீண்ட தூர குண்டுவீச்சு விமானங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    விடுமுறை ஓய்வை ஒதுக்கிவிட்டு வெள்ளை மாளிகைக்குத் திரும்பியுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப், அமைதி ஒப்பந்தத்திற்குச் சம்மதம் தெரிவிப்பாரா அல்லது போரைத் தீவிரப்படுத்தும் புதிய ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிடுவாரா என்பதே இப்போது உலகம் முழுவதும் எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வியாகும்.

    English Summary

    Trump Abruptly Cuts Camp David Trip Short as Iran Sets Peace Terms: Inside the Midnight White House Move