புதுச்சேரி-சென்னை பயண நேரம் இரண்டரை மணி நேரமாக குறைகிறது.. ஈசிஆரில் விரைவில் நல்ல செய்தி

  • புதுச்சேரி: புதுச்சேரி செல்வதற்கு இரண்டு பாதைகள் பிரதானமாக உள்ளது. ஒன்று தாம்பரம், செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக செல்வது.. இதுதான் பிரதான பாதையாகும். அடுத்ததாக கடற்கரையை ஒட்டியே செல்லும் ஈசிஆர் சாலை.. இந்த சாலை என்பது பிரதான சாலை போல் நெரிசல் இருக்காது என்பதால், வேகமாக சென்றுவிட முடியும். ஆனால் இன்னும் 4வழிச்சாலையாக முழுமையாக மாறவில்லை.. இந்த சூழலில் மகாபலிபுரம்-புதுச்சேரி இடையே 4-வழிச்சாலை பணிகள் முடிவடையும்போது பயணம் இரண்டரை மணி நேரமாக குறையும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணைய சென்னை மண்டல அதிகாரி வீரேந்திர சாம்பியால் கூறினார்

    Advertisement

    புதுச்சேரி அரசின் செய்தி விளம்பரத்துறை மற்றும் மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் இணைந்து செயற்கை நுண்ணறிவு மூலம் போலி செய்திகளை கண்டறிதல் என்ற பயிற்சி முகாம் சன்வே ஓட்டலில் நேற்று காலை நடந்தது. இந்த முகாமில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய சென்னை மண்டல அதிகாரி வீரேந்திர சாம்பியால் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், " தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதுச்சேரியில் உள்ள சாலை இணைப்புகளை கணிசமாக மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சாலை பாதுகாப்பை அதிகரித்து, பயண நேரத்தை குறைப்பதுடன், பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை சாலைகளில் கொண்டு வருகிறது.

    Advertisement

    கிழக்கு கடற்கரை சாலை

    புதுச்சேரியில் என்.எச். 32, 332 மற்றும் 332 ஏ ஆகியவற்றை உள்ளடக்கிய 38 கி.மீ. தூரம் தேசிய நெடுஞ்சாலைகள் இருக்கிறது. புதுவையில் ரூ.1,619 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை மேம்பாட்டு பணிகளை நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த பணிகள் முடிவடையும் போது சென்னை-புதுச்சேரி வழித்தடம் வேகமாகவும், பாதுகாப்பாகவும் மாறும்.

    மகாபலிபுரம் புதுச்சேரி நான்கு வழிச்சாலை

    மகாபலிபுரம்-புதுச்சேரி இடையே 108 கி.மீ நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலை 332 ஏ வழித்தடம் 4 வழிச்சாலையாக மாற்றும் பணி ரூ.2,477 கோடியில் நடந்து வருகிறது.பயண நேரம் குறையும். இந்த பணிகள் முடிந்தவுடன் கிழக்கு கடற்கரை வழித்தடம் வழியாக சென்னை-புதுச்சேரி பயண நேரம் சுமார் 4 மணி நேரத்திலிருந்து இரண்டரை மணி நேரமாக குறையும்.

    Advertisement

    புதுச்சேரியில் உயர்மட்ட பாலம்

    இந்த சாலை பயன்பாட்டிற்கு வரும் போது புதுச்சேரி நகர்ப்புறத்தில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும். புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை 32-ல் நகர்ப்புறத்தை 3 கி.மீ அழகுபடுத்த ரூ.4.25 கோடியில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி இந்திரா காந்தி சதுக்கம் மற்றும் ராஜீவ் காந்தி சதுக்கத்தை இணைக்கும் 3.88 கி.மீ நீள உயர்மட்ட பாலம் கட்ட ரூ.436 கோடிக்கு ஒப்பந்த ஆணை வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கான கட்டுமான பணி விரைவில் தொடங்கி 30 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மதுரவாயல் துறைமுகம் பாலம்

    நாட்டின் முதல் நீளமான 21 கி.மீ. தூரம் சென்னை துறைமுகம்- மதுரவாயல் மேம்பாலப் பணி ரூ.5,600 கோடியில் நடந்து வருகிறது. இதில் தற்போது 22 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. மேலும் கூவம் ஆற்றின் மேல்புறமும் 15.5 கி.மீ. தூரத்துக்கு இந்த மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. மழைக்காலத்தில் அதாவது செப்டம்பர் மாதம் முதல் ஜனவரி வரை இந்தப் பணிகள் ஆற்றுப் பகுதியில் நடக்காது.மேலும் இந்தத் திட்டம் மார்ச் 2029-க்குள் நிறைவு பெறும். நடப்பு ஆண்டில் ரூ.3098 கோடியில் செங்கல்பட்டு- திண்டிவனம் நெடுஞ்சாலையை 6 வழிச் சாலையாக மேம்படுத்தவும் உத்தேசிக்கப்பட்டிருக்கிறது திண்டிவனம்-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையை விபத்து நேரிடாத சாலையாக ரூ.147 கோடியில் 7 இடங்களில் பாலம் கட்ட உள்ளோம்" இவ்வாறு கூறினார்.

    English Summary

    Virendra Champial, an official from the Chennai region of the National Highways Authority, stated that the travel time between Mahabalipuram and Puducherry would be reduced to two and a half hours once the four-lane highway project is completed.