உயிருக்கு போராடியவரை சொந்த காரில் மருத்துவமனைக்கு அனுப்பிய சி.விஜயபாஸ்கர்! புதுகையில் நெகிழ்ச்சி

  • புதுக்கோட்டை: தீபாவளி நேரத்தில் உயிருக்கு போராடியவரைத் தனது சொந்த வாகனத்தில் மீட்ட முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அவரை மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு, அரை மணி நேரத்திற்கும் மேலாக நடுரோட்டில் காத்திருந்த சம்பவம் அங்கிருந்தோரை நெகிழ்ச்சியடையச் செய்தது.

    Advertisement

    தீபாவளியை முன்னிட்டு புதுக்கோட்டையில் பல்வேறு அலுவல் பணிகளை முடித்துவிட்டு, தனது சொந்தத் தொகுதியான விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்குத் திரும்பிக் கொண்டிருந்த முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர், அடப்பக்காரச் சத்திரம் அருகே சென்றபோது இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதி ஏற்பட்ட கோர விபத்தைக் கண்டார்.

    Advertisement

    இந்த விபத்தில் மூன்று பேர் பலத்த காயங்களுடன் சாலையில் கிடந்தனர். அவர்கள், ஆரியூரைச் சேர்ந்த சரவணன் மற்றும் அவரது மகன் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்திருந்தனர். அதே விபத்தில் எல்லையப்பட்டியைச் சேர்ந்த முத்து என்ற இளைஞர் மிகக் கடுமையாகக் காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்தார்.

    வேட்டியை மடித்து கட்டி..

    இந்தக் காட்சியைக் கண்ட சி.விஜயபாஸ்கர், ஒரு நொடியும் தாமதிக்காமல் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு, வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு காயமடைந்தவர்களிடம் ஓடோடிச் சென்றார். மருத்துவர் என்ற தனது கடமையை உணர்ந்து, காயமடைந்தவர்களுக்குத் தானே முதலுதவி அளித்தார். அவர்களின் முகம் மற்றும் உடலில் படிந்திருந்த ரத்தத்தைத் தனது துண்டால் துடைத்து, உயிரைக் காப்பாற்றத் தேவையான உடனடி உதவிகளைச் செய்தார்.

    Advertisement
    ஸ்வீட், டிபன் பாக்ஸ், விசில்.. தீபாவளி பரிசு ரெடி.. விராலிமலை தொகுதி முழுக்க கொடுக்கும் விஜயபாஸ்கர்!

    ஆம்புலன்ஸ்

    குறிப்பாக, எல்லையப்பட்டியைச் சேர்ந்த முத்து மிகவும் மோசமான நிலையில், உயிருக்கு ஆபத்தான சூழலில் இருந்ததால், ஆம்புலன்ஸுக்காகக் காத்திருக்காமல் தனது சொந்த வாகனத்திலேயே அவரை ஏற்றி உடனடியாகப் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

    தொடர்ந்து, ஆரியூரைச் சேர்ந்த சரவணன் மற்றும் அவரது மகன் ஆகிய இருவருக்கும் முதலுதவி அளித்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.

    புதுக்கோட்டை மருத்துவமனை

    இதுமட்டுமின்றி, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, விபத்தில் காயமடைந்த மூவருக்கும் எவ்விதத் தாமதமுமின்றி உரிய அவசர சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

    Advertisement
    ₹35.79 கோடி சொத்துக்குவிப்பு வழக்கு! தவெக சி.விஜயபாஸ்கர் மற்றும் மனைவிக்கு அமலாக்கத்துறை சம்மன்!

    விபத்து

    விபத்து நடைபெற்ற இடத்தில் போக்குவரத்தையும் சீர் செய்து, காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக அடப்பங்காரச் சத்திரம் பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாகச் சாலையிலேயே காத்திருந்தார். மருத்துவமனைக்குச் சென்ற தனது சொந்த வாகனம் திரும்பி வந்த பிறகே அங்கிருந்து புறப்பட்டு வீடு திரும்பினார்.

    நெகிழ்ச்சி

    தீபாவளித் திருநாளில் தனது சொந்தப் பணிகளை முடித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த வேளையிலும், சாலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடியவர்களைக் கண்டதும் ஓடோடிச் சென்று உதவிய சி.விஜயபாஸ்கரின் இந்த செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் பாராட்டையும் ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    தீபாவளி

    தீபாவளி பண்டிகையையொட்டி விராலிமலை தொகுதிக்குள்பட்ட மக்களுக்கு இனிப்புகளை விஜயபாஸ்கர் கொடுத்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. கடந்த 2026 சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற சி.விஜயபாஸ்கர், எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி காரணமாக திடீரென தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தார். தற்போது விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த தொகுதியில் இடைத்தேர்தலில் சி.விஜயபாஸ்கர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என சொல்லப்படுகிறது, இந்த நிலையில் அவர் தேர்தலை முன்னிட்டே மக்களுக்கு இனிப்பு வழங்கினார் என திமுக, தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.