ராமநாதபுரத்தில் சார் பதிவாளருக்கு பணமழை.. இறுதியில் நம்பவே முடியாத இரண்டு சிக்கல்

  • இராமநாதபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த வாரம் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்த போது, சார்பதிவாளர் ராமநாதன் மற்றும் பத்திர எழுத்தர் அயூப்கான் ஆகியோர் பத்திரப்பதி வுக்கு ரூ.50 ஆயிரம் கேட்டு அதில் ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது கையும், களவுமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள் இவர்கள் நில மோசடி வழக்கிலும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

    Advertisement

    ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 32 வயதாகும் ஹாலிக் அலாவுதீன் என்பவர் சென்னையில் வசித்து வருகிறார். ராமநாதபுரம் அருகே குயவன்குடி கிராமத்தில் உள்ள ஒரு நிலத்தை தனது தாயார் பெயரில் பதிவு செய்ய விரும்பி உள்ளார். இதற்காக ராமநாதபுரம் வெளிப்பட்டினம் சார்பதிவாளர் ராமநாதனை அணுகி உள்ளார். அப்போது பத்திரப்பதிவு செய்ய சார்பதிவாளர் ராமநாதன், ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்டதாக சொல்லப்படுகிறது.

    Advertisement

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஹாலிக் அலாவுதீன் பேச்சுவார்த்தை நடத்தி ரூ.3 லட்சத்தை சார்பதிவாளரின் வங்கி கணக்கிலும், ரூ.17 லட்சத்தை சார்பதிவாளருக்கு நெருக்கமான அயூப்கான் என்பவரிடமும் வழங்கினாராம். இதையடுத்து கடந்த 18-ந்தேதி அன்று மீண்டும் பத்திரப்பதிவு சம்பந்தமாக சார்பதிவாளரை சந்தித்த போது, மேலும் ரூ.25 லட்சம் கொடுத்தால் மட்டுமே பத்திரப்பதிவு செய்யமுடியும் என சார்பதிவாளர் கூறினாராம்.

    பின்னர் மீண்டும் பேசி ரூ.10 லட்சம் குறைத்து ரூ.15 லட்சம் கேட்டதுடன், அதில் ரூ.3 லட்சம் ரொக்கமாக அயூப்கானிடமும், ரூ.12 லட்சத்தை குறிப்பிட்ட ஒரு வங்கி கணக்கிலும் செலுத்துமாறு கூறினாராம். ஆனால் மேலும் மேலும் பத்திரப்பதிவுக்காக லஞ்சம் கொடுக்க விரும்பாத ஹாலிக் அலாவுதீன், ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியபடி ஹாலிக் அலாவுதீன் ரசாயன பவுடர் தடவிய ரூ.3 லட்சத்தை கடந்த வாரம் வெளிப்பட்டினம் சார்பதிவாளர் அலுவலகத்தில் அயூப்கானிடம் கொடுத்தனுப்பினார்கள். அவர் வாங்கிய போது அங்கு மறைந்து நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அயூப்கான் (53) மற்றும் வெளிப்பட்டினம் சார்பதிவாளர் ராமநாதனை (59) கையும் களவுமாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Advertisement

    இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் அருகே 5 ஏக்கர் நிலம் அப்துல்காதர் என்பவர் பெயரில் இருக்கிறது. இந்த நிலத்தை போலி பத்திரம் தயாரித்து சிலர் பத்திரப்பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் அப்துல்காதரின் மகள் ஜமாலியா புகார் அளித்தார்.

    இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீசார் நடத்திய விசாரணையில் புதுமடம் வடக்குத்தெருவை சேர்ந்த முகம்மது அப்துல்காதர் உள்பட சிலர் கூட்டு பட்டா இருப்பது போல் அப்துல்காதர் இடத்திற்கான போலி ஆவணங்கள் தயாரித்து வெளிப்பட்டினம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ததை கண்டுபிடித்தனர். இந்த போலி பத்திரப்பதிவுக்கு சார்பதிவாளர் ராமநாதன், பத்திர எழுத்தர் அயூப் கான் ஆகியோர் உடந்தையாக இருந்ததாக விசாரணையில் தெரியவந்தது.

    Advertisement

    இதையடுத்து லஞ்ச வழக்கில் கைதான சார்பதிவாளர் ராமநாதன், பத்திர எழுத்தர் அயூப்கான் ஆகியோரை நில மோசடி வழக்கில் இராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இதனிடையே லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட ராமநாதனை இராமநாதபுரம் பத்திரப்பதிவு துறை டி.ஐ.ஜி. பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

    English Summary

    Sub-Registrar and Document Writer—already arrested in a bribery case in Ramanathapuram—arrested in a land fraud case.