ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் ஒரு பக்கம் புதிய சாலை வரப்போகிறது.. இன்னொரு பக்கம் அந்த சாலையை ஒட்டிய நிலங்களுக்கு மவுசு கூடுகிறது. இதனால் அங்கு நடக்கும் சில வேலைகள் இப்போது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.. முக்கியமாக, பனை மரங்கள் இருக்கும் இடத்தில் நடந்திருப்பதுதான் விவகாரத்தை பெரிதாக்கியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவிடம் அருகே, ராமேஸ்வரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அரியாங்குண்டு, மெய்யம்புளி, ஏரகாடு, பர்வதம் வழியாக ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை வரை புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
சுமார் 100 அடி அகலத்தில் அமையவுள்ள இந்த சாலை, ராமேஸ்வரம் நகரில் சுற்றுலா வாகனங