தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள்

  • புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் மாங்குடியில் நடைபெற்ற நியாயவிலைக் கடை திறப்பு விழாவில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தவெக நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் அளித்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சியில் புறக்கணிக்கப்பட்டதாக உணர்ந்த சில திமுக நிர்வாகிகள் அதிருப்தியுடன் வெளியேறியதால், உள்ளூர் அரசியல் வட்டாரங்களில் இந்த விவகாரம் பேசுபொருளாக மாறியுள்ளது.

    Advertisement

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாங்குடி கிராமத்தில், காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் எம்.பி. பரிந்துரையில் ரூ.12.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாயவிலைக் கடை கட்டடத்தின் திறப்பு விழா திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

    Advertisement

    புதிய கட்டடத்தை திறந்து வைக்க ப.சிதம்பரம் நேரில் வந்திருந்தார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள், உள்ளூர் திமுக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் உள்ளிட்ட திமுகவினர் மற்றும் தவெக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்விடத்திற்கு வந்த ப.சிதம்பரம், ரிப்பன் வெட்டும் நிகழ்வின் போது தவெக இளைஞர்களை அழைக்குமாறு கூறியதாகக் கூறப்படுகிறது.

    அதனைத் தொடர்ந்து குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்விலும் தவெக நிர்வாகிகளை அழைக்குமாறு ப.சிதம்பரம் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. அதன் பேரில் தவெகவைச் சேர்ந்த இருவர் குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்வில் பங்கேற்றனர். இதனால் அதிருப்தியடைந்த சில திமுக நிர்வாகிகள் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தை விட்டு வெளியேறி சாலையோரத்தில் நின்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    பின்னர் நியாயவிலைக் கடையின் விற்பனையைத் தொடங்கி வைத்த ப.சிதம்பரம், நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் அவர் சுருக்கமாக பதிலளித்தார். காங்கிரஸ் தேசிய தலைவர் பதவி தமிழ்நாட்டிற்கு வர வாய்ப்புள்ளதாகவும், அந்தப் பதவி உங்களுக்கு கிடைக்குமா என்றும் கேட்கப்பட்டபோது, "கிடைத்தால் உங்களுக்கே கொடுத்துவிடுகிறேன்" என்று நகைச்சுவையாக பதிலளித்தார்.

    மேலும், பாஜக மாநிலங்களவை உறுப்பினர் எண்ணிக்கை மூன்றில் இரண்டு மடங்காக உயரும் என கூறப்படுவது குறித்து கேட்கப்பட்டபோது, "உயராது" என்று மட்டும் பதிலளித்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

    இதற்கிடையில், நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய திமுக நிர்வாகிகள் சிலர் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். "இத்தனை ஆண்டுகளாக காங்கிரஸுக்கு துணையாக இருந்தது நாங்கள்தான். ஆனால் தற்போது எங்களை புறக்கணித்து, தவெகவினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நாளை அவரது மகனுக்காக வாக்கு கேட்க வர வேண்டியது எங்களிடம்தானே?" என அவர்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர். மாங்குடியில் நடைபெற்ற இந்த நிகழ்வு, உள்ளூர் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

    English Summary

    A political stir erupted at a fair price shop inauguration in Mangudi, Pudukkottai, after former Union Minister P Chidambaram allegedly gave prominence to TVK members during the event. Some DMK functionaries reportedly expressed dissatisfaction and walked out, claiming they were sidelined despite their long-standing support for Congress.