பாரிஸ்: பிரான்ஸில் தற்போது போராட்டங்கள் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கின்றன. நிலைமை இப்படி இருக்கையில் அந்நாட்டு அரசு தற்போது புதிய உத்தரவை போட்டிருக்கிறது. இதனால் மக்கள் போராட்டங்கள் தீவிரமடைய உள்ளன.
அதாவது, அந்நாட்டு நாடாளுமன்ற கீழ் அவையில் நேற்று முக்கிய சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதன்படி இனி பிரான்ஸில் நெட்பிலிக்ஸ், யூடியூப், மெட்டா மற்றும் கூகுள் போன்ற டிஜிட்டல் சேவைகளுக்கான கட்டணம் அதிகரிக்கப்பட இருக்கிறது.
இந்த டிஜிட்டல் நிறுவனங்கள், பிரெஞ்சு பயனர்களுக்கு அனுப்பும் ஒவ்வொரு GB டேட்டாவுக்கும் தோராயமாக ரூ.92 வரி வசூலிக்க இந்த சட்டத்திருத்தம் வழிவகுக்கிறது. அதாவது பிரான்ஸில் உள்ள இன்டெர்நெட் சேவை வழங்குநர்கள், ஒவ்வொரு டிஜிட்டல் நிறுவனமும் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு எவ்வளவு டேட்டாவை அனுப்புகிறது என்பதை ஒவ்வொரு காலாண்டிலும் கணக்கிடுவார்கள். இந்த டேட்டாவின் அளவின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அரசு நேரடியாக ஒரு GB-க்கு ரூ.92 என வரி விதிக்கும். மேலோட்டமாக பார்க்கும்போது இதில் ஒரு பிரச்சனையும் இல்லையே! என்று சொல்ல தோன்றும். ஆனால், விஷயம் இருக்கிறது. வரி என்னவோ நிறுவனங்கள் மீதுதான். ஆனால், அந்த நிறுவனங்கள் இந்த வரியை ஈடுகட்ட சந்தா கட்டணத்தை அதிகரிக்கும். கடைசியில் சமானிய மக்கள் தலையில்தான் செலவு வரும். உதாரணத்திற்கு ஒரு மணிநேர 4K தரத்திலான நெட்ஃபிலிக்ஸ் வீடியோவை பார்க்க சுமார் 7GB டேட்டா தேவை. இதன் மூலம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.32ஐ வரியாக அரசு விதிக்கும். இதனால் நெட்பிலிக்ஸ் தனது கட்டணத்தை அதிகரிக்கும். அதேபோல பெரிய அளவிலான கேம்களை டவுன்லோட் செய்வது காஸ்ட்லியானதாக மாறும். உதாரணமாக 200GB சைஸ் கொண்ட கேமை டவுடன்லோடு செய்யும்போது அதன் வெளியீட்டாளருக்கு ரூ.1012 வரியாக விதிக்கப்படும். கேம் நிறுவனங்கள், ஓடிடி மட்டுமல்லாது கிளவுட் ஸ்டோரேஜ், சாப்ட்வேர் அப்டேட் மற்றும் AI மாடல்களை இயக்கம் நிறுவனங்களுக்கும் இந்த வரி விதிக்கப்படும். வரியின் மூலம் பிரான்ஸ் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.46,000-92,000 கோடி வரை வருமானம் கிடைக்கும். மேலும் இந்த வரி, நிறுவனங்களை சிறந்த டேட்டா சுருக்க தொழில்நுட்பங்களை நோக்கி நகர்த்தி, சுற்றுச்சூழல் மாசை குறைக்க உதவும் என்றும் சொல்லப்படுகிறது. ஏற்கெனவே பிரான்சில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்திருக்கிறது. இதனால் ஏற்பட்டுள்ள கடுமையான பணவீக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கியிருக்கின்றனர். இந்த நேரத்தில் இன்டெர்நெட் பயனார்களுக்கு கட்டணங்களை உயர்த்துவது மக்களை டென்ஷனாக்கும் என்று பலரும் கூறுகின்றனர்.