புதுவை: தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் தனது சகோதரர் மரிய குலோத் வீட்டிற்குள் புகுந்து அவரையும், அவரது மனைவியையும் தாக்கிய வழக்கில் சமரச தீர்வு மையத்தில் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்த சூழலில், மரிய வில்சனுக்கு எதிரான வழக்கை விசாரித்து வரும் புதுவை மாவட்ட நீதிபதி சேரலாதன் மாஹேவுக்கு பணியிட மாற்றம் செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் முதல்வர் விஜய் தலைமையிலான அரசில், நிதித்துறை அமைச்சராக இருப்பவர் மரிய வில்சன். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி புதுவை எழில் நகரில் வசித்து வரும் சகோதரர் மரிய குலோத் வீட்டிற்குள் அத்துமீறி சென்று மரிய குலோத், அவரது மனைவி கெரோலின் ஆகியோரை தாக்கியதாக லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
உருட்டுக் கட்டைகளுடன் வீடு புகுந்த மரிய வில்சன் தரப்பினர், அவரது சகோதரர் மற்றும் சகோதரரின் மனைவியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக, இதில் காயமடைந்த அவரது சகோதரரின் மனைவி போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இந்த சம்பவம் தொடர்பாக மரிய வில்சனுக்கு எதிராக அத்துமீறி நுழைதல், தாக்குதல், சேதம் விளைவித்தல், ஆபத்தான ஆயுதத்தால் காயம் ஏற்படுத்துதல், பெண்ணை மானபங்கப்படுத்துதல், கொலை மிரட்டல், கூட்டுசதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. புதுவை நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், வழக்கை ரத்து செய்யக் கோரி மரிய வில்சன் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார். இந்த வழக்கில் இரு தரப்பும் சமரசமாக செல்வதாக கூறியதை அடுத்து சமரசத் தீர்வு மையம் மூலம் தீர்வு காண உத்தரவிட்டது. ஆனால் சமரச தீர்வு மையத்தில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து, புதுவையில் நடைபெற்று வரும் வழக்கில் நேரில் ஆஜர் ஆவதில் இருந்து விலக்கு அளிக்க மரிய வில்சன் தரப்பில் கோரப்பட்டது. சட்டமன்ற கூட்டத்தொடரை காரணம் காட்டி அவகாசம் கேட்கப்பட்ட நிலையில், அதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் 28 ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் மரிய வில்சனுக்கு எதிரான மனுவை விசாரித்து வரும் புதுவை நீதிமன்ற நீதிபதி சேரலாதன், மாஹேவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. நீதிமன்ற பதிவாளர் வெளியிட்ட அறிப்பாணையில் கூறப்பட்டுள்ளதாவது:- புதுவை நீதிமன்ற ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு வி சேரலாதன், புதுவை யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட மாஹே மாவட்ட முன்சீப் மற்றும் ஜுடிசியல் மாஜிஸ்திரேட் ஆக மாற்றப்படுகிறார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மரிய வில்சனுக்கு எதிரான வழக்கில் சமரச தீர்வு மையத்தில் உடன்பாடு எட்டப்படாததால் அமைச்சர் மரிய வில்சனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், அவருக்கு எதிரான வழக்கை விசாரித்து வரும் நீதிபதி பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளது கவனம் பெற்றுள்ளது.