லிவிங் உறவுக்கு கடும் எதிர்ப்பு.. பெங்களூரில் 3 பேர் கொலை! புதுச்சேரியில் சிக்கிய குற்றவாளி!

  • புதுச்சேரி: பெங்களூரு கே.ஆர்.புரம் அருகே உள்ள சீகேஹள்ளியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தலைமறைவாக இருந்த கென்னத் (26) என்பவரை பெங்களூரு காவல்துறையினர் புதுச்சேரியில் வைத்து கைது செய்துள்ளனர்.

    Advertisement

    கடந்த ஜூன் 22-ம் தேதி இரவு, சீகேஹள்ளியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த சோமசுந்தர் (55), அவரது மனைவி முத்துலட்சுமி (48) மற்றும் அவர்களது இளைய மகள் சுப்ரியா (20) ஆகியோர் கொடூரமான முறையில் குத்திக் கொலை செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Advertisement

    மகள் மற்றும் காதலன் மீது சந்தேகம்

    இந்த குடும்பத்தில் மொத்தம் 4 பேர். இதில் மூவர் கொலை செய்யப்பட்ட நிலையில், மீதம் இரந்தது மூத்த மகள் ஸ்வேதா (25) மட்டும்தான். ஆனால், சம்பவம் நடந்த பிறகு அவரை காணவில்லை. எனவே முழு சந்தேகமும் ஸ்வேதா மீதும் அவரது காதலன் கென்னத் மீதும்தான் திரும்பியது. மென்பொருள் பொறியாளரான ஸ்வேதா, தனது பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கென்னத்துடன் கடந்த இரண்டு மாதங்களாக வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

    புதுச்சேரியில் கைது

    கொலை நடந்த பிறகு இவர்கள் எங்கு போனார்கள் என்பதுதான் காவல்துறையினரை குழப்பியது. தீவிர தேடுதலுக்கு பிறகு இருவரும், பைக்கில் திருவண்ணாமலை வரை வந்திருப்பது தெரிய வந்தது. எனவே, அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. ஆனால், போலீசாருக்கு இன்னொரு தலைவலி.. அதாவது திருவண்ணாமலை வரை வந்த இவர்கள், அங்கிருந்து வேறு இடத்திற்கு சென்றிருக்கின்றனர்.

    Advertisement

    எனவே திருவண்ணாமலை பேருந்து நிலையம் முழுவதும் இருந்த சிசிடிவி கேமராக்களை சோதனை செய்து பார்த்தனர். அதில், ஸ்வேதா மட்டும் சிக்கினார். அவர் புதுச்சேரி பஸ்ஸில் ஏறியிருக்கிறார். ஆனால், அதுவரை கூடவே வந்த கென்னத்தை காணவில்லை.

    முதலில் ஸ்வேதாவை கண்டுபிடிக்கலாம், பின்னர் கென்னத் தானாக மாட்டுவார் என்று முடிவெடுத்த போலீசார்.. ஸ்வேதாவை தீவிரமாக தேடினர். தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு, ஸ்வேதா கடந்த புதன்கிழமை புதுச்சேரி ரயில் நிலையம் அருகே கைது செய்யப்பட்டார்.

    அவரைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த கென்னத்தை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், நேற்று (ஜூன் 25) இரவு புதுச்சேரியின் அண்ணா சாலை பகுதியில் உள்ள ஒரு மதுபானக் கடை அருகே பதுங்கியிருந்த கென்னத்தை போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்தனர். அவர் கடற்கரை ஓரங்களில் உள்ள தற்காலிக குடில்களில் தங்கி போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    Advertisement

    கொலைக்கான காரணம்

    முதற்கட்ட விசாரணையில், தனது காதலுக்கு பெற்றோர் முட்டுக்கட்டை போட்டதாலும், குறிப்பாக தனது தாய் தன்னை மிகவும் கட்டுப்படுத்தியதாலும் ஆத்திரமடைந்த ஸ்வேதா, கென்னத்துடன் இணைந்து இந்தத் திட்டத்தைத் தீட்டியதாகத் தெரிகிறது. முதலில் தாயை மட்டும் கொல்லத் திட்டமிட்டதாகவும், ஆனால் தந்தை மற்றும் தங்கை குறுக்கிட்டதால் அவர்களையும் கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.

    கைது செய்யப்பட்ட கென்னத் தற்போது பெங்களூரு அழைத்து வரப்பட்டுள்ளார். ஸ்வேதா ஏற்கனவே 7 நாள் போலீஸ் காவலில் உள்ள நிலையில், இருவரையும் ஒன்றாக வைத்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் இந்தக் கொலையில் இருவரின் பங்கு மற்றும் முழுமையான பின்னணி குறித்து கூடுதல் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    Bengaluru Triple Murder Accused: Bengaluru police have arrested Kenneth (26), who had been absconding, in Puducherry in connection with the murder of three members of the same family in Segehalli, near K.R. Puram, Bengaluru.