புதுச்சேரி: தூத்துக்குடியை சேர்ந்த ராஜா என்பவர், ரூ.6 கோடி தங்க புதையலுக்கு ஆசைப்பட்டு ரூ.20 லட்சத்தை இழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தங்க காசுகளுக்கு பதில், பித்தளை காசுகளை கொடுத்து ராஜாவை மர்ம நபர் ஏமாற்றியிருக்கிறார்.
தூத்துக்குடியைச் சேர்ந்தவர் ராஜா இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த மாதம் 21-ம் தேதி தொலைபேசியில் அழைப்பு வந்துள்ளது.
அதில் பேசியவர் தங்களிடம் 6 கோடி ரூபாய் மதிப்புள்ள 6 கிலோ தங்க காசுகள் கொண்ட புதையல் இருப்பதாகவும் அதை குறைந்த விலைக்கு விற்பதாகவும் தெரிவித்துள்ளனர். தங்க புதையலுக்கு ஆசைப்பட்ட தூத்துக்குடி ராஜாவை, தொலைபேசியில் பேசிய மர்ம நபர்கள் புதுச்சேரி தொண்டமாநத்தம் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருமாறு அழைத்துள்ளனர். இதனை நம்பி தங்கப் புதையலுக்கு ஆசைப்பட்ட ராஜா, 20 லட்ச ரூபாய் பணத்துடன் புதுச்சேரி தொண்டமாநத்தம் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றிருக்கிறார். அப்போது அந்த கும்பல் புதையல் என்று கூறி.. ஒரு பித்தளை சொம்பை அவரிடம் கொடுத்து இதனை உடனடியாக பிரிக்க வேண்டாம் சிறிது நேரம் கழித்து பிரித்து பார்க்கவும் என்று கூறி, 20 லட்ச ரூபாய் பணத்தையும் பெற்றுக் கொண்டு மாயமானது. அப்பொழுது புதையலை பெற்றுக் கொண்ட ராஜா காரில் அமர்ந்து கொண்டு ஆசை ஆசையாக பிரித்து பார்க்கும் பொழுது அதில் இருந்த அனைத்தும் தங்க புதையல் அல்ல பித்தளை காசுகள் என்று தெரியவந்தது. இதனால் தாம் ஏமாந்ததை உணர்ந்த ராஜா வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கடலூர் துறைமுகம் கொடிக்கால் குப்பத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 6 லட்சம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்து விசாரித்தனர், மேலும் இவருடன் தொடர்புடைய புதுச்சேரி அம்மனாங்குப்பத்தைச் சேர்ந்த 15 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். தங்கப் புதையலுக்கு ஆசைப்பட்டு 20 லட்ச ரூபாயை இழந்த வியாபாரியின் சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.