இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி

  • பாரீஸ்: ஐரோப்பாவில் இந்தியத் தொழிலதிபருக்கு எதிராக ஒரு விவகாரம் பெரிதாக வெடித்ததுள்ளது. அதாவது பிரான்ஸ் நாட்டில் பிரபல தொழிலதிபர் லட்சுமி மிட்டலுக்கு சொந்தமான ஸ்டீல் நிறுவனத்தை அரசுடைமையாக்க அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கான காரணம் மற்றும் பின்னணி தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    இந்தியாவின் மிக பெரிய தொழிலதிபர்களில் ஒருவர் லட்சுமி மிட்டல். இவர் உலகின் இரண்டாவது மிக பெரிய ஸ்டீல் உற்பத்தி நிறுவனமான 'ஆர்சலர் மிட்டல்' (ArcelorMittal) நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் பிரெஞ்சு பிரிவை அரசுடைமையாக்க அந்நாட்டு எம்பிக்கள் மீண்டும் ஒருமுறை வாக்களித்துள்ளனர். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    என்ன நடந்தது?

    கடந்த ஜூன் 11ம் தேதி பிரான்சின் நாடாளுமன்றத்தின் கீழ் சபையான தேசிய சட்டமன்றத்தில் ஆர்சலர் மிட்டல் நிறுவனத்தை அரசுடைமையாக்குவதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் தீர்மானத்திற்கு ஆதரவாக 106 வாக்குகளும், எதிராக 49 வாக்குகளும் கிடைத்தன. இந்தத் தீர்மானம் ஏற்கனவே 2025 நவம்பரில் ஒருமுறை நிறைவேற்றப்பட்டது. ஆனால், மேல் சபையான 'செனட்' இதனை நிராகரித்தது. இப்போது மீண்டும் இது நிறைவேற்றப்பட்டுள்ளது. இருப்பினும், இது சட்டமாவதற்கு இன்னும் பல தடைகள் உள்ளன.

    காரணங்கள்

    இந்தத் தீர்மானத்தை இடதுசாரி கட்சியான லா பிரான்ஸ் இன்சோமிஸ் கொண்டு வந்தது. அவர்கள் இதைக் கொண்டு வர மூன்று முக்கியமான காரணங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

    Advertisement

    முதலில் ஆர்சலர் மிட்டல் நிறுவனம் பிரான்சில் தனது செயல்பாடுகளைக் குறைத்து வருவதாகவும், பல தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கி வருவதாகவும் தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன. அரசு பொறுப்பேற்றால் மட்டுமே இந்த வேலைகளைக் காப்பாற்ற முடியும் என்பது இவர்களின் வாதம்.

    ஸ்டீல் என்பது ஒரு நாட்டின் முதுகெலும்பு போன்றது. கட்டுமானம், ரயில்வே, கார் உற்பத்தி, பாதுகாப்புத் துறை மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்பு என அனைத்திற்கும் ஸ்டீல் தேவை. இவ்வளவு முக்கியமான ஒரு பொருளுக்கு வெளிநாட்டு நிறுவனத்தையோ அல்லது இறக்குமதியையோ நம்பி இருக்கக் கூடாது என்று அவர்களின் அடுத்த காரணம்!

    Advertisement

    ஸ்டீல் தயாரிப்பு அதிக அளவில் கார்பனை வெளியேற்றும் ஒரு தொழில். பருவநிலை மாற்றத்தைக் குறைக்க, க்ரீன் ஸ்டீல் தயாரிப்பிற்கு மாற வேண்டும். இதற்குத் தனியார் நிறுவனங்கள் போதிய முதலீடு செய்யவில்லை என்றும் அரசு தலையிட்டால் மட்டுமே இந்த மாற்றத்தை வேகமாகச் செய்ய முடியும் என்பது மூன்றாவது காரணம்.

    கண்டனம்

    இருப்பினும் இந்திய கோடீஸ்வரர் லட்சுமி மிட்டல் தலைமையிலான ஆர்சலர் மிட்டல் நிறுவனம், இந்த அரசுடைமை முயற்சியை வன்மையாக எதிர்க்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் பிரான்சில் மட்டும் சுமார் 1.7 பில்லியன் யூரோக்களை (சுமார் ₹15,000 கோடிக்கும் மேல்) முதலீடு செய்துள்ளதாக அந்நிறுவனம் கூறுகிறது.

    Advertisement

    மேலும், ஐரோப்பாவில் ஸ்டீல் தொழில் நலிவடைவதற்கு நிறுவனத்தின் நிர்வாகம் காரணமல்ல.. மாறாகச் சர்வதேச மந்தநிலை, அதிகப்படியான எரிசக்தி செலவு மற்றும் வெளிநாடுகளில் இருந்து (குறிப்பாகச் சீனா போன்ற நாடுகளிலிருந்து) மலிவான விலையில் இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல் ஆகியவையே காரணம் என்று நிறுவனம் வாதிடுகிறது.

    சிக்கல்கள்

    இந்தத் தீர்மானம் கீழ் சபையில் நிறைவேற்றப்பட்டாலும், அது சட்டமாக மாறுவது கடினம். ஏனெனில் பிரான்ஸ் அரசே இந்தத் தீர்மானத்தை எதிர்க்கிறது. தனியார் நிறுவனங்களை அரசுடைமையாக்குவது சர்வதேச முதலீட்டாளர்கள் மத்தியில் தவறான செய்தியைக் கொண்டு செல்லும் என்று அரசு அஞ்சுகிறது. ஏற்கனவே ஒருமுறை நிராகரித்த மேல் சபையான செனட் சபை, மீண்டும் இதனை நிராகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், ஒரு மாபெரும் நிறுவனத்தை அரசு விலைக்கு வாங்க வேண்டும் என்றால், அதற்குப் பல்லாயிரம் கோடி ரூபாய் தேவைப்படும். பிரான்ஸ் ஏற்கனவே நிதி நெருக்கடியில் இருக்கும்போது, இது சாத்தியமா என்ற கேள்வி எழுகிறது.

    Advertisement

    இந்தியாவில் ஸ்டீல் துறை

    ரான்சில் ஸ்டீல் தொழிலை அரசு காப்பாற்ற வேண்டுமா என்ற விவாதம் நடக்கும் வேளையில், இந்தியாவில் நிலைமை முற்றிலும் வேறாக உள்ளது. இந்தியா 2030ஆம் ஆண்டிற்குள் ஆண்டுக்கு 300 மில்லியன் டன் ஸ்டீல் உற்பத்தி செய்யும் இலக்கை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது. இந்தியாவின் முன்னணி ஸ்டீல் நிறுவனங்கள் வரும் ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளன.

    இந்தியாவில் உள்கட்டமைப்பு வசதிகள் பெருகி வருவதால், ஸ்டீல் தேவை உள்நாட்டிலேயே அதிகமாக உள்ளது. மேலும், மலிவான இறக்குமதியிலிருந்து உள்நாட்டு நிறுவனங்களைக் காக்க இந்திய அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

    English Summary

    French Parliament approved a resolution to nationalize the French wing of Indian billionaire Lakshmi Mittal’s ArcelorMittal(பிரான்ஸ் நாட்டில் இந்திய தொழிலதிபருக்கு ஏற்பட்ட சிக்கல்): Indian businessman in France faces problem latest news in tamil.