எரியுதடி மாலா.. ஐரோப்பாவை வாட்டும் கொடூர வெப்பம்.. ஏசி இல்லை, ஃபேன் இல்லை.. தவிக்கும் இந்தியர்கள்!

  • பாரீஸ்: ஐரோப்பா முழுவதும் வரலாறு காணாத வெப்ப அலை நிலவி வரும் நிலையில், அங்கு பூர்வீகமாக வசிக்கும் மக்கள் கடும் இன்னலை சந்தித்து வருகின்றனர். அவர்கள் மட்டும் அல்லாமல், அங்கு வசிக்கும் இந்தியர்களையும் கடுமையாக பாதித்துள்ளது. குறிப்பாக ஜெர்மனி மற்றும் போலந்தில் வசிக்கும் ஒடிசாவைச் சேர்ந்த இந்தியர்கள், "இந்தியாவில் வெப்பத்தை சமாளிப்பது எளிது. ஆனால் ஐரோப்பாவில் அதற்கான வசதிகள் இல்லாததே மிகப்பெரிய சிக்கலாக உள்ளது" என்று வேதனை தெரிவிக்கின்றனர்.

    Advertisement

    கடந்த சில நாட்களாக ஜெர்மனி, போலந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி பதிவாகி வருகிறது. போலந்தின் கிராகோ நகரில் கூட 41 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர்ந்ததாக அங்கு வசிக்கும் இந்தியர்கள் கூறுகின்றனர்.

    Advertisement

    மியூனிக்கில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வரும் சாய்ஸ்மிதா தாஸ் கூறுகையில், "ஒடிசாவில் வெயில் அதிகரித்தால் ஏசியையோ, மின்விசிறியையோ பயன்படுத்தி உடலை குளிர்வித்துக் கொள்ளலாம். ஆனால் மியூனிக் நகரில் பெரும்பாலான வீடுகளில் ஏசியும் இல்லை, மின்விசிறியும் இல்லை. ஏனெனில் இங்கு இதுபோன்ற கடுமையான கோடை வெப்பம் அரிதாகவே இருக்கும்" என்றார்.

    ஐரோப்பா வெப்ப அலை

    ஐரோப்பிய நாடுகளில் உள்ள பெரும்பாலான வீடுகள் குளிர்காலத்தை சமாளிக்கும் வகையில் கட்டப்பட்டவை. வீட்டுக்குள் வெப்பத்தை தக்கவைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதால், தற்போது ஏற்பட்டுள்ள வெப்ப அலையின் போது அந்த வீடுகள் விரைவாக குளிர்வதில்லை. இதனால் வீட்டுக்குள்ளேயே அதிக வெப்பம் நிலவுகிறது. மேலும், அங்கு மின்விசிறிகளுக்கான தேவை மிகவும் குறைவாக இருந்ததால், அவை பெரிய அளவில் உற்பத்தி செய்யப்படுவதில்லை.

    Advertisement

    ஏசி, மின்விசிறி

    தற்போது திடீரென தேவை அதிகரித்ததால், பலர் மின்விசிறி வாங்க மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாக இந்தியர்கள் தெரிவிக்கின்றனர். சிலருக்கு அதன் விலையும் அதிகமாக இருப்பதால் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மியூனிக்கில் லுட்விக் மேக்ஸிமிலியன் பல்கலைக்கழகத்தில் முதுகலை படித்து வரும் பர்ஷா மிஸ்ரா கூறுகையில், "கடந்த அக்டோபரில் ஜெர்மனிக்கு வந்தபோது கோடை காலம் மிகவும் மகிழ்ச்சியானதாக இருக்கும் என்று கூறினர். ஆனால் இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள கடுமையான வெப்பம் முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தை கொடுத்துள்ளது" என்றார்.

    இந்தியர்கள்

    போலந்தின் கிராகோ நகரில் பணிபுரியும் பொறியாளர் அரவிந்த் பெஹராவும் இதே அனுபவத்தை பகிர்ந்துள்ளார். "போலந்தில் வியர்த்து நனைந்தது இதுவே முதல் முறை. மலைப்பகுதிகளுக்கு அருகில் இருப்பதால் இங்கு பொதுவாக குளிர்ச்சியான வானிலையே இருக்கும். ஆனால் கடந்த வாரம் வெப்பநிலை 41 டிகிரியை கடந்ததால் மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். பலர் பயணத்தின் போது கையில் வைத்துச் செல்லும் சிறிய மின்விசிறிகளை பயன்படுத்தி வெப்பத்தை சமாளித்தனர்" என்று கூறினார்.

