ஊட்டி: அடர்ந்த காட்டுக்குள் நடந்தே சென்று பழங்குடியின மக்களைச் சந்திப்பது, அவர்களுடன் சேர்ந்து நடனமாடுவது என தொடர்ந்து அவர்களுடன் நெருக்கம் காட்டி வருகிறார் தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு. அந்த வகையில், இன்றைய தினம் உதகை அருகே உள்ள பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிக்குச் சென்ற அவர், மாணவர்களின் கல்வி மற்றும் உணவு வசதிகளை நேரில் ஆய்வு செய்துள்ளார்.
பழங்குடியின மக்களின் வாழ்க்கை நிலை, அடிப்படை வசதிகள், அரசு நலத்திட்டங்கள் அவர்களைச் சென்றடைகின்றனவா என்பதை அறிய அமைச்சர் வன்னி அரசு தொடர்ந்து நேரடி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
கடந்த செப்டம்பர் மாதம் நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலையில் வசிக்கும் காணி பழங்குடியின மக்களைச் சந்திப்பதற்காக அடர்ந்த வனப்பகுதிக்குள் நடந்தே சென்றார். அங்குள்ள மக்களிடம் அவர்களின் தேவைகள், குறைகள் குறித்து கேட்டறிந்ததுடன், அரசு திட்டங்கள் எந்த அளவுக்குப் பயனளிக்கின்றன என்பதையும் ஆய்வு செய்தார். இதேபோல், கடந்த அக்டோபர் மாதம் வால்பாறை பகுதியில் உள்ள பழங்குடியின கிராமங்களுக்கும் நேரில் சென்றார். அங்குள்ள மக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து, அவர்களுக்குத் தேவையான வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது பழங்குடியின மக்களுடன் இணைந்து நடனமாடியும் மகிழ்ந்தார். இது தொடர்பான வீடியோக்கள், சோஷியல் மீடியாவில் வெளியாகி பெரும் கவனத்தை பெற்றிருந்தன. இதற்கிடையே, பழங்குடியின மக்களுக்கு உரிய சாதிச் சான்றிதழ்கள் கிடைப்பதிலும் அரசு கவனம் செலுத்தி வருகிறது. அவர்களுக்குத் தேவையான சான்றிதழ்களை வழங்குவதற்கு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் வன்னி அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்த வரிசையில், இப்போது நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள பொக்காபுரம் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிக்கு அமைச்சர் வன்னி அரசு திடீரெனச் சென்றார். அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருடன் பள்ளிக்குச் சென்ற அவர், அங்குள்ள வகுப்பறைகள் மற்றும் அடிப்படை வசதிகளைப் பார்வையிட்டார். தொடர்ந்து மாணவர்களிடம் அவர்களின் படிப்பு, விடுதியில் வழங்கப்படும் வசதிகள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் முறையாகக் கிடைப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அங்கேயே அறிவுறுத்தினார். பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தைத் தெரிந்துகொள்ளவும் அமைச்சர் ஆர்வம் காட்டினார். இதற்காக மாணவர்களுடன் உட்கார்ந்து அவர்களுடன் சேர்ந்து மதிய உணவு சாப்பிட்டார். உணவின் சுவை, தரம் எப்படி இருக்கிறது என்றும் மாணவர்களிடம் கேட்டறிந்தார். காட்டுப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்களை நேரில் சந்திப்பதில் தொடங்கி, அவர்களின் கிராமங்கள், குழந்தைகள் படிக்கும் பள்ளிகள் வரை சென்று ஆய்வு செய்து வருவது அமைச்சரின் செயல்பாடுகளில் கவனம் பெற்றுள்ளது.. அமைச்சரின் இந்த ஆய்வு தொடர்பான போட்டோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன..!!வன்னி அரசு - நெல்லை, வால்பாறை
பள்ளியில் திடீர் ஆய்வு
மாணவர்களுடன் மதிய உணவு