அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்!

  • ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய விமான நிலையம் அமைக்கும் முதற்கட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. கீழக்கரை வட்டத்தில் உள்ள மாணிக்கநேரி கிராமத்தில் தமிழக அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் இன்று நேரில் சென்று விரிவான ஆய்வு மேற்கொண்டனர். இந்தத் திட்டம் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவை நனவாக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    Advertisement

    இராமநாதபுரம் மாவட்டம் ஆன்மீக சுற்றுலாவின் மையமாக விளங்குகிறது. உலகப் பிரசித்தி பெற்ற இராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் இந்தியா முழுவதிலும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

    Advertisement

    மேலும், கீழக்கரை, இராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மக்கள் வளைகுடா நாடுகள் உள்ளிட்ட வெளிநாடுகளில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் தங்களது பயணங்களுக்கு மதுரை அல்லது திருச்சி விமான நிலையங்களை நம்பியிருக்கும் நிலை தற்போது உள்ளது. இந்த சிரமத்தைப் போக்கும் வகையில் மாவட்டத்திலேயே புதிய விமான நிலையம் அமைக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.

    கடந்த சில வாரங்களாக இடத் தேர்வுப் பணிகள் தீவிரமடைந்த நிலையில், மாணிக்கநேரி பகுதி முதற்கட்டமாக உகந்த இடமாக அடையாளம் காணப்பட்டது. இதையடுத்து, தமிழக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மரு. V.K. ராஜீவ், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் M. சிவகுரு பிரபாகரன் IAS, இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி ஆகியோர் தலைமையில் உயர் அதிகாரிகள் குழு இன்று கள ஆய்வில் ஈடுபட்டது.

    Advertisement

    ஆய்வின்போது, வரைபடங்களை ஆராய்ந்த அமைச்சர் மற்றும் அதிகாரிகள், விமான நிலைய ஓடுதளம் (Runway), முனையக் கட்டிடம் (Terminal Building), கட்டுப்பாட்டு அறை (ATC Tower) உள்ளிட்ட அமைப்புகளுக்கு ஏற்ற இட வசதி, நிலத்தின் தன்மை, பரப்பளவு மற்றும் அணுகுமுறைச் சாலைகள் குறித்து விரிவாகப் பரிசீலித்தனர். வருவாய்த் துறை அதிகாரிகள், நில அளவை நிபுணர்கள் மற்றும் விமானப் போக்குவரத்து ஆணைய அதிகாரிகளும் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.

    ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மரு. V.K. ராஜீவ், "இராமநாதபுரம் மக்களின் நீண்டகால கனவான இந்த விமான நிலையத் திட்டம் முதலமைச்சரின் நேரடி வழிகாட்டுதலில் வேகமாக நடைபெறுகிறது. மாணிக்கநேரியில் தேவையான நிலங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணிகளும் தொழில்நுட்ப ஒப்புதல்களும் விரைவில் பெறப்படும்" என்று உறுதியளித்தார்.
    நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, "இந்த விமான நிலையம் இராமநாதபுரம், கீழக்கரை மட்டுமல்லாமல் அண்டை மாவட்டங்களுக்கும் பெரும் பலனைத் தரும். மத்திய-மாநில அரசுகளின் ஒருங்கிணைப்பில் திட்டம் விரைவில் நிறைவேறும்" என்றார்.

    Advertisement

    மாவட்ட ஆட்சியர் M. சிவகுரு பிரபாகரன், நில அளவை மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுகள் தடையின்றி நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

    இந்த விமான நிலையம் செயல்பாட்டுக்கு வந்தால், இராமநாதபுரம் மாவட்டத்தின் பொருளாதாரம் பெரும் வளர்ச்சியை அடையும். சுற்றுலாப் பயணிகளின் வருகை பல மடங்கு அதிகரிக்கும். ஹோட்டல் தொழில், போக்குவரத்து, உள்ளூர் வர்த்தகம் ஆகியவை புத்துயிர் பெறும். இளைஞர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும். குறிப்பாக, ராமேஸ்வரம் போன்ற ஆன்மீக மையங்களுக்கு வரும் வெளிநாட்டுப் பக்தர்களுக்கு பெரும் வசதி ஏற்படும்.

    Advertisement

    மாணிக்கநேரி பகுதியில் தொடங்கியுள்ள இந்தத் தீவிர ஆய்வு, இராமநாதபுரம் மாவட்டத்தின் வான்வழிப் போக்குவரத்து வரலாற்றில் முக்கிய அத்தியாயமாக அமையும் என்று மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். திட்டம் விரைவில் நிறைவேறி, தமிழகத்தின் தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு புதிய பாதையைத் திறக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

    English Summary

    Ramanathapuram New Airport: Intense Site Survey at Manickaneri Village – Long-Awaited Dream Nears Reality