முதலில் மகன்.. பின்னர் தந்தை.. விராலிமலை தொகுதியில் திமுகவினரை கொத்தாக தூக்கும் விஜயபாஸ்கர்!

  • புதுக்கோட்டை: விராலிமலை இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அதிமுகவினரை தொடர்ந்து திமுகவினரையும் விஜயபாஸ்கர் தன் பக்கம் இழுக்க தொடங்கியுள்ளார். கடந்த வாரம் திமுகவில் இருந்து பதவி பறிக்கப்பட்ட சந்திரனை நேரில் சந்தித்து தவெகவுக்கு அழைத்துள்ளார். அவரது மகன் இளைய சூரியனிடம் அமைச்சர் பர்வேஸ் பேசி தந்தையை கட்டாயம் தவெகவுக்கு அழைத்து வாருங்கள் என்றும் கூறியுள்ளார்.

    Advertisement

    தமிழ்நாட்டில் அடுத்ததாக விராலிமலை, கரூர், திருச்சி கிழக்கு, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இந்த மாத இறுதியில் நீதிமன்ற தீர்ப்பு வெளியான பின், இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே முதல்வர் விஜய் இடைத்தேர்தல் நடக்கவுள்ள மாவட்டங்களுக்கு பயணம் செய்து ரோடு ஷோவை தொடங்க உள்ளார்.

    Advertisement

    அதேபோல் விராலிமலை தொகுதியில் தவெக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் களமிறங்க உள்ளார். இது அனைவருக்கும் தெரிந்த ரகசியம் தான். ஏற்கனவே விராலிமலை தொகுதியில் சுவர் விளம்பரங்கள் பட்டையை கிளப்புகின்றன. அதுமட்டுமல்லாமல் தவெகவில் இணைந்த கையோடு, அதிமுக நிர்வாகிகளை சல்லடை போட்டு தவெக பக்கம் இழுத்து சென்றார் விஜயபாஸ்கர்.

    தற்போது விஜயபாஸ்கரின் பார்வை திமுக பக்கம் திரும்பி இருக்கிறது. அதிருப்தியில் இருக்கும் திமுகவினரை தவெக பக்கம் இழுக்கும் பணிகளை தொடங்கியுள்ளார். கடந்த வாரம் திமுக தரப்பில் விராலிமலை கிழக்கு ஒன்றியச் செயலாளர் சத்தியசீலன் மற்றும் அன்னவாசல் தெற்கு ஒன்றியச் செயலாளர் சந்திரன் ஆகியோரை பொறுப்பில் இருந்து நீக்கியது.

    Advertisement

    அவர்களுக்கு பதிலாக மா.பாண்டியன் மற்றும் சுந்தர் ராஜன் ஆகியோரை நியமனம் செய்தது. அன்னவாசல் தெற்கு ஒன்றியச் செயலாளர் சந்திரன் மகன் இளைய சூரியன் கடந்த வாரத்தில் தவெகவில் இணைந்தார். திமுக பேரூர் செயலாளர் முகமது ரிசா மற்றும் இளைய சூரியன் இருவரையும் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தவெகவில் ஐக்கியமாகினர். இதன் புகைப்படங்கள் வெளியாகின.

    இதன்பின் திமுக தலைமை நடவடிக்கை எடுத்தது. அதனால் அதிருப்தி அடைந்த சந்திரன், அமைதி காத்துள்ளார். இதன்பின் விஜயபாஸ்கர் நேரடியாக சந்திரன் வீட்டிற்கு சென்று, நீங்கள் அதிமுக பக்கம் செல்ல மாட்டீர்கள்.. தவெகவுக்கு வாருங்கள்.. நிச்சயமாக அத்தனை மரியாதையும் கிடைக்கும் என்று அழைப்பு விடுத்துள்ளார். இதனால் இன்று விஜயபாஸ்கர் முன்னிலையில் சந்திரன் தவெகவில் ஐக்கியமாக உள்ளார்.

    Advertisement

    திமுக தரப்பில் ஏற்கனவே சந்திரன் மற்றும் அவரது மகன் இளைய சூரியன் விஜயபாஸ்கருக்காக பணியாற்றியவர்கள் தான். திமுகவில் இருந்து கொண்டு மறைமுகமாக பணியாற்றியவர்கள், தற்போது நேரடியாக பணியாற்ற சென்றுவிட்டார்கள் என்று விமர்சித்துள்ளனர். இதனால் விராலிமலை தொகுதியில் திமுக பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    English Summary

    Ex-Minister C. Vijayabaskar Invites Ousted DMK Leader Chandran to Join TVK Ahead of Viralimalai Bypoll