சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி வருவதாக விமர்சனங்கள் ஏற்கனவே உள்ளன.,. . செஞ்சி சிறுமி காணாமல் போன விவகாரத்துக்கும் இன்னும் விடை கிடைக்கவில்லை... இப்படி குற்ற சம்பவங்கள் தொடர்பாக கேள்விகள் எழும் நிலையில், மழை பாதிப்புகளை கையாள்வதிலும் அரசு நிர்வாகத்தின் செயல்பாடு குறித்த விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, ஆபத்து நேரத்தில் அரசு இயந்திரம் எந்த அளவுக்கு வேகமாக செயல்படுகிறது என்ற கேள்வி இப்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்தது. சாலைகளில் மழைநீர் தேங்கியது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதையடுத்து அமைச்சர்கள் ஆனந்த், மரியா வில்சன் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழக அமைச்சர்கள் அப்போது அமைச்சர் ஆனந்த், மழையால் முறிந்து விழுந்த மரத்தை இயந்திரம் மூலம் வெட்டி அகற்றினார். இன்னொருபுறம் அமைச்சர் மரியா வில்சன், ஆய்வுக்கு சென்ற இடத்தில் ரோட்டோர கடையில் உணவு சாப்பிட்டார். பிறகு செய்தியாளர்களை சந்தித்தபோது, தோசை சூப்பராக இருந்தது என்றார்.. இந்த சம்பவங்கள் அரசியல் வட்டாரத்தில் விமர்சனங்களைப் பெற்றன. "மரம் அறுக்கவும் தெரியவில்லை, மழைநீரை அகற்றவும் தெரியவில்லை. ஆனால், எவ்வளவு கான்ஃபிடன்ட்டாக முட்டை தோசைக்கு ரிவ்யூ கொடுத்துவிட்டுப் போகிறார் பாருங்கள்" என்ற ரீதியில் கிண்டல்கள் எழுந்தன. ஜெயிலர் 2 படத்தின் மூர்த்தி அண்ணன் கேரக்டருடன் ஒப்பிட்டும் சிலர் இதனை விமர்சித்தனர். அமைச்சர்கள் நேரில் சென்று ஆய்வு செய்வது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைத்ததா? சாலைகளில் தேங்கிய தண்ணீர் எவ்வளவு விரைவாக அகற்றப்பட்டது? மக்களின் இயல்பு வாழ்க்கை எப்போது திரும்பியது? என்பதுதான் முக்கியம். ஆய்வு நடத்துவதுடன் நின்றுவிடாமல், அதற்குப் பிறகு அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பதையும் பார்க்க வேண்டியிருக்கிறது. ஊட்டி சாலை நிலச்சரிவு.. என்ன நடந்தது? இந்தச் சூழலில்தான் நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவமும் கவனம் பெற்றுள்ளது. நேற்று இரவு பெய்த கனமழையால் குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பர்லியார் பகுதியில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த வழியாகச் சென்ற பல வாகனங்கள் சிக்கிக்கொண்டன. இன்று காலை ஊட்டியில் இருந்து பர்லியார் நோக்கி வந்த அரசு பஸ்ஸும் திடீரென ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி கடுமையாக சேதமடைந்தது. பஸ்ஸிலிருந்த 6 பேரும் பத்திரமாக வெளியேறினர். கண்டக்டரும, டிரைவரும், மீட்கப்பட்டனர். கோத்தகிரி செல்லும் சாலையிலும் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதால், மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரிக்குச் செல்லும் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. நீலகிரி மண் சரிவு நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு கனமழை காரணமாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில், மலைப்பாதைகளில் அடுத்தடுத்து மண் சரிவுகள் ஏற்பட்டது பெரும் சவாலாக மாறியது. தேசிய மீட்புப் படையினர், வருவாய்த் துறையினர், நெடுஞ்சாலைத் துறையினர் ஆகியோர் சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் போக்குவரத்தைச் சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இருந்தாலும், இங்கேதான் ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது... கனமழை எச்சரிக்கை ஏற்கனவே விடுக்கப்பட்டிருந்த நிலையில், மலைப்பாதைகளில் ஆபத்தான பகுதிகள் எவை, எங்கெல்லாம் போக்குவரத்தைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டும், எந்தெந்த வழிகளில் வாகனங்களை அனுமதிக்கலாம் என்பதைக் கண்காணிக்க உரிய ஏற்பாடுகள் இருந்தனவா? ஒருவேளை முன்கூட்டியே எச்சரிக்கை அளிக்கப்பட்டிருந்தால், ஆபத்தான பகுதிகளில் வாகனப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தியிருக்க முடியுமா? நிலச்சரிவு ஏற்பட்ட இடங்கள் குறித்த தகவல்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எவ்வளவு விரைவாக சென்றன? பாதிக்கப்பட்ட வாகனங்கள் குறித்து தகவல் கிடைத்ததும் மீட்புப் பணிகள் உடனடியாகத் தொடங்கினவா? இத்தகைய கேள்விகளுக்கு விடை தேவைப்படுகிறது. அரசு இயந்திரம் எங்கே? இயற்கை சீற்றங்கள் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம்... குறிப்பாக, கனமழை பெய்யும்போது மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் நிறையவே உண்டு.. இதுபோன்ற நேரங்களில் எந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது, எந்தப் பகுதியில் வாகனங்கள் சிக்கியுள்ளன, எங்கு உடனடியாக மீட்புப் பணிகளைத் தொடங்க வேண்டும் என்பதைக் கண்டறிவது மிகவும் அவசியம். மழை எச்சரிக்கை மட்டும் போதுமா மழை எச்சரிக்கை விடுப்பது மட்டுமே இங்கு போதாது. அந்த எச்சரிக்கைக்கு ஏற்ப அதிகாரிகள் செயல்படுகிறார்களா என்பதுதான் முக்கியம். குறிப்பாக, மலைப்பாதைகளில் செல்லும் அரசு பஸ்களின் நிலை குறித்து சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உடனுக்குடன் தகவல் கிடைக்க வேண்டும். பஸ் செல்லும் பாதையில் ஆபத்து ஏற்பட்டால், மாற்றுப் பாதையில் திருப்பிவிடுவது அல்லது பயணத்தைத் தற்காலிகமாக நிறுத்துவது போன்ற முடிவுகளைச் சரியான நேரத்தில் எடுக்க வேண்டும். அதேபோல், நிலச்சரிவு ஏற்பட்டதும் அந்த பகுதியில் சிக்கியுள்ள வாகனங்கள் குறித்த தகவல்களை விரைவாகச் சேகரிக்க வேண்டும். பஸ்1ல் பயணித்தவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பதை உறுதி செய்து, தேவைப்பட்டால் உடனடியாக மீட்பு பணிகளை தொடங்க வேண்டும்... இதற்காக போலீஸ், வருவாய்த் துறை, நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்துத் துறை என எல்லாருமே ஒன்றாக இணைந்து, சரியான தகவல் பரிமாற்றத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். வெளிப்படைத்தன்மை தேவை ஒரு அரசு பஸ், ஆபத்தில் சிக்கும்போது, அதில் பயணித்தவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பதை உடனடியாக கண்டறிய வேண்டியிருக்கிறது.. அதற்கான தகவல் தொடர்பு ஏற்பாடுகள் எந்த அளவுக்கு செயல்படுகின்றன என்பதும் முக்கியம். இத்தகைய சம்பவங்கள் நிகழும்போது, மீட்புப் பணிகள் எப்போது தொடங்கின, பயணிகள் எப்போது மீட்கப்பட்டனர், போக்குவரத்தை சீரமைக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது போன்ற விவரங்கள் வெளிப்படையாக தெரிவிக்கப்பட வேண்டும். அமைச்சர்கள் நேரில் சென்று ஆய்வு செய்வது முக்கியம்தான்.. ஆனால், அதைவிட முக்கியம், களத்தில் இருக்கும் அதிகாரிகள் சரியான நேரத்தில் செயல்படுகிறார்களா என்பதுதான்... ஆய்வு நடத்துவதுடன் நிர்வாகத்தின் பணி முடிந்துவிடாது, மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதும், பாதிப்பு ஏற்பட்டால் விரைவாக மீட்பதும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும்தான் அரசு நிர்வாகத்தின் உண்மையான பொறுப்பு. நம்பிக்கை முக்கியம் தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் தொடர்பான கேள்விகள் ஒருபுறம் இருக்க, கனமழை பாதிப்புகளையும் நிலச்சரிவு போன்ற பேரிடர்களையும் கையாள்வதில் அரசு நிர்வாகத்தின் செயல்பாடு குறித்த கேள்விகளும் எழுகின்றன. இத்தகைய நேரங்களில் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்வதைவிட, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை வெளிப்படையாகக் காட்டுவதுதான் மக்களின் நம்பிக்கையைப் பெற உதவும். அரசு இயந்திரத்தின் வேகம் என்பது பேரிடர் ஏற்பட்ட பிறகு மீட்பு பணிகளை தொடங்குவதில் மட்டும் இல்லை. ஆபத்தை முன்கூட்டியே கணிப்பது, மக்களை எச்சரிப்பது, தகவல்களை சரியான நேரத்தில் பரிமாறிக்கொள்வது, உயிர்களைக் காப்பது என அனைத்திலும் அந்த வேகம் தெரிய வேண்டும். அதுதான் இப்போது எழுந்துள்ள முக்கியமான கேள்வி....!!!