“இங்கிலாந்து மன்னரா?” ஐகோர்ட் வைத்த குட்டு.. தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று கோர்ட்டில் ஆஜர்!

  • புதுச்சேரி: உடன்பிறந்த சகோதரர் மற்றும் அவரது மனைவியை வீடு புகுந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் புதுச்சேரி நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு ஆஜரானார்.

    Advertisement

    தமிழக நிதி அமைச்சராகப் பதவி வகித்து வரும் மரிய வில்சன், கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி தொழில் போட்டி காரணமாக, புதுச்சேரி எழில் நகரில் வசித்து வந்த தனது உடன்பிறந்த சகோதரர் மரிய கிளோத் மற்றும் அவரது மனைவி கெரோலின் ஆகியோரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்தவர்களை உருட்டுக்கட்டையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார்.

    Advertisement

    இந்த சம்பவம் தொடர்பாக மரிய கிளோத் மற்றும் அவரது மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் மரிய வில்சன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணையில் நடைபெற்று வரும் சூழலில், வழக்கு விசாரணைக்காகப் பலமுறை வாய்தா வழங்கப்பட்ட போதிலும், அமைச்சர் மரிய வில்சன் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி மரிய வில்சனுக்கு புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    இதற்கிடையே, தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் அமைச்சர் மரிய வில்சன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, மரிய வில்சன் நீதிமன்றத்திற்கு செல்ல முடியாது என்று கூற முடியாது என்றும், நிதி அமைச்சர் மரிய வில்சன் இங்கிலாந்தின் அரசர் அல்ல என்றும் நரசிம்ம ராவ் பிரதமராக இருந்த போது கூட நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்கிறார் என்றும் சுட்டிக்காட்டினார்.

    Advertisement

    மேலும், நிதியமைச்சர் மரிய வில்சன் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராகியே வேண்டும், இது தொடர்பாக உரிய தேதியை தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அப்போது மரிய வில்சன் தரப்பில், ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குப் பிறகு புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் மரிய வில்சன் ஆஜராகவதாக உறுதி அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் புதுச்சேரி நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு ஆஜரானார். நிதி அமைச்சர் மரிய வில்சன் இங்கிலாந்தின் அரசர் அல்ல என்று கூறி நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு கோரிய மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்த நிலையில் இன்று மரிய வில்சன் நேரில் ஆஜரானார்.

    Advertisement

    அப்போது வழக்கு தொடர்பான ஆவணங்களை அவர் பெற்றுக் கொண்ட நிலையில் மீண்டும் செப்டம்பர் 9 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும் என்று நீதிபதி சந்திரசேகர் தெரிவித்தார்.

    English Summary

    Tamil Nadu Finance Minister Marie Wilson appeared before a Puducherry court today for a hearing in a case where he is accused of entering his brother's house, assaulting the brother and his wife, and issuing death threats.