செப்.,11 இமானுவேல் சேகரனார் குருபூஜை.. அக்.,30 முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி - குருபூஜை! 163 தடை!

  • ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் செப்டம்பர் 11ம் தேதி தியாகி இமானுவேல் சேகரனாரின் குருபூஜை விழா விழாவும், அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற இருக்கிறது. இதை அடுத்து அந்த மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதியை பாதுகாக்கும் வகையில் 163 பிரிவின் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் திருமகனார் என அழைக்கப்படும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழாவானது அக்டோபர் 30ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான மக்கள் திரளாக கலந்து கொள்வார்கள்.

    Advertisement

    முதலமைச்சர் தொடங்கி அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், மக்கள் கூட்டம் என இரண்டு நாட்களும் பசும்பொன் கிராமமே களை கட்டி காணப்படும். திமுகவாக இருந்தாலும் சரி அதிமுகவாக இருந்தாலும் சரி அந்த கட்சியின் பிரதான தலைவர்கள் அனைவரும் நிச்சயம் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவார்கள்.

    இதே போல தியாகி இமானுவேல் சேகரன் குருபூஜை விழா செப்டம்பர் 11ஆம் தேதி நடக்க இருக்கிறது. இந்த நிகழ்விலும் தமிழகத்தின் அனைத்து கட்சி தலைவர்களும் பெரும்பாலும் கலந்து கொண்டு இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவது வழக்கம். இரு பெரும் தலைவர்களின் குருபூஜை விழா நிகழ்வுகளில் கடந்த ஆண்டுகளில் சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்திருக்கிறது.

    Advertisement

    இந்த நிலையில் இந்த ஆண்டு சட்டம் ஒழுங்கு பிரச்சனை மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்காமல் நடவடிக்கை எடுக்கும் போட்டு குறிப்பிட்ட நாட்களில் மாவட்டத்தில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்," இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் எதிர்வரும் செப்டம்பர் 11 தியாகி இமானுவேல் சேகரன் குருபூஜை அவரது பிறந்த நாள் மற்றும் கமுதியை அடுத்த பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி உள்ளிட்ட நிகழ்வுகளை முன்னிட்டு சட்டம்-ஒழுங்கு மற்றும் பொது அமைதியை பாதுகாக்கும் வகையில் BNSS பிரிவு 163 கீழ் மாவட்ட நிர்வாகம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

    Advertisement

    இதன்படி, 09.09.2026 முதல் 15.09.2026 வரை, 09.10.2026 மற்றும் 25.10.2026 முதல் 31.10.2026 வரை வெளிமாவட்டங்களில் இருந்து வாடகை வாகனங்கள், ஆம்னி பேருந்துகள், சரக்கு வாகனங்கள், டிராக்டர்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும், 05.09.2026 முதல் 2 மாதங்களுக்கு முன் அனுமதியின்றி 5 அல்லது அதற்கு மேற்பட்டோர் கூடுதல், பொதுக்கூட்டம் மற்றும் ஊர்வலம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 09.10.2026 அன்று மாவட்டம் முழுவதும் ஜோதி ஓட்டத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் தடை உத்தரவை கடைப்பிடித்து அமைதிக்கு ஒத்துழைக்க வேண்டும்" என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    Ramanathapuram issues restrictions ahead of Immanuel Sekaran Guru Pooja and Pasumpon Muthuramalinga Thevar Jayanti.