ராமநாதபுரம் முதுகுளத்தூரில் வீட்டுக்கு ஒருவர் விவசாயம்.. விளைச்சலை என்ன செய்கிறார்கள் தெரியுமா?

  • ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே ஒரு கிராமத்தில், வீட்டுக்கு ஒருவர் வீதம் ஊர் மக்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து விவசாயம் செய்து வருகிறார்கள்.. இப்படி பொதுவாக விவசாயம் செய்து கிடைக்கும் நெல்லை விற்பனை செய்யாமல், முருகன் கோயில் திருவிழாவில் அன்னதானம் வழங்குவதற்குப் பயன்படுத்தியும் வருகிறார்கள்.. பல ஆண்டுகளாகவே தொடர்ந்து வரும் இந்த நடைமுறை, கிராம மக்களின் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது..!!!

    Advertisement

    முதுகுளத்தூர் அருகே உள்ள விளங்குளத்தூர் கிராமத்தில் தெற்கு தெரு, சுப்பிரமணியபுரம், இந்திரா நகர் என 3 தெருக்கள் உள்ளன. இங்கு 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதி மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது.

    Advertisement

    இந்த கிராமத்தில் பொதுவாக ஒரு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தைப் பொது புன்செய் என்று அழைக்கின்றனர். இதில் பல வருடங்களாகவே நெல், மிளகாய் உள்ளிட்ட பயிர்களை கிராம மக்கள் ஒன்றாகச் சேர்ந்து பயிரிட்டு வருகின்றனர்.

    சித்திரையில் தொடங்கும் விவசாயம்

    ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் முதல் நாளில் ஏர் பூட்டுதல், விதைப்பு உள்ளிட்ட பணிகளைத் தொடங்கி விவசாயத்தைக் கொண்டாடுகின்றனர். இந்த பொதுநிலத்தில் விவசாயம் செய்வதற்கு குடும்பத்தில் ஒருவர் வீதம் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். விவசாய பணிகள் எதுவாக இருந்தாலும் ஊர் மக்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து செய்து முடிக்கின்றனர்.

    Advertisement

    இதற்கு தேவையான உழவு, உரம் உள்ளிட்ட விவசாயப் பொருட்களை வாங்குவதற்கான செலவுகள் கிராமப் பொது கணக்கில் இருந்து மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் தனித்தனியாக யாரும் செலவு செய்ய வேண்டியதில்லை.

    ஒற்றுமையாக உழைக்கும் மக்கள்

    பல ஆண்டுகளுக்கும் மேலாக கிராம மக்கள் ஒற்றுமையாகப் பொது புன்செய் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்கள்.. உழவு செய்தல், விதைத்தல், களை எடுத்தல், நீர் பாய்ச்சுதல், கதிர் அறுவடை செய்தல் என அனைத்து வேலைகளிலும் கிராம மக்கள் கலந்து கொள்வார்கள். குடும்பத்தில் ஒருவர் வீதம் ஒவ்வொரு விவசாயப் பணியிலும் பங்கேற்க வேண்டும் என்பதால் இளைஞர்கள், பெண்கள் என அனைவரும் ஆர்வத்துடன் விவசாய வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Advertisement

    மேலும், இதுபோன்ற பொதுவான பணிகளில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த யாரும் கலந்து கொள்ளவில்லை என்றால் அபராதமும் விதிக்கப்படுகிறது. இதனால் யாரும் விவசாயப் பணிகளைத் தவிர்க்காமல் அனைவரும் ஒன்றாகச் செயல்பட்டு வருகிறார்கள்.

    திருவிழாவில் அன்னதானம்

    இப்படி அனைவரும் சேர்ந்து விவசாயம் செய்து அறுவடை செய்யும் நெல்லை விற்பனை செய்வதில்லை. மாறாக, அந்த நெல்லை சேமித்து வைத்து பங்குனி மாதம் முருகன் கோயிலில் நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழாவுக்குப் பயன்படுத்துகின்றனர். அப்போது அந்த நெல்லை கொண்டு சமையல் செய்து, கிராம மக்கள் அனைவருக்கும் பொதுவான அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்காகவே பல மாதங்கள் அனைவரும் ஒன்றாக உழைத்து விவசாயம் செய்து வருகிறார்களாம்.

    Advertisement

    இளைஞர்களுக்கும் பயிற்சி

    இதுகுறித்து கிராம மக்கள் சொல்லும்போது, "இந்த நடைமுறை காலம் காலமாக தொடர்ந்து வருகிறது.. இனிவரும் காலங்களிலும் இதைக் கைவிடாமல் கடைப்பிடிக்க வேண்டும்.. முதியவர்கள் விவசாய பணிகளில் ஈடுபடுவதுடன், இளைஞர்களுக்கும் விவசாயம் செய்வது எப்படி என்று கற்றுக் கொடுத்து வருகிறார்கள்.. இதன் மூலம் விவசாய தொழிலும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லப்படுகிறது" என்று பூரித்து சொல்கிறார்கள்..

    வீட்டுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் தொடங்கி, ஊர் மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து, கோயில் திருவிழாவில் அன்னதானம் வழங்கும் இந்த நடைமுறை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    மீன்பிடி திருவிழா

    தமிழகத்தின் பல்வேறு கிராமங்களிலும் இதேபோன்ற ஒற்றுமையான நடைமுறைகள் இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகின்றன. குறிப்பாக மதுரை மாவட்டம் மேலூர் அருகே கல்லந்திரி கிராமத்தில் கண்மாயில் மீன்குஞ்சுகளை விட்டு வளர்த்து, பிறகு கிராம மக்கள் ஒன்றாகச் சேர்ந்து மீன்பிடித்து, அந்த மீன்களைச் சமைத்து கிராம தெய்வத்துக்குப் படைக்கும் வழக்கம் உள்ளது.

    Advertisement

    அதேபோல மயிலாடுதுறை தென்பாதி பகுதியில் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து நெல் சாகுபடி செய்து வருகின்றனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் மேற்கொள்ளப்படும் நெல் சாகுபடியில் கிடைக்கும் நெல்லை கோயிலின் அன்னதானம் உள்ளிட்ட தேவைகளுக்குப் பயன்படுத்துகின்றனர்.

    அதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம் கெம்பகரை கிராமத்தில் நீர்நிலைகளைப் பராமரித்து, மழை வேண்டி கிராம மக்கள் ஒன்றிணைந்து திருவிழா நடத்துகின்றனர். இப்படி ஒவ்வொரு ஊரிலும் வெவ்வேறு வழக்கங்கள் இருந்தாலும், கிராம மக்கள் ஒன்றிணைந்து பொதுநலனுக்காகச் செயல்படுவது இதன் சிறப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Ramanathapuram Village Farming.. Why Does Every Family Member Take Part and What Happens to the Harvest?