ஜோசியர் சொன்னதால் புதுக்கோட்டை அரசு நலத்திட்ட நிகழ்ச்சி ரத்தா? - எம்.எல்.ஏ முத்துராஜா கேள்வி!

  • புதுக்கோட்டை: "மக்கள் பணத்தைக் கொட்டி செலவழித்து ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, ஜோசியர் சொன்னார் என்ற சென்டிமென்ட் காரணமாக கடைசி நேரத்தில் அரசு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதா?" என புதுக்கோட்டை திமுக எம்.எல்.ஏ முத்துராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

    Advertisement

    புதுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கவும், ரூ.100 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கும் அரசு விழாவிலும் முதல்வர் விஜய் இன்று கலந்து கொள்கிறார். இதற்காக திருச்சி விமான நிலையத்தில் இருந்து திருச்சி - காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் புதுக்கோட்டை வரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    புதுக்கோட்டை பேருந்து நிலையத்தை திறந்து வைத்து விட்டு அங்கிருந்து ரோடு ஷோ மூலம் ஆயுதப்படை மைதானத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவது என முதலில் திட்டமிடப்பட்டது. இதற்காக ஆயுதப்படை மைதானத்தில் பிரம்மாண்ட பந்தல், சுமார் 2,000 பேர் அமர்வதற்கான இருக்கை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வந்தன.

    அதில், ஆயுதப்படை மைதானத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை நடத்த வேண்டாம் என முதல்வரின் பாதுகாப்பு படையினர் கொடுத்த தகவலின் அடிப்படையில், அந்த இடத்தை கைவிட்டு ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடத்த நேற்று இரவு திட்டமிடப்பட்டது.

    Advertisement

    இதனையடுத்து, இரவு 10 மணிக்கு பிறகு அவசரமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களை கொண்டு தூய்மை செய்யும் பணிகள் தொடங்கி விடிய விடிய நடந்தது. மாவட்ட ஆட்சியர் அருணா அவசர ஆலோசனைகளை அதிகாரிகளுடன் செய்திருந்தார். அமைச்சர்களும் நள்ளிரவிலேயே ஆய்வுகள் செய்தனர்.

    இந்த நிலையில் இன்று முதலமைச்சரின் பயணத்திட்டம் மாற்றப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுமார் 100 பேருக்கு மட்டுமே நலத்திட்டங்கள் வழங்கி பேருந்து நிலையம் சென்று திறக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில் புதுக்கோட்டை எம்.எல்.ஏ முத்துராஜா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஜோசியர் சொன்னதால் புதுக்கோட்டை அரசு நலத்திட்ட நிகழ்ச்சி ரத்தா? புதுக்கோட்டையில் அரசு நலத்திட்டங்களை வழங்குவதற்காக ஆயுதப்படை மைதானத்தில் மேடை உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், கடைசி நேரத்தில் நிகழ்ச்சியை இந்த ஆட்சியாளர்கள் ரத்து செய்து இருக்கிறார்கள்.

    Advertisement

    ஆயுதப்படை மைதானத்திற்குப் பதிலாக ஆட்சியர் அலுவலகத்திலேயே சிறிய அளவில் நிகழ்ச்சியை நடத்தவுள்ளதாக தெரிகிறது. ஏன் இந்த மாற்றம்? மக்கள் பணத்தைக் கொட்டி செலவழித்து ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, ஜோசியர் சொன்னார் என்ற சென்டிமென்ட் காரணமாக கடைசி நேரத்தில் அரசு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதா?

    நிகழ்ச்சி மட்டுமில்லை, முதலமைச்சர் வருகிறார் என்பதற்காக இன்றைக்கு நடைபெறவிருந்த கல்லூரி செமஸ்டர் தேர்வைக் கூட அரசு தரப்பில் ஒத்தி வைத்திருக்கிறார்கள்.

    படி படி என்றது திராவிட மாடல். வந்து கொடி பிடி என்கிறதா இந்த Reels Model? உலக சிக்கன நாள் அன்று சிக்கனத்தின் அவசியம் பற்றி ஊருக்கு உபதேசம் செய்தார் CM சார்.

    Advertisement

    ஆனால், இன்றைக்கு அவர் வரும் வழியெங்கும் சுமார் 40 கிமீ தூரத்துக்கு பல கோடி ரூபாய் அளவுக்கு வீணாக செலவு செய்து தடுப்புகளை வைத்துள்ளார்கள். இப்படி ஊரான் வீட்டு நெய்யில் ஸ்வீட் செய்வது நியாயமா? ஆட்சி நடத்த Astrologer எதற்கு CM Bro?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

    English Summary

    "Has a government event been cancelled at the last minute—despite all the arrangements made at the cost of public funds—simply due to a sentiment rooted in what an astrologer said?" questioned Muthuraja, the DMK MLA from Pudukkottai.