நீலகிரி: "இப்படியொரு பூச்சியை நாங்கள் பார்த்ததில்லை.. அந்த பூச்சிகள் கடிப்பதில்லை.. உடம்பில் உட்காருவதால், நமைச்சல் போன்ற தொந்தரவும் கிடையாது.. சாப்பாட்டில் விழுந்து விடுகிறது.. இதனால் தண்ணீர், உணவு என அனைத்தையும் மூடி வைத்தபடி உள்ளோம்.. கதவு, ஜன்னலை திறந்தாலும் பூச்சிகள் வந்துவிடுவதால், எந்நேரமும் அவைகளையும் மூடியே வைத்துள்ளோம்" என்று நொந்து போய் நம்மிடம் சொல்கிறார்கள் நீலகிரி மாவட்ட குன்னூர் மக்கள்.. என்ன நடந்தது? நீலகிரியை சூழ்ந்த அந்த கருப்பு கூட்டம் என்ன? இதுகுறித்து ஒன்இந்தியா தமிழ் களத்தில் சேகரித்த தகவல்களை இங்கே பார்ப்போம்..!!
நீலகிரி மாவட்டம், குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட சேலாஸ் பகுதியில், கடந்த சில நாட்களாகவே பூச்சிகள் தொல்லை அதிகரித்தபடி உள்ளது.. அங்குள்ள குடியிருப்புப் பகுதிகளிலும், கடைத்தெருக்களிலும், சிறிய அளவிலான கருப்பு நிறப் பூச்சிகள் ஆயிரக்கணக்கில் திரண்டு வட்டமடிக்க தொடங்கியுள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு குறைந்த எண்ணிக்கையில் தென்பட்ட இந்த பூச்சிகளின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் கட்டுப்பாடற்ற முறையில் அதிகரித்து, அந்த மக்களின் இயல்பு வாழ்க்கையையே முடக்கிப்போடும் அளவுக்கு சென்றுவிட்டது. பகல் மற்றும் இரவு என எந்த நேரமும், கூட்டம் கூட்டமாக இந்த சின்னஞ்சிறு கருப்பு பூச்சிகள் படையெடுத்துள்ளன.. பொதுமக்கள் நடமாட முடியாத அளவுக்கு அவர்களின் கண்கள், காதுகள் மற்றும் உடல் பகுதிகளில் இந்த பூச்சிகள் வந்து மொய்க்கின்றன. வீடுகளுக்குள் நிம்மதியாக சமைத்துச் சாப்பிடுவதற்கோ, தாகத்திற்கு தண்ணீர் குடிப்பதற்கோ கூட முடியாத அளவிற்கு உணவுப் பொருட்களிலும், குடிநீரிலும் பூச்சிகள் விழுந்து விடுகின்றன. இதனால் அன்றாட அத்தியாவசிய தேவைகளை கூட செய்ய முடியாமல் அப்பகுதிவாசிகள் அவதிக்கு ஆளாகி விட்டனர். அதேபோல மார்க்கெட் பகுதிகளிலும் இந்த பூச்சிகளின் படை புகுந்துள்ளது.. கடைகளுக்குள் பூச்சிகள் மொய்ப்பதால் வியாபாரிகளால் கடையை கவனிக்க முடியவில்லை.. இதனால் எரிச்சலடைந்த வியாபாரிகள், வேறு வழியின்றி தங்கள் கடைகளை அடைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.. இந்த சிக்கலுக்கு உள்ளாட்சி நிர்வாகமும், அதிகாரிகளும் உடனடியாகத் தீர்வு காணாவிட்டால், மிகப்பெரிய அளவிலான போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் சேலாஸ் பகுதி வியாபாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். இதற்கு பிறகே உள்ளாட்சி நிர்வாகம் அதிரடியில் இறங்கியிருக்கிறது.. பூச்சிகளை தடுப்பதற்கான நடவடிக்கையையும் துரிதமாக கையிலெடுத்துள்ளது. குன்னூரில் இந்த பூச்சி தொல்லை அதிகரித்துள்ளதாக தெரியவந்ததும், உடனடியாக குன்னூர் நகராட்சி சுகாதார துறையினரிடம் இதுகுறித்து நாம் கேட்டோம். அவர்கள் நம்மிடம் பேசும்போது, "குன்னூர் நகர பகுதியில் அப்படி எந்த பிரச்சனையும் இல்லை.. