காரைக்கால்: காரைக்கால் அருகே வீடுகள் மற்றும் சாலைகளில் ஆமணக்கு அரைகாவடிப் புழுக்கள் இருப்பதால் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
காரைக்கால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பருவமழைக் காலத்தில் தோன்றும் அரிய வகை ஆமணக்கு அரைகாவடிப் புழுக்கள் அதிகளவில் காணப்படுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஆமணக்கு இலைகளை உண்ணக்கூடிய இந்த வகை புழுக்கள், வீடுகள் மற்றும் வீடுகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள இலைகள், வீட்டுச் சுவர்கள் மற்றும் சாலைகளில் அதிகளவில் ஊர்ந்து செல்வதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். வீடுகளைச் சுற்றி அதிகளவில் புழுக்கள் காணப்படுவதால், வீட்டை விட்டு வெளியே வருவதற்கே அச்சமாக இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், வீடு முழுவதும் புழுக்களின் தொல்லை அதிகரித்துள்ளதால் இரவு நேரங்களில் பாதுகாப்பாகத் தூங்க முடியவில்லை என்றும் அவர்கள் கூறினர். குறிப்பாக, சமையலறை உள்ளிட்ட பகுதிகளிலும் இந்தப் புழுக்கள் சுற்றித் திரிவதால், அன்றாட சமையல் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். எனவே, தங்கள் பகுதிகளில் அதிகளவில் காணப்படும் ஆமணக்கு அரைகாவடிப் புழுக்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரை காவடி புழுக்கள் அரை வட்ட வடிவில் நெளிந்து நகர்வதால் இந்த புழுக்களுக்கு இந்த பெயர் வந்துள்ளது. முதிர்ந்த முழுக்கள் 60 மி.மீ வரை வளரும். கருப்பு நிறத்தில் இருக்கும். ஆங்காங்கே வரிகளும் இருக்கும். இந்த புழுக்கள் ஆமணக்கு இலைகளை அதிகம் உண்ணும். இலைகள் முற்றிலும் உதிர்ந்துவிட்டால் தாவரங்களில் உணவை உற்பத்தி செய்யும் ஒளிச்சேர்க்கை பாதிக்கப்படுகிறது. ஆமணக்கு மகசூல் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் ஏற்படும்.