கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார்

  • பெரம்பலூர்: தமிழக அரசியல் களம் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அடுத்தடுத்த அதிரடி திருப்பங்களைச் சந்தித்து வரும் நிலையில், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பேருந்து நிலையப் பகுதியில் இன்று திமுக மற்றும் விசிக தொண்டர்களிடையே கடுமையான வன்முறை மோதல் வெடித்தது. இரு தரப்பினரும் கற்களால் மாறி மாறித் தாக்கிக்கொண்டதால் அப்பகுதியே போர்க்களமாக மாறியுள்ளது.

    Advertisement

    விசிக, தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள நிலையில், திமுகவினர் விமர்சித்து வந்தனர். இந்நிலையில், கூட்டணி கட்சிகள் இடையே மோதல் வெடித்துள்ளது.

    Advertisement

    மோதலின் பின்னணி என்ன?

    சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் தவெக கூட்டணி அரசு அமைந்துள்ளது. இந்த அரசில் விசிக இணைந்து, அதன் எம்.எல்.ஏ வன்னியரசு அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

    கூட்டணி கட்சியான விசிக-வின் இந்த நகர்வை விமர்சிக்கும் வகையில், திமுக துணைப் பொதுச்செயலாளரும், நீலகிரி எம்.பி-யுமான ஆ.ராசா தனது எக்ஸ் பக்கத்தில், "தன் வீட்டுத் தென்னை மரம் பக்கத்து வீட்டுக்கு வளைந்து இளநீர் தருவதை 'முடத்தெங்கு' என்று இலக்கியம் கூறும், அரசியல் என்ன கூறும்?" என்றும், "விசில் சத்தத்திற்கு (தவெக சின்னம்) பானையும் (விசிக சின்னம்), ஏணியும் (ஐயுஎம்எல் சின்னம்) வளைந்துவிட்டன" என்றும் காரசாரமாகப் பதிவிட்டிருந்தார்.

    Advertisement

    மேலும், சில கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியும் பதிவிட்டிருந்தார் ஆ.ராசா. இது விசிக தொண்டர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பின்னர் அந்த ட்வீட்டை ஆ.ராசா நீக்கிவிட்டார்.

    தடையை மீறிக் குவிந்த தொண்டர்கள்

    ஆ.ராசாவின் விமர்சனத்தைக் கண்டித்து பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பேருந்து நிலையம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த விசிக அனுமதி கோரியிருந்தது. அதே நேரத்தில், தங்களது தலைவர்களை விசிகவினர் அவதூறாகப் பேசுவதாகக் கூறி, திமுக இளைஞரணி தரப்பிலும் அதே இடத்தில் எதிர் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்கப்பட்டது.

    சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்பதால் குன்னம் போலீசார் இரு தரப்புக்குமே அனுமதி மறுத்து, தடை விதித்திருந்தனர். இருப்பினும், இன்று காலை 10:30 மணியளவில் இரு கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொண்டர்கள் குன்னம் பேருந்து நிலையத்தின் இருபுறமும் குவியத் தொடங்கினர்.

    Advertisement

    வார்த்தைப் போர்.. கல்வீச்சாக மாறியது

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் வரதராஜன் தலைமையிலான விசிகவினர், திமுகவினர் வந்த காரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர். ஆரம்பத்தில் இரு தரப்பினருக்கும் இடையே சாதாரண வார்த்தை தடிதடியாகத் தொடங்கி, பின்னர் அது கடுமையான வாக்குவாதமாக மாறியது. அப்போது அந்த வழியாகச் சென்ற திமுகவினர் சிலர் விசிகவினரைப் பார்த்துக் கோஷமிட்டதாகக் கூறப்படுகிறது.

    இதில் ஆத்திரமடைந்த இரு தரப்பினரும் திடீரெனத் தடிகளாலும், கட்டைகளாலும் ஒருவரையொருவர் தாக்கத் தொடங்கினர். ஒருகட்டத்தில் கட்டுக்கடங்காமல் போன தொண்டர்கள், கற்களை வீசி சரமாரியாகத் தாக்கிக் கொண்டனர்.

    சிதறி ஓடிய பொதுமக்கள்

    பகல் நேரத்தில் நடுரோட்டில் நடந்த இந்த பயங்கர கல்வீச்சால் பேருந்து நிலையத்தில் இருந்த பொதுமக்கள், பயணிகள் மற்றும் வியாபாரிகள் அலறியடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். பாதுகாப்பு கருதி குன்னம் பஜாரில் இருந்த அனைத்துக் கடைகளும் உடனடியாக அடைக்கப்பட்டன.

    Advertisement

    போலீஸ் தடியடி

    அங்கிருந்த சில போலீசார் மோதலைக் கட்டுப்படுத்த முயன்றும் முடியாததால், கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது லத்தி சார்ஜ் நடத்தப்பட்டது. அதன்பின்னரே கூட்டத்தினர் கலைந்து ஓடினர். இந்த மோதலில் இரு தரப்பையும் சேர்ந்த பல தொண்டர்களுக்குப் பலத்த காயம் ஏற்பட்டு, அவர்கள் குன்னம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    பெரம்பலூர் மாவட்ட எஸ்பி லலித்குமார் உத்தரவின் பேரில், குன்னம் முழுவதும் தற்போது நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    தலைவர்கள் ரியாக்‌ஷன்

    இந்த வன்முறை குறித்து விசிக பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி, விசிகவினர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    Advertisement

    மறுபுறம் திமுக எம்பி ஆ.ராசா தனது எக்ஸ் பக்கத்தில், "கருத்து மோதல்கள்தான் ஜனநாயகத்தின் வலிமை. கைகலப்புகளும், கள மோதல்களும் ஜனநாயகத்திற்கு எதிரானது மட்டுமல்ல, சுத்த அறிவீனம். வன்முறையைத் தவிர்ப்போம்" எனத் தனது தொண்டர்களுக்கு அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    விசிக அமைச்சரவையில் சேர்ந்த சில நாட்களிலேயே முன்னாள் கூட்டாளிகள் நடுரோட்டில் மோதிக்கொண்ட சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    While the Tamil Nadu political landscape continues to witness a series of dramatic twists following the election results, a violent clash erupted today between cadres of the DMK and VCK in Kunnam Perambalur district. As members of both factions pelted stones at one another, the entire area was transformed into a battlefield.