பெரிய விஷயத்தை திட்டமிட்டு வருகிறேன்.. நெருக்கமானவர்களிடம் சொன்ன டிரம்ப்.. ஈரான் கேம் ஓவர்?

  • நியூயார்க்: ஈரான் உடனான தீவிரப் போர் முடிவுக்கு வந்த பிறகு, மத்திய கிழக்கு பிராந்தியத்தின் அரசியலையே முற்றிலுமாக மாற்றியமைக்கும் ஒரு மெகா திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தயாரித்து வருகிறார். இதனை அமெரிக்காவின் பிரபல செய்தி ஊடகமான ஆக்சியோஸ் விரிவாக வெளியிட்டுள்ளது.

    Advertisement

    தனது அதிகாரப்பூர்வ வட்டாரங்களிடம் பேசிய டிரம்ப், மத்திய கிழக்கு நாடுகளுக்காகத் தாம் மிகப்பெரிய ஒன்றை திட்டமிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    டிரம்ப் தலைமையிலான நிர்வாகத்தின் முக்கிய ஆலோசகர்கள் மற்றும் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் இணைந்து இந்த வியூகத்தை உருவாக்கி வருகின்றனர். இதன் முக்கிய நோக்கம், ஈரானின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துவது மற்றும் இஸ்ரேலுக்கும் அதன் அண்டை அரபு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவுகளை மேலும் பலப்படுத்துவது ஆகும்.

    டிரம்பின் திட்டத்தில் உள்ள 3 முக்கிய அம்சங்கள்

    டிரம்ப் அரசு தயாரித்து வரும் புதிய வரைவுத் திட்டம் மூன்று முதன்மையான தூண்களை அடிப்படையாகக் கொண்டது:

    1. ஈரானுக்கு எதிரான கூட்டணி:

    அமெரிக்காவின் நட்பு நாடுகளை ஒரே அணியில் இணைத்து, ஈரானுக்கு எதிரான ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்குவது இதன் முதல் கட்டம். இந்த முழு அமைப்பிற்கும் வாஷிங்டன் தலைமை தாங்கி, பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்கும்.

    Advertisement

    2. நீண்டகாலப் போர்களை முடிவுக்குக் கொண்டுவருதல்:

    2023 அக்டோபர் 7 தாக்குதலுக்குப் பிறகு உருவான பதற்றங்களைத் தணிப்பது அடுத்த இலக்கு. இதில் காசா பகுதிக்கான டிரம்பின் அமைதித் திட்டத்தை முன்னெடுப்பது, இஸ்ரேல் மற்றும் சிரியா இடையே பாதுகாப்பு ஒப்பந்தத்தை உருவாக்குவது மற்றும் இஸ்ரேல்-லெபனான் இடையேயான தற்போதைய உடன்பாட்டைச் செயல்படுத்துவது ஆகியவை அடங்கும்.

    3. சவுதி அரேபியா - இஸ்ரேல் வரலாற்று ஒப்பந்தம்:

    'ஆபிரகாம் ஒப்பந்தங்களை' மேலும் விரிவுபடுத்துவதே டிரம்பின் மிகப்பெரிய இலக்காகும். இஸ்ரேலுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையே நேரடி தூதரக உறவை ஏற்படுத்துவது, டிரம்பின் பதவிக்காலத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சர்வதேச சாதனையாக அமையும் என்று அமெரிக்க அதிகாரிகள் கருதுகின்றனர்.

    Advertisement

    இஸ்ரேல் தேர்தல் ஏற்படுத்தக்கூடிய சவால்கள்

    இந்த மாபெரும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சில அரசியல் தடைகளும் நிலவுகின்றன. இஸ்ரேலில் அக்டோபர் 27 அன்று பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதேபோல், அமெரிக்காவிலும் நவம்பர் மாதம் நாடாளுமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

    இஸ்ரேல் தேர்தலில் வெற்றிபெற்று அமையவிருக்கும் புதிய அரசு, அமெரிக்காவின் இந்த புதிய திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று டிரம்ப் நிர்வாகம் விரும்புகிறது. எனினும், இஸ்ரேலிய அரசியலில் ஏற்படும் முடிவுகளுக்காக டிரம்ப் காத்திருக்க மாட்டார் என்றும், தேர்தல் முடிவுகளில் தெளிவற்ற நிலை உருவானாலும் கூட அவர் தனது திட்டத்தை முன்னெடுத்துச் செல்வார் என்றும் சில அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    Advertisement

    இன்னும் இறுதி செய்யப்படாத வரைவு

    இந்த வியூகம் தொடர்பாக டிரம்ப் தனது மூத்த ஆலோசகர்களுடன் கடந்த சில வாரங்களில் இரண்டு முக்கிய ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியுள்ளார். பல யோசனைகள் விவாதிக்கப்பட்டாலும், திட்டம் முழுமையாக முடிவடைய இன்னும் சில வாரங்கள் தேவைப்படலாம் என்று இந்த விவகாரத்தை நன்கு அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    போருக்குப் பிறகு மத்திய கிழக்கில் உள்ள பல சிக்கல்களை ஒன்றாக இணைத்து ஒரு புதிய திட்டத்தை உருவாக்குவதே இதன் நோக்கம் என்றாலும், பிராந்தியத்தில் உள்ள அனைத்து அமெரிக்க நட்பு நாடுகளும் இதற்கு முழு சம்மதம் தெரிவிக்குமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

    English Summary

    Trump Middle East Plan: US President Preparing "Something Much Bigger" After Iran War