பிரசாந்த் கிஷோர் நிலைமையை பாருங்க.. பாஜக தேசிய தலைவரின் கோட்டையில் போட்டியிட முடிவு? கட்சியை காப்பாத்த அக்னி பரீட்சை

  • பாட்னா: பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் 'ஜன் சுராஜ்' கட்சி பீகாரில் படுதோல்வியடைந்தது. கட்சியை மீட்டெடுக்கும் வகையில் பிரசாந்த் கிஷோர் பீகார் பாங்கிப்பூர் சட்டசபை தொகுதியின் இடைத்தேர்தலில் போட்டியிட திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த பாங்கிப்பூர் சட்டசபை தொகுதி பாஜக தேசிய தலைவர் நிதின் நபினின் கோட்டையாகும். இங்கு அவர் மட்டுமே தொடர்ந்து வென்று வந்த நிலையில் கட்சியை காப்பாற்ற பிரசாந்த் கிஷோர் களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுபற்றி இங்கு பார்க்கலாம்.

    Advertisement

    பிரபல தேர்தல் வியூக வகுப்பாளராக இருப்பவர் பிரசாந்த் கிஷோர். கடந்த 2021 சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் திமுக வெற்றி பெற வியூகங்களை வகுத்து கொடுத்தவர். இவர் பீகாரை சேர்ந்தவர். இதனால் பீகாரை மையப்படுத்தி 'ஜன் சுராஜ்' என்ற கட்சியை தொடங்கினார்.

    Advertisement

    பீகாரில் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு கடந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பிரசாந்த் கிஷோர் போட்டியிடவில்லை. 243 தொகுதிகளில் 238 இடங்களில் பிரசாந்த் கிஷோர் வேட்பாளர்களை அறிவித்தார். இதில் ஒருவர் கூட வெற்றிபெறவில்லை. மாறாக 236 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். அவரது கட்சி 3.4 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற்று படுதோல்வியடைந்தது.

    இதையடுத்து பீகாரில் கணிசமாக ஓட்டுகளை பெற்று பல எம்எல்ஏக்கள் வருவார்கள் என்று நினைத்த பிரசாந்த் கிஷோருக்கு ஏமாற்றமே கிடைத்தது. இதையடுத்து அவர் கட்சியின் மொத்த அமைப்புகளையும் கலைத்து புதிய நிர்வாகிகளை நியமனம் செய்தார். இருப்பினும் கூட அவரது கட்சி இன்னும் உத்வேகம் பெறவில்லை. இந்நிலையில் தான் ஒரு தேர்தல் வெற்றி கிடைத்தால் அது கட்சியினரை உற்சாகப்படுத்தும் என்று பிரசாந்த் கிஷோர் நினைக்கிறார்.

    Advertisement

    இதனால் அவர் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்துள்ளதாக பீகார் முழுவதும் பேச்சுக்கள் எழுந்துள்ளன. அதாவது பீகார் தலைநகர் பாட்னாவில் பாங்கிப்பூர் சட்டசபை தொகுதி உள்ளது. கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பாங்கிப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் நிதின் நபின். இவர் தற்போது பாஜகவின் தேசிய தலைவராக உள்ளார். ராஜ்யசபா எம்பியானதால் அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
    விரைவில் பாங்கிப்பூர் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் ஜன் சுராஜ் கட்சி நிறுவனரான பிரசாந்த் கிஷோர் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    இதுபற்றி பீகார் மதுபனி மாவட்டத்தின் ஜன்ஜர்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய பிரசாந்த் கிஷோரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பிரசாந்த் கிஷோர், "பாங்கிப்பூர் தொகுதியில் பாஜகவை ஜன் சுராஜ் கட்சியால் மட்டுமே தோற்கடிக்க முடியும். ஏனெனில், கடந்த 40 ஆண்டுகளாக, எதிர்க்கட்சிகளான ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ், இத்தொகுதியில் பாதி வாக்குகளை கூடப் பெற முடியாமல் தோற்றுள்ளன. அவர்களின் வெற்றி என்பது கேள்விக்குறியே" என்று தெரிவித்தார்.

    Advertisement

    இருப்பினும் பாங்கிப்பூர் இடைத்தேர்தலில் தான் போட்டியிடுவாரா எனக் கேட்டபோது, பிரசாந்த் கிஷோர் நேரடியான பதிலைத் தவிர்த்தார். இருப்பினும், அதில் பெறும் வெற்றி கட்சிக்கு உத்வேகம் அளிக்கும் என அவர் கூறினார். இதனால் பிரசாந்த் கிஷோர் பீகார் பாங்கிப்பூர் சட்டசபை தொகுதியில் களமிறங்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    ஆனால் பிரசாந்த் கிஷோர் பாங்கிப்பூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டாலும் கூட அவர் வெல்வது பெரிய சவாலாக இருக்கும். ஏனென்றால் இந்த தொகுதி என்பது பாஜகவின் கோட்டையாகும். கடந்த 1957 முதல் 2006 வரை இந்த தொகுதியின் பெயர் பாட்னா மேற்கு தொகுதி என்று இருந்தது. இதில் 1995, 2000, 2005, 2006 என மொத்தம் 4 தேர்தல்களில் பாஜக தொடர்ந்து வெற்றி பெற்றது. இதில் 2006ல் பாஜகவின் நிதின் நபின் முதல் முறையாக வெற்றி பெற்றார். அதன்பிறகு தொகுதி மறுவரையின்போது பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பீகார் மேற்கு என்ற தொகுதியின் பெயர் பாங்கிப்பூர் என மாற்றம் செய்யப்பட்டது.

    Advertisement

    பாங்கிப்பூர் சட்டசபை தொகுதியில் 2010, 2015, 2020, 2025 என 4 சட்டசபை தேர்தல்களிலும் பாஜகவின் நிதின் நபின் தான் வெற்றி பெற்றார். கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் நிதின் நபின் மொத்தம் 98,299 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி எனும் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கடக்சியின் ரேகா குமாரி 46,363 வாக்குகள் மட்டுமே பெற்றார். இதனால் நிதின் நபின் 51,936 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனால் தான் இந்த தொகுதி நிதின் நபின் மற்றும் பாஜகவின் கோட்டை என கூறப்படுகிறது. இதனால் இந்த தொகுதியில் பிரசாந்த் கிஷோர் களமிறங்கினாலும் வெற்றி கடினமாக இருக்கும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

    English Summary

    Prashant Kishor News: Renowned election strategist Prashant Kishor launched the 'Jan Suraj' party in Bihar. However, his party suffered a crushing defeat in the elections held last year. Against this backdrop, reports have emerged suggesting that Prashant Kishor is planning to contest the by-election for the Bankipur Assembly constituency in Bihar in an effort to revive his party.