    Advertisement

    பகல் நேரம்

    இந்தியாவுடன் ஒப்பிடும்போது ஐரோப்பாவில் பகல் நேரம் மிகவும் நீண்டதாக இருக்கும். கோடை காலத்தில் சுமார் 16 முதல் 17 மணி நேரம் வரை சூரிய ஒளி இருக்கும். இதனால் உடல் அதிக நேரம் வெப்பத்திற்கு ஆளாகிறது. இதுவும் மக்களின் சிரமத்தை மேலும் அதிகரித்துள்ளதாக அங்குள்ள இந்தியர்கள் கூறுகின்றனர்.

    பேருந்து பயணம்

    பர்ஷா மிஸ்ரா என்பவர் கூறுகையில், "ஐரோப்பாவுக்கு வந்த புதிதில் நீண்ட பகல் நேரம் காரணமாக தூக்கமே வரவில்லை. உடலின் இயல்பான நேர சுழற்சி பாதிக்கப்பட்டது. பின்னர் மெதுவாக அதற்கு பழகிக் கொண்டேன். ஆனால் தற்போது நிலவும் வெப்பத்தில் பேருந்துகளில் பயணம் செய்வதே மிகவும் சிரமமாக உள்ளது. பல பேருந்துகளில் ஜன்னல்களை திறக்க முடியாது. உள்ளே காற்றோட்டம் இல்லாமல் வியர்வையில் நனைந்த பயணிகளுடன் பயணிப்பது மிகவும் மூச்சுத்திணறலை ஏற்படுத்துகிறது" என்றார்.

    Advertisement

    ஏசி வசதி

    இந்த வெப்பத்தை சமாளிக்க பலரும் நீச்சல் குளங்களுக்கு செல்வதை வழக்கமாக்கியுள்ளனர். சில பள்ளிகள் மதிய நேர வகுப்புகளை ரத்து செய்துள்ளன. பல நிறுவனங்கள் வீட்டில் இருந்தே வேலை செய்ய அனுமதி வழங்கியுள்ளன. சாய்ஸ்மிதா தாஸ் என்பசர் கூறுகையில், "வீட்டில் இருந்தாலும் அதிக வெப்பம் இருந்ததால் அருகில் உள்ள ஏசி வசதியுள்ள கஃபேக்களில் அமர்ந்து வேலை பார்த்தேன். விடுமுறை நாட்களில் குடும்பத்தினருடன் நீச்சலுக்குச் செல்வது வழக்கமாகிவிட்டது" என்றார்.

    பகாலா

    மியூனிக்கில் வசிக்கும் பர்ஷா மிஸ்ரா, வெப்பத்தை சமாளிக்க ஷாப்பிங் மால்களில் அதிக நேரம் செலவிடுவதாகவும், எலக்ட்ரோலைட் பானங்கள், பழச்சாறுகள், ஐஸ்கிரீம் போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்வதாகவும் கூறினார். அதோடு, ஒடிசாவின் பாரம்பரிய உணவான 'பகாலா' (தண்ணீர் ஊற்றி புளிக்கவைத்த சாதம்) சாப்பிடுவதும் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுவதாக தெரிவித்தார்.

    Advertisement

    ஜெர்மனி அரசு

    இதற்கிடையில், ஜெர்மனி அரசு அதிக அளவில் ஏர் கண்டிஷனர்களை பயன்படுத்த ஊக்குவிக்காமல், அதற்கு பதிலாக மரங்களை அதிகம் நட வேண்டும் என்று மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது மூன்று மரங்கள் வளர்க்கப்பட வேண்டும் என்பதையும் அரசு வலியுறுத்தி வருவதாக அங்குள்ள இந்தியர்கள் தெரிவிக்கின்றனர். வரலாறு காணாத வெப்ப அலை காரணமாக, வழக்கமாக குளிர்ச்சியான காலநிலைக்கு பழகியுள்ள ஐரோப்பியர்களும், அங்கு வசிக்கும் இந்தியர்களும் இதுவரை இல்லாத அளவுக்கு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக ஏசி மற்றும் மின்விசிறி போன்ற அடிப்படை குளிரூட்டும் வசதிகள் இல்லாததே இந்த வெப்ப அலையின் தாக்கத்தை பல மடங்கு அதிகரித்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

    English Summary

    Record-breaking heat across Europe is leaving Indian residents struggling as many homes lack air conditioners and fans.