ராமநாதபுரம் சார் பதிவாளர் மாலினிக்கு மறக்க முடியாத பரிசு.. பத்திரப் பதிவு ஆபீஸ்ல காசு தராம எப்படி?

  • ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் பத்திரம் பதிவு செய்யப் போன ஒருவருக்கு, செம ஷாக் தந்துள்ளார் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திர எழுத்தராக பணியாற்றும் பெண் ஊழியர். "கவர்மெண்ட் ஆபீஸ்னாலே லஞ்சம்தான்.. காசு கொடுக்காம எப்படி வேலை நடக்கும்?" என்ற கேள்வியை கேள்வியை கேட்க, இந்தப் பேச்சு அப்படியே ஆடியோவாகி சோஷியல் மீடியாவில் பரவி, இப்போது அதிகாரிகள் தரப்பில் ஆக்‌ஷன் பாய்ந்துள்ளது.

    Advertisement

    திருவாடானை தாலுகாவில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்தில் மாலினி சார்-பதிவாளராக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒருவர் பத்திரம் பதிவு செய்வதற்காக திருவாடானையைச் சேர்ந்த ஆவண எழுத்தர் மூலம் பத்திரப் பதிவு செய்துள்ளார். இதற்காக அந்த ஆவண எழுத்தர் ரூ.28,000-ஐ கூகுள் பே மூலம் பெற்றதாக கூறப்படுகிறது.

    Advertisement

    பத்திரப் பதிவு முடிந்த பிறகுதான் அந்த நபருக்கு ஒரு சந்தேகம் வந்துள்ளது. அரசுக்கு செலுத்த வேண்டிய பத்திரப் பதிவு கட்டணத்தைவிட கூடுதலாக பணம் வாங்கியது ஏன் என்பதுதான் அந்த சந்தேகம். இதையடுத்து, அவர் சம்பந்தப்பட்ட ஆவண எழுத்தரிடம் போனில் தொடர்புகொண்டு இதுகுறித்து கேட்டுள்ளார்.

    பத்திரக் கட்டணம், சார்பதிவாளர் அலுவலகம்

    அப்போது ஆவண எழுத்தர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவர், "பத்திரக் கட்டணம் போக, சார்பதிவாளர் அலுவலகத்துக்கு கொடுக்க ரூ.5,000 வேண்டும். அந்தப் பணம் கொடுக்கப்பட்டுவிட்டது. அதனால் அதைத் திருப்பிக் கொடுக்க முடியாது. கவர்மெண்ட் ஆபீஸ்னாலே லஞ்சம்தான்.. காசு கொடுக்காம எப்படி வேலை நடக்கும்?" என்று கேட்டுள்ளார்.

    Advertisement

    அதுமட்டுமல்லாமல், பத்திரம் எழுதும் அலுவலகத்திலும் இதுகுறித்து உறுதி செய்துகொண்ட பிறகே போன் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த முழு உரையாடலும் ஆடியோவாக பதிவு செய்யப்பட்ட நிலையில், அது சோஷியல் மீடியாவில் வெளியாகி வேகமாக பரவியது. இந்த ஆடியோ திருவாடானை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. விஷயம் அதிகாரிகள் கவனத்துக்கும் சென்றது.

    இதையடுத்து, திருவாடானை சார்பதிவாளராக பணியாற்றி வந்த மாலினி தேவகோட்டைக்கு உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆடியோவில் மாலினி நேரடியாக பேசியதாக தகவல் இல்லாத நிலையில், அந்த ஆடியோ தொடர்பாக விசாரணையும் நடந்து வருகிறது.

    மாவட்ட பதிவாளர் உறுதி

    இதுகுறித்து மாவட்ட பதிவாளர் சீனிவாசனிடம் கேட்டபோது, வைரலான ஆடியோ குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். விசாரணையின் முடிவில் தவறு உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

    Advertisement

    பத்திரப் பதிவிற்கு அரசுக்குச் செலுத்த வேண்டிய கட்டணத்தைக் காட்டிலும் கூடுதலாகப் பணம் வசூலிக்கப்பட்டது? அரசு அலுவலகத்தில் ஒரு வேலையை முடிக்க பொதுமக்கள் செலுத்த வேண்டிய கட்டணம் என்ன, அதற்கு மேல் வசூலிக்கப்படும் பணம் எதற்காக? என்ற கேள்விகள் இந்த ஆடியோ மூலம் எழுந்துள்ளன

    தப்பிக்கும் அதிகாரிகள்?

    ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் லஞ்சம், ஊழலை ஒழித்து விடுவோம் என்று தவெக தரப்பில் சொல்லப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷும், 100 நாள் ஆட்சியில் லஞ்சம் - ஊழல் ஒழிக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்திருந்தார். ஆனாலும், அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கப்படுவதாக அவ்வப்போது புகார்கள் தொடர்ந்து வருகின்றன.

    Advertisement

    லஞ்சம் வாங்கும் கடைமட்ட ஊழியர்கள் தரப்பில் கைது நடவடிக்கைகள் நடக்கிறதே தவிர, கடமையை மீறும் அதிகாரிகள் மீது அதே அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்ற பேச்சும் உள்ளது.

    இப்படிப்பட்ட சூழலில், அரசு அலுவலகத்தில் லஞ்சம் தொடர்பான ஆடியோ வெளியாகி, அதன்பிறகு சார்பதிவாளர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள சம்பவம் கவனம் பெற்றுள்ளது... அதேநேரம், இந்த விவகாரத்தில் தவறு நடந்ததா என்பது இன்னும் விசாரணையில் இருப்பதால், விசாரணை முடிவில் என்ன தெரியவரும் என்பதே இப்போது முக்கிய கேள்வியாக உள்ளது....!!

    English Summary

    Ramanathapuram Sub-Registrar Malini Gets a "Gift".. Can Government Office Work Happen Without Paying?