புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட தவெக செயலாளராக அண்மையில் நியமிக்க முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு எதிராக முத்தரையர் சமுதாயக் கூட்டமைப்பு என்ற பெயரில் புதுக்கோட்டையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் முன்னாள் எம்.எல்.ஏ சி.விஜயபாஸ்கரைக் கண்டித்து விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும், ஆலங்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் தன.விமல் அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய தேர்தல் நிதியை கொடுக்காமல் ஏமாற்றி வரும் விஜயபாஸ்கர் உடனடியாகப் பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
அ.தி.மு.க-வில் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராவும், முக்கியமான அமைச்சராகவும் இருந்தவர் சி.விஜயபாஸ்கர். புதுக்கோட்டை மாவட்ட அரசியலில் தனக்கெனத் தனிச் செல்வாக்குடன் இருக்கிறார். இவர் விராலிமலை தொகுதி எம்எல்ஏவாக இருந்து வந்தார். ஜெயலலிதா காலத்திலும் சரி, எடப்பாடி பழனிசாமி காலத்திலும் அமைச்சராக இருந்தார். 2021 முதல் 2026 வரை திமுக ஆட்சியில் இருந்த போதிலும், எடப்பாடி பழனிசாமிக்கு தளபதி போல் இருந்து வந்தார்.
ஆனால் சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு மனம் மாறிய அவர், தவெக பக்கம் போகலமா என்று யோசிக்க தொடங்கினார். இதற்காக கட்சியில் இணைவதற்கு முன்பாகவே தொகுதி முழுவதும் சென்று மக்களிடம் கருத்துக் கேட்டார். அத்துடன் மக்களைச் சந்தித்து நன்றி தெரிவிப்பதையும் பிரம்மாண்டமாக செய்தார். அதேபோல் ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களை அழைத்து மிகப்பெரிய அளவில் பிரியாணி விருந்தளித்தார். அதேபோல் அண்மையில் புதுக்கோட்டையில் இருந்து சென்னை பனையூருக்கு ஏராளமான வாகனங்களில் பல ஆயிரம் பேரை அழைத்து சென்று தவெகவில் விஜயபாஸ்கர் இணைந்தார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு புதுக்கோட்டை மேற்கு மாவட்ட தவெக 'அமைப்புச் செயலாளர்' பதவி வழங்கப்பட்டுள்ளது. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்ட விஜயபாஸ்கர், விரைவில் விராலிமலையில் போட்டியிடுவார் என்றே கூறப்படுகிறது.. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு எதிராக முத்தரையர் சமுதாயக் கூட்டமைப்பு என்ற பெயரில் புதுக்கோட்டையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் முன்னாள் எம்.எல்.ஏ சி.விஜயபாஸ்கரைக் கண்டித்து விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அந்தபோஸ்டர்களில் இடம் பெற்றுள்ள வரிகள் விவரம்: ஆலங்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் தன.விமல் அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய தேர்தல் நிதியை கொடுக்காமல் ஏமாற்றி வரும் விஜயபாஸ்கர் உடனடியாகப் பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். பணத்தைக் கொடுக்கா விட்டால் அவரது இல்லத்தை நோக்கி முற்றுகைப் போராட்டம் விரைவில் நடைபெறும். குட்கா மற்றும் குவாரிகள் என பல குறுக்கு வழிகளில் சம்பாதித்தது போதாதா...? பொது மக்களுக்கு பாதிப்படையும் விதத்திலும் சட்ட விதிகளுக்கு எதிராகவும் செயல்படும் 30க்கும் மேற்பட்ட குவாரிகள் தொடர்புடைய விஜயபாஸ்கரை தமிழக கட்சியின் தலைவர் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் கண்களுக்குத் தெரியாதா...? வெளியீடு: முத்தரையர் சமுதாயக் கூட்டமைப்பு, தமிழ்நாடு" இவ்வாறு போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சர்ச்சை தொடர்பாக விஜயபாஸ்கர் விரைவில பதில் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் முத்தரையர் சமுதாயத்திற்கு விஜயபாஸ்கர் தொடர்ந்து துரோகம் செய்து வருகிறார் என்றும் குற்றம்சாட்டப்பட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கிறது.
விராலிமலை தொகுதி மீட்புக் குழு