புதுக்கோட்டை நாத்தனார்களின் கள்ளக்காதலை காட்டிக்கொடுத்த கர்ப்பிணிப் பெண்.. இப்படியா ஆகணும்

  • புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், மேட்டுப்பட்டியைச் சேர்ந்த பாண்டித்துரை என்பவரது மனைவி சந்தியா, பிரெட் சாப்பிட்டபோது மூச்சுத்திணறியதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்கள். பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது மரணம் இயற்கையானது இல்லை என்பது தெரியவந்தது. இந்த வழக்கில் நாடகமாடிய அவரது நாத்தனார்கள், மாமியார் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    Advertisement

    கள்ளக்காதல் என்ற திருமணத்தை மீறிய உறவு உள்ளவர்கள், பெற்ற பிள்ளை, உடன் பிறந்தவர்கள், நண்பர்கள், பெற்றோர்,மாமானார், நாத்தனார் என யாருக்கும் அஞ்சுவது இல்லை.. தன்னை பற்றி உண்மை தெரிந்தவர்களை அவர்கள் கொல்லவும் தயங்குவது இல்லை.. தன்னை பற்றி உண்மை தெரிந்தவர்கள் ஊருக்கு அம்பலப்படுத்த முயன்றால் அவர்கள் எந்த எல்லைக்கும் போவார்கள் என்பதற்கு புதுக்கோட்டை சம்பவம் உதாரணம் ஆகும். விரிவாக பார்ப்போம்.

    Advertisement

    புதுக்கோட்டை மாவட்டம், மேட்டுப்பட்டியைச் சேர்ந்த 35 வயதாகும் பாண்டித்துரை என்பவர் நெடுஞ்சாலை பணிகளில் ஒப்பந்ததாரராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சந்தியாவுக்கு 21 வயது ஆகிறது. இவர் 6 மாத கர்ப்பிணியாக இருந்தார். பாண்டித்துரையின் சகோதரிகள் பாண்டி மீனா (33), பொற்கொடி (29) ஆகியோர் தங்களது கணவர்களை பிரிந்து பாண்டித்துரை வீட்டில் வசித்து வந்துள்ளார்கள். இந்த நிலையில் பாண்டித்துரை வேலைக்காக ஈரோடு சென்றுள்ளார்.

    கடந்த 30-ந்தேதி அதிகாலை 6.30 மணிக்கு சந்தியா காலை உணவாக பிரெட் சாப்பிடும்போது விக்கல் ஏற்பட்டுள்ளதாம். அதனால் மூச்சுத்திணறல் உண்டாகியதாக கூறி, அவரை வீட்டில் இருந்தவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்கள். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறினார்கள். இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    Advertisement

    இதற்கிடையே கடந்த செப்டம்பர் 30ம் தேதி மாலை புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், சந்தியா இயற்கை முறையில் இறக்கவில்லை என்பதும், கொலை செய்யப்பட்டிருப்பதும் உறுதியானது. இதனைத் தொடர்ந்து, போலீசார் சந்தேக மரண வழக்கினை கொலை வழக்காக மாற்றினர். அதன்பின்னர் போலீசார் பாண்டித்துரை உறவினர்களிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள் .

    விசாரணையில், நாத்தனார்கள் பாண்டி மீனா, பொற்கொடி, மாமியார் பானுமதி (50) மற்றும் உறவினர்கள் கனிமொழி (27), செல்வி (38), கார்த்தி (24) ஆகிய 6 பேரும் சேர்ந்து சந்தியாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    Advertisement

    மேலும் கைது செய்யப்பட்ட 6 பேரும் விசாரணையில் போலீசாரிடம் தெரிவித்த கருத்துக்கள் வெளியாகி உள்ளது. சந்தியாவின் நாத்தனார்களான பாண்டிமீனா, பொற்கொடி ஆகிய இருவரும் அந்த பகுதியில் கள்ளக்காதல் தொடர்பு வைத்திருந்தார்களாம். இது குறித்து சந்தியா, தனது கணவரிடம் கூறியிருக்கிறார். இதையடுத்து பாண்டித்துரை தனது சகோதரிகளை கண்டித்துள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த சந்தியாவின் நாத்தனார்களான பாண்டிமீனா, பொற்கொடி ஆகிய இருவரும் சந்தியாவை கொலை செய்ய திட்டமிட்டனர். பாண்டித்துரை வெளியூர் சென்றதை பயன்படுத்தி நாத்தனார்கள், மாமியார் மற்றும் உறவினர்கள் ஒன்றுசேர்ந்து தூங்கிக் கொண்டிருந்த சந்தியாவை துப்பட்டாவால் கழுத்தை நெரித்தும், தலையணையால் முகத்தை அழுத்தியும் கொடூரமாக கொலை செய்தார்களாம்.

    Advertisement

    இதையடுத்து கொலையை மறைத்து இயற்கை மரணம் போல காட்டுவதற்காக, சந்தியாவின் வாயிலும், மூக்கிலும் பிரெட்டை திணித்தும், பாலை வாயிலும், மூக்கிலும் ஊற்றி இருக்கிறார்களாம். பின்னர் பிரெட் சாப்பிடும்போது விக்கல் ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்து விட்டார் என்று நாடகமாடியுள்ளனர். போலீஸ் முன்னிலையிலும், மருத்துவர்கள் முன்னிலையிலும் இவர்கள் நாடகம் நம்பும் வகையில் இருந்துள்ளது. ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையால் நாத்தனார்கள் அம்பலப்பட்டுள்ளனர்.

    English Summary

    What happened to the pregnant woman who exposed the love affairs of her sisters-in-law in Pudukkottai?