ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் ஆபீசுக்கு, கைகளில் தாம்பூலத் தட்டுகள், அதில் பழங்கள், காய்கறிகள், பூக்கள், இனிப்புகள் என விதவிதமான பொருட்களுடன், 50-க்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென வந்ததை பார்த்த அதிகாரிகள் ஒரு நிமிடம் குழம்பிப் போயினர்.. வழக்கமாக குறைதீர்க்கும் கூட்டத்துக்கு மக்கள் கோரிக்கை மனுவுடன் வருவார்கள்.. ஆனால், இவர்கள் வந்தது மனு கொடுக்க அல்ல.. நன்றி சொல்ல..!!!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீண்ட ஆண்டுகளாக வசித்து வரும் மக்கள், தங்களுக்கு சொந்தமான இடங்களில் வீடுகள் கட்டி வசித்து வந்தாலும் பட்டா கிடைக்காமல் சிரமப்பட்டு வந்தனர்..
இதில் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், சிறு, குறு வியாபாரிகள் உள்ளிட்ட பலரும் இருந்தனர். 150-க்கும் மேற்பட்டோருடன் தொடர்புடைய இந்த பட்டா பிரச்சினை பல வருடங்களாக நீடித்து வந்ததாக கூறப்படுகிறது. பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்கள் கடந்த மாதம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மா. சிவகுரு பிரபாகரனை நேரில் சந்தித்து மனு அளித்திருந்தனர்.. அதேபோல இந்த கோரிக்கை குறைதீர்க்கும் நாள் கூட்டத்திலும் முன்வைக்கப்பட்டது. தங்களது நிலங்களை அளவீடு செய்து, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பட்டா பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பதே அவர்களது முக்கிய கோரிக்கையாக இருந்தது. பொதுமக்களின் கோரிக்கையை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உடனடியாக கவனம் செலுத்தினார். சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி, நிலத்தை முறையாக அளவீடு செய்து உரிய தீர்வு காண வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன்படி கீழக்கரை வட்டாட்சியர் ராமசுப்பிரமணியன் தலைமையில் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் சர்வேயர்கள் அடங்கிய குழுவினர் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தார்கள்.. அதிகாரிகள் நிலத்தை அளவீடு செய்ததுடன், பட்டா வழங்குவதற்கான பணிகளையும் மேற்கொண்டனர். இதனால் பல வருடங்களாகவே நீடித்து வந்த மக்களின் கோரிக்கை தீர்வை நோக்கி நகர்ந்தது.. நீண்ட காலமாக தங்களது கோரிக்கையை வலியுறுத்தி வந்த மக்களுக்கு, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதற்காக மாவட்ட நிர்வாகத்துக்கும், சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவிக்க பொதுமக்கள் முடிவு செய்தனர். அதன்படி, 50-க்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் குழுவாக இணைந்து பூக்கள், பழங்கள், காய்கறிகள், இனிப்பு வகைகள் உள்ளிட்ட பொருட்களை தாம்பூலத் தட்டுகளில் சீர்வரிசையாக எடுத்துக்கொண்டு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்திருந்தார்கள். கலெக்டர் ஆபீஸில் வழக்கம்போல் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பொதுவாக இதுபோன்ற கூட்டங்களில் மக்கள் மனு கொடுப்பது, கோரிக்கை முழக்கங்கள் எழுப்புவது, ஆர்ப்பாட்டம் செய்வது, முற்றுகை போராட்டம் நடத்துவது போன்ற காட்சிகள்தான் இருக்கும்... ஆனால், இந்த முறை பெண்கள் சீர்வரிசை தட்டுகளுடன் வந்ததால் அங்கிருந்த அதிகாரிகள் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். யாருக்குமே ஒன்றுமே புரியவில்லை. இதனால் அங்கிருந்த அதிகாரிகள், அங்கு வந்த பெண்களிடம், எதுக்காக சீர்வரிசை தட்டுகளை கொண்டு வந்திருக்கிறீர்கள்? என்று விசாரித்தனர். அதற்கு அவர்கள், "காஞ்சிரங்குடி பகுதியில் எங்களது இடங்களில் வீடுகள் கட்டி பல வருடங்களாக வசித்து வருகிறோம்.. பட்டா கிடைக்காமல் பல காலமாகவே கஷ்டப்பட்டு விட்டோம்.. கலெக்டரிடம் மனு கொடுத்த பிறகு அதிகாரிகள் நேரடியாகவே வந்து நிலத்தை அளந்தார்கள்.. எங்களுக்கு பட்டா வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்தனர்.. எங்களது நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறும் நிலை ஏற்பட்டுள்ளது.. அதனால்தான் கலெக்டரை பார்த்து மகிழ்ச்சியுடன் நன்றி சொல்ல வந்திருக்கிறோம்" என்றனர்.. இதைக்கேட்டதுமே அதிகாரிகளுக்கு மேலும் வியப்பை தந்தது.. நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. பெண்கள் சீர்வரிசையுடன் வந்திருப்பது குறித்து கலெக்டருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை உள்ளே அனுமதிக்கும்படி கலெக்டர் சொல்லவும், அனைத்து பெண்களும் சீர்வரிசை தட்டுகளுடன் கலெக்டரிடம் சென்றனர்.. தாங்கள் கொண்டு வந்திருந்த சீர்வரிசை தட்டுகளை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி தங்களது நன்றியை தெரிவித்தனர். காஞ்சிரங்குடி கிராமத்தை சேர்ந்த அபுபக்கர் சித்திக் கலெடக்டரிடம் சொல்லும்போது, "நீண்டகால கோரிக்கையை ஏற்று பட்டா வழங்க நடவடிக்கை எடுத்த உங்களுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில்தான் பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை சீர்வரிசையாக கொண்டு வந்துள்ளோம்" என்றார்.. மக்கள் அன்புடன் கொண்டு வந்த சீர்வரிசை பொருட்களை மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரனும் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார். அப்போது கலெக்டர், "பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தும் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு பரிசீலிக்கப்பட்டு, உரிய தீர்வு காண மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும்" என்று நம்பிக்கை தந்ததுடன், "பெண்கள் கொண்டு வந்த பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட சீர்வரிசைப் பொருட்களை ஆதரவற்றோர் அல்லது முதியோர் இல்லங்களுக்கு வழங்கிவிடுங்கள்" என்றும் அறிவுறுத்தினார். இதனால் தங்களது பட்டா பிரச்சினைக்கு நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி தெரிவிக்க வந்த மக்கள் கொண்டு வந்த பொருட்களும் சமூக நலனுக்காக பயன்படுத்தப்படும் நிலை ஏற்பட்டது. வழக்கமாக கோரிக்கைகள், மனுக்கள், போராட்டங்கள் என பரபரப்பாக காணப்படும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இந்த முறை மக்கள் தங்களது கோரிக்கைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட மகிழ்ச்சியில் சீர்வரிசை தட்டுகளுடன் வந்து நன்றி தெரிவித்த காட்சி அங்கிருந்தவர்களை நெகிழ வைத்தது..!!!ராமநாதபுரம் கலெக்டர்
பட்டா, சர்வேயர் , நில அளவீடு
50-க்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்கள்
குழம்பிய அரசு அதிகாரிகள்
நெகிழ்ந்த கலெக்டர்
நன்றியும் மகிழ்ச்சியும்