நியூயார்க்: அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே போர் பதற்றம் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஹார்முஸ் கடல் பகுதியில் உள்ள ஈரானின் ராணுவ நிலைகள் மீது அமெரிக்கா மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தியுள்ளதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதற்குப் பதிலடியாக, ஈரானும் அமெரிக்காவுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
இரு நாடுகளும் மாறி மாறித் தாக்கி வரும் நிலையில், ஈரானின் உச்ச பாதுகாப்பு கவுன்சில் அதிகாரி மொஹ்சன் ரெசாய் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "அமெரிக்கா தனக்குத்தானே ஒரு நரகத்தை உருவாக்கிக் கொண்டுள்ளது. அதிலிருந்து அவர்களால் ஒருபோதும் தப்ப முடியாது. போர்க்களத்திலும், உலக அரசியலிலும், பொருளாதார ரீதியாகவும் ஈரானின் புதிய திட்டம் அமெரிக்காவின் பலத்தையே அசைத்துப் பார்க்கும்" என்று கடுமையாக எச்சரித்துள்ளார். ஈரான் மீது அமெரிக்கா ஏன் தாக்குதல் நடத்தியது என்பது குறித்து டொனால்ட் ட்ரம்ப் விளக்கம் அளித்துள்ளார். உலக அளவில் சரக்குக் கப்பல்கள் செல்லும் முக்கியமான கடல் பாதையான ஹார்முஸ் பகுதியில், ஈரான் கடற்படை வெடிகுண்டுகளை (Sea Mines) வைக்க முயன்றதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதுபற்றி பேசிய ட்ரம்ப், "நாங்கள் இப்போது பேசிக் கொண்டிருக்கும் போதே, ஈரானிய நிலைகள் மீது அமெரிக்கப் படைகள் தீவிரமாகத் தாக்கி வருகின்றன. கடலில் வெடிகுண்டுகளை வைக்க ஈரான் முயன்றது. அதற்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதலை நடத்தினோம். இப்போது அந்தக் கடற்பகுதியில் எந்த வெடிகுண்டும் இல்லை; அவை அனைத்தும் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டன. மேலும், ஜோர்டானில் உள்ள எங்கள் ராணுவ முகாமை நோக்கி ஈரான் 8 ஏவுகணைகளை வீசியது. அவை அனைத்தையும் நடுவானிலேயே எங்கள் படைகள் சுட்டு வீழ்த்திவிட்டன," என்றார். மேலும், ஈரான் இதற்குப் பதிலடி தர நினைத்தால், அதைவிடக் கடுமையான தாக்குதலைச் சந்திக்க நேரிடும் என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்காவின் மத்திய ராணுவப் பிரிவு வெளியிட்டுள்ள தகவலில், ஹார்முஸ் கடலில் செல்லும் வர்த்தகக் கப்பல்களுக்கும், அங்குள்ள அமெரிக்கப் படை வீரர்களுக்கும் ஈரான் தொடர்ந்து அச்சுறுத்தல் கொடுத்து வந்ததால் இந்தத் தாக்குதலை நடத்தியதாகத் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த அதிரடித் தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது ஈரான் பதிலடி கொடுத்ததாகக் கூறியுள்ளது. ஜோர்டான், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரைன் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது. தங்களைத் தற்காத்துக் கொள்ளவே இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஈரான் கூறியுள்ளது. மேலும், ஈரான் மீது தாக்குதல் நடத்த தங்கள் நாட்டு இடத்தை அமெரிக்கா பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று பக்கத்து நாடுகளுக்கும் ஈரான் கோரிக்கை வைத்துள்ளது. உலகின் மிக முக்கியமான எண்ணெய் வர்த்தகப் பாதையில் இந்த மோதல் தீவிரமடைந்துள்ளதால், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.உங்களால் தப்ப முடியாது - ஈரானின் எச்சரிக்கை
தாக்குதலுக்கு ட்ரம்ப் சொன்ன காரணம்
அமெரிக்க ராணுவம் கொடுத்த விளக்கம்
அமெரிக்க முகாம்கள் மீது ஈரான் பதிலடி