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே சுற்றுவட்டார மக்களிடம் இருந்து புகார்கள் வந்தன.. அதனடிப்படையில், பூச்சிகள் அதிகம் காணப்படும் பகுதிகளில் கொசுமருந்து அடிக்கும் வாகனங்களை கொண்டு புகை தெளிக்கும் பணிகளும், பிளீச்சிங் பவுடர் தெளிக்கும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. இந்த நடவடிக்கை மூலம் பூச்சிகளின் படையெடுப்பை முழுமையாக ஒழிக்க முடியாவிட்டாலும், அவற்றின் பரவலை ஒரு அளவுக்குக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளோம்" நகராட்சி நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள டாக்டர்களிடம் விசாரித்தபோது, "இந்த பூச்சிகளால் பெரிய அளவிலான நச்சுப் பாதிப்போ அல்லது பூச்சிக்கடியோ ஏற்பட்டு இதுவரை எந்த நோயாளியும் மருத்துவமனைக்கு வரவில்லை என்று தெரிவித்துள்ளனர். நகரின் மையப் பகுதிகளில் இந்த பாதிப்பு இல்லை என்றும், மஞ்சூர் செல்லும் பாதையிலேயே ஒரு சில இடங்களில் இந்த பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுவதாகவும் மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். எனினும், குன்னூர் நகராட்சிக்குட்பட்ட சேலாஸ் என்ற பகுதியில்தான் இந்த பூச்சிகளின் தொல்லை அதிகரித்ததாக கூறப்பட்டதால், அந்த சேலாஸ் பகுதி மக்களிடமே நாம் தொடர்பு கொண்டு பேசினோம்.. அவர்கள் நம்மிடம் சொன்னபோது, "இந்த பூச்சி தொல்லை எங்களுக்கு 20 நாட்களாகவே உள்ளது.. காலையில் இருந்து சாயங்காலம் வரை பெரிதாக எதுவும் இல்லை.. சாயங்காலம் லைட் போட்டதுமே பூச்சிகள் வந்துவிடுகின்றன.. அதிலும் ஆயிரக்கணக்கான பூச்சிகள் வந்துவிடுகின்றன. ஈசல்களை விரட்ட, எண்ணெய் பேப்பரை பல்புகளுக்கு அடியில் கட்டி தொங்கவிடுவது போல செய்தோம்.. இதனால் அந்த பூச்சிகள், எண்ணெய் பேப்பரில் ஒட்டிக் கொள்கிறது.. உடம்பில் உட்கார்ந்தால், தட்டிவிடுகிறோம்.. அது உடனே இறந்துவிடுகிறது.. ஆனால், அந்த பூச்சிகள் கடிப்பதில்லை.. உடம்பில் உட்காருவதால், நமைச்சல் போன்ற தொந்தரவும் கிடையாது.. சாப்பாட்டில் விழுந்து விடுகிறது.. இதனால் தண்ணீர், உணவு என அனைத்தையும் மூடி வைத்தபடி உள்ளோம்.. கதவு, ஜன்னலை திறந்தாலும் பூச்சிகள் வந்துவிடுவதால், எந்நேரமும் அவைகளை மூடியே வைத்துள்ளோம்.. இந்த பிரச்சனை 10, 15 நாட்களுக்கு முன்புவரை இப்படித்தான் அதிகமாக இருந்தது.. அதனால்தான் சேலாஸ் பகுதி வியாபாரிகளும் கடையடைப்பு போராட்டம் நடத்தினார்கள்.. பிறகு உளிக்கல் பேரூராட்சியில் இது தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.. பிளீச்சிங் பவுடர் தெளிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதால், இந்த நான்கைந்து நாட்களாக, பூச்சிகள் தொல்லை குறைந்துள்ளது. ஆனால், கதவு ஜன்னல்களை, உணவு பொருட்களை இப்போதும் மூடிதான் வைத்துள்ளோம்.. சாலைகளில் வாகன ஓட்டிகளும் இந்த பூச்சிகளால் தொல்லைக்கு ஆளாகிறார்கள்.. டூவீலல் ஓட்டி செல்லும்போது, கண்களில் இந்த பூச்சிகள் திடீரென வந்து மோதுகின்றன.. கார்களில் செல்லும்போது, காரின் கண்ணாடிகளை சிறிதளவு இறக்கி வைத்தாலும் கூட, பூச்சிகள் எப்படியோ உள்ளே புகுந்துவிடுகின்றன.. இது ஓட்டுநர்களின் கவனத்தை சிதறடிக்கின்றன. இதனால் சாலைகளில் வாகனப் போக்குவரத்து பெரும் சவாலாக மாறியுள்ளது. இதே பகுதியில் நாங்கள் காலம் காலமாக வாழ்ந்து வருகிறோம்.. ஆனால், இப்படியொரு பூச்சியை இதற்கு முன்பு பார்த்தது கிடையாது.. கருப்பு கலரில் பொட்டு போல உள்ளது.. இப்போதைக்கு பூச்சிகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதே தவிர, இனிமேல் வரவே வராது என்று உறுதியாக சொல்ல முடியாது" என்கிறார்கள். சேலாஸ் கிராமத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கிளிஞ்சடா என்ற பகுதியிலும், இதே பூச்சி தொல்லை இருந்துள்ளதாம்.. எனவே, அந்த கிராம மக்களிடமும் இதுகுறித்து கேட்டோம். "விளக்குகள் எங்கெல்லாம் உள்ளதோ, அங்கெல்லாம் இந்த பூச்சிகள் தேடி வந்து உட்கார்ந்து விடுகின்றன.. பெரும்பாலும் ஓடு வீடுகளில் அதிகமாக வந்து உட்காருகின்றன.. காரணம், ஓட்டு வீடுகளுக்கு மேல், விளக்குகள் கட்டி தொங்க விட்டிருப்பதால், ஆயிரக்கணக்கான பூச்சிகள் ஒரே நேரத்தில், ஒரே வீட்டின் விளக்குகளில் படிந்து விடுகின்றன.. ஒருநாள் மட்டுமே இந்த பூச்சிகள் உயிர் வாழ்கின்றன.. மாலையில் வந்து உட்கார்ந்தால், காலையில் அனைத்துமே வீட்டு வாசல்களில் இறந்து கிடக்கின்றன.. இவை இறந்ததுமே, ஒருவித வாடை வருகிறது.. அதனால், தினந்தோறும் காலையில் வீட்டு வாசல்களை டெட்டால் தெளித்து சுத்தம் செய்ய வேண்டியிருக்கிறது. மாவட்ட கலெக்டர் வரை சென்று, இதுதொடர்பான நடவடிக்கை எடுக்கும்படி மனு தந்தோம்.. இப்போது இந்த பூச்சிகள் வருகை குறைந்துள்ளன" என்கிறார்கள். அதேபோல வனச்சரக அலுவலரிடமும் தொடர்பு கொண்டு இதுகுறித்து கேட்டோம்.. இதுவரை இந்த பூச்சிகள் தொடர்பான எந்தவொரு மனுவும் தங்களுக்கு வரவில்லை, அது தொடர்பாக புகார் எதுவும் பதிவாகவில்லை என்றும், உறுதி செய்துள்ளனர்....!!நீலகிரியில் மர்மப் பூச்சி
குன்னூர் மார்க்கெட்
கருப்பு கலர் பூச்சிகள்
குன்னூர் நகராட்சி
சாப்பிட முடியல, தண்ணீர் குடிக்க முடியல
வண்டி ஓட்ட முடியல
வாசல்களில் இறந்து கிடக்கும் பூச்சிகள்