புதுச்சேரி: புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணிக்கு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ், திமுக உட்பட 11 வேட்பாளர்கள் களத்தில் இருக்கும் நிலையில், மொத்தமாக 21,756 வாக்காளர்கள் இருக்கின்றனர். இதனால் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டு 2 மணி நேரத்தில் முடிவுகள் வெளியாகும் என்று தெரிகிறது.
ஏப்ரல் மாதம் புதுச்சேரியில் நடந்த சட்டசபைத் தேர்தலில் முதல்வர் ரங்கசாமி இரு தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இதனால் வெற்றிக்கு பின் தட்டாஞ்சாவடி தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து தட்டாஞ்சாவடி தொகுதிக்கு அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், மொத்தமாக 80.81% வாக்குகள் பதிவாகின.
10,056 ஆண் வாக்காளர்கள், 11,695 பெண் வாக்காளர்கள், 5 மூன்றாம் பாலினத்தவர் என்று 21,756 வாக்குகள் பதிவாகின. இந்த இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் ஆர்பாக அசோக் ஆனந்த், காங்கிரஸ் சார்பாக விநாயகம், திமுக சார்பாக சேது செல்வம், இந்திய கம்யூனிஸ்ட் சார்பாக சலீம் என்று மொத்தமாக 11 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். சட்டசபைத் தேர்தலை ஒப்பிடும் போது இடைத்தேர்தலில் 6.29% வாக்குகள் குறைந்துள்ளன. இதனால் அத்தனை கட்சிகளும் பதற்றத்திலேயே இருக்கின்றன. காங்கிரஸ் கட்சி டெபாசிட் இழக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டு கொண்டு வீடியோ வெளியிட்டு பிரச்சாரம் செய்தார். அதேபோல் காங்கிரஸ் - தவெக கூட்டணியாக புதுச்சேரியில் சந்திக்கும் முதல் தேர்தல் இது. இதனால் யார் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட உள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, பின்னர் வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். சுமார் 21 ஆயிரம் வாக்குகள் மட்டுமே எண்ணப்பட வேண்டி இருப்பதால், காலை 10 மணியளவிலேயே முடிவு தெரிந்துவிடும் என்று பார்க்கப்படுகிறது.