புதுச்சேரி: புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்வர் ரங்கசாமி பதவியேற்ற நிலையில், அடுத்ததாக அமைச்சர்களும் பதவியேற்று விட்டார்கள். ஆனால் அமைச்சர்களுக்கு இன்னும் இலாகா ஒதுக்கப்படவில்லை. ரங்கசாமி இந்த முறை முக்கியத்துவம் வாய்ந்த உள்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளை பாஜகவிற்கு ஒதுக்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அதேநேரம் ஆளுநரிடம் முதல்வர் ரங்கசாமி அளித்த பட்டியல் இன்னும் அமலுக்கு வரவில்லை. இலாகா விஷயத்தில் பாஜக மீது ரங்கசாமி கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில், தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ்-12; பாஜக, 4; அதிமுக மற்றும் ல.ஜ.க., தலா ஒரு தொகுதிகளில் வெற்றி பெற்றன. தற்போது கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இதில் பாஜக கடந்த முறை போன்றே சபாநாயகர், 2 அமைச்சர்கள் பதவி கட்டாயம் வேண்டும் என்று விரும்பியதாம்.
ஆனால், முதல்வர் ரங்கசாமி, கடந்த முறை 6 தொகுதிகளில் வெற்றி பெற்றீர்கள். ஆனால், இம்முறை 4 தொகுதிகளில் தான் வெற்றி பெற்றுள்ளீர்கள். நாங்கள் கடந்த முறை 10 தொகுதியில் வென்றோம் . இந்த முறை 12 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால், எங்கள் கட்சிக்கு கூடுதல் பதவி வழங்க வேண்டியுள்ளது என்று கூறினாராம். இதற்கு பாஜக சம்மதிக்கவில்லையாம். இந்த விவகாரத்தில் இருபக்கமும் அதிருப்தி உருவானதாம். இதனால் அமைச்சர்கள் ஒதுக்கீடு நீண்ட இழுபறியானது. எனினும் கடந்த மே 13ம் தேதி முதல்வராக ரங்கசாமியும், அமைச்சர்களாக நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் மட்டுமே பதவியேற்றனர். ஆனால், அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கப்படவில்லை. அதனைத் தொடர்ந்து பாஜக என்.ஆர்.காங்., கட்சியிடையே நடந்த நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின், 33 நாட்கள் கழித்து கடந்த ஜூன் 17ம் தேதி என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் ராஜவேல், சிவக்கொழுந்து, பாஜக சார்பில் ராஜசேகர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளார்கள். ஆனால் இன்னமும் இலாக்கா யாருக்குமே ஒதுக்கப்படவில்லை. இந்த சூழலில் புதுச்சேரி மாநில பட்ஜெட்டுக்காக மத்திய அரசு ரூ.14,300 கோடிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஆகஸ்ட் இறுதிக்குள் புதுச்சேரி சட்டசபையைக் கூட்டி முழு பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயம் ஆகும். அதேபோல் துறை வாரியான நிதி ஒதுக்கீடு செய்வதற்கு அமைச்சர்களுக்கு இலாகாக்கள் அவசியம் ஆகும். இந்த சூழலில முதல்வர் ரங்கசாமி கடந்த 20-ந் தேதி புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநர் கைலாஷ்நாதனிடம் யாருக்கு எந்த அமைச்சர் பதவி என்ற இலாகா பட்டியலை வழங்கினார். வழக்கமாக சில மணி நேரங்களில் வெளியிடப்படும். ஆனால் இதுவரை அரசாணை வெளியிடப்படவில்லை. சட்டசபை தேர்தலில் 4 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்ற பாஜக கடந்த முறை போலவே சபாநாயகர் மற்றும் தங்கள் அமைச்சர்களுக்கு கடந்த முறை ஒதுக்கப்பட்ட இலாகாக்களை வழங்க வேண்டும் என்று கேட்டு வருகிறதாம். ஆனால் முதல்வர் ரங்கசாமி அதனை கொடுக்க முன்வரவில்லை என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி, முதல்வர் ரங்கசாமி வழங்கியுள்ள பட்டியலில் பாஜக அமைச்சர்களுக்கு உள்துறை உள்ளிட்ட முக்கிய துறைகள் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுபற்றி பாஜக மேலிடத்திற்கு புதுச்சேரி பாஜகவினர் புகார் தந்துள்ளார்களாம். அதனால் தான் இலாகா அறிவிக்கப்படாமல் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே முதல்வர் ரங்கசாமி இலாக்காவிற்கு இன்னும் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதால், பாஜக மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. பாஜக தலைமையும் நேரடியாக ரங்கசாமியை தொடர்பு கொண்டு இதுவரை பேசவில்லை என்று கூறப்படுகிறது. இது ஒருபுறம் எனில், என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா இடையே மோதல் அதிகமானதாக ஊடகவியலாளர்கள் சொல்கிறார்கள். அண்மைக் காலமாக அதை உறுதி செய்யும் வகையில், பாஜக அமைச்சர்கள் அரசு விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பதாக சொல்கிறார்கள். எனினும் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி தொடரும், மனஸ்தாபங்கள் விரைவில் சரியாகும் என்றே இரு தரப்பு கட்சியினரும் கூறுகிறார்கள். இருவருமே தங்கள் நிலைப்பாட்டில் பிடிவாதம் காட்டுவதுதான் சிக்கலுக்கு காரணம் என்கிறார்கள்.