நீலகிரி: குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையே பர்லியார் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட மண் சரிவில் இன்று அரசுப் பேருந்து சிக்கிய நிலையில், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் தாலுகாவுக்கு உட்பட்ட பர்லியாரில் அதிகபட்சமாக 25 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மேட்டுப்பாளையம் - ஊட்டி மலைப் பாதையில் கனமழை காரணமாக பல இடங்களில் சாலைகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கோத்தகிரி செல்லும் சாலையிலும் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் செல்லும் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பர்லியார் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் மண் சரிவில் அரசுப் பேருந்து சிக்கியது. அரசு பேருந்து, ஓட்டுநர், நடத்துநர், பயணிகள் என பேருந்தில் பயணித்த 8 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. திடீர் மண் சரிவில் அரசு பேருந்து சிக்கி மேற்பகுதி முற்றிலும் நசுங்கிய நிலையில், தீயணைப்பு படை வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வருகை தந்து மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தினர். பேருந்தில் இருந்த பயணிகள் 6 பேர், ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்டோர் பத்திரமாக வெளியே மீட்கப்பட்டுள்ளனர். காயம் மற்றும் பாதிப்புகள் தொடர்பான கூடுதல் விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை.