ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பறம்பை பைந்தமிழ்ப் பேரவை சார்பில் முப்பெரும் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. அங்குள்ள வாணியர் உறவின் முறை திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவிற்கு, அமைப்பின் நிறுவனரும் துபாய் ஊடகவியலாளருமான முதுவை ஹிதாயத் தலைமை தாங்கினார். கௌரவத் தலைவர் மானுடப்பிரியன், தலைவர் பறம்பை இதயா ஆகியோர் முன்னிலை வகிக்க, பொதுச்செயலாளர் திருநீலகண்ட பூபதி அனைவரையும் வரவேற்றார்; இணைச் செயலாளர் இரா. சக்தி வாழ்த்திப் பேசினார்.
விழா தொடக்கத்தில் இதயராஜாவின் இன்னிசைக் கச்சேரியும், கே.எஸ். சிபிகா மற்றும் உ. கவின்நிலா ஆகியோரின் பரதநாட்டிய கலை நிகழ்ச்சிகளும் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. தொடர்ந்து, கவிஞர் மானுடப்பிரியன் தலைமையில் 'மனிதம் மலரட்டும்' என்ற தலைப்பில் கவியரங்கம் அரங்கேறியது. இதில் தேவகோட்டை இந்திரா சந்திரன், உரப்புளி நா. ஜெயராமன், சிவகெங்கை தமிழ்க்கனல், பழைய நெடுவயல் சி. கலையரசன், பாவலர் அ. தமிம், சிவகெங்கை காளி, மு. கதிரேசன் மற்றும் பொற்கிழிக் கவிஞர் மு. ஹிதாயத்துல்லா ஆகியோர் கவிதைகள் வாசித்தனர்.
இதனைத் தொடர்ந்து முதுகுளத்தூர் துரைப்பாண்டியன் நடுவராக இருக்க, 'தமிழரின் தனிப்பெரும் அடையாளத்தை தாங்கி நிற்பது மரபா? மாற்றமா?' என்ற தலைப்பில் அனல் பறக்கும் பட்டிமன்றம் நடைபெற்றது. மரபே அணியில் சூரிய பிரேமா, அன்பு ஆகியோரும், மாற்றமே அணியில் ஆ. வளர்மதி, பூ. செந்தாமரைச் செல்வி ஆகியோரும் பங்கேற்று வாதங்களை முன்வைத்தனர். கல்வி மற்றும் கலைத் துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர் டாக்டர் தாரிக் அஜீஸ் ஆசிரியர்களான டி. சிவகுருராஜா, பாவலர் சு. சோலைராஜா, நி. கோட்டை ஈஸ்வரன், க. ஆனந்தன் ஆகியோருக்கு 'பறம்பை நல்லாசிரியர் விருது' வழங்கிச் சிறப்பித்தார். நடனக் கலைஞர் சிபிகாவுக்கு 'நாட்டிய நிலா' விருதும், ஓய்வு பெற்ற ஆசிரியர் சி. செல்லத்துக்கு 'சேவைச்சுடர்' விருதும் வழங்கப்பட்டது. போட்டிகளில் வென்ற மாணவர்களுக்குப் பரிசுகளும் தரப்பட்டன. நூலகர் சண்முகவேல், எழுத்தாளர் ஆமினா முஹம்மத் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்யப்பட்டது. ஆசிரியர் ஆரோக்கிய ஜெயராணி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அ. அன்வர் ராஜா, தண்டாயுதபானி, நெ. இந்திரஜித் மற்றும் குழுவினர் நேர்த்தியாகச் செய்திருந்தனர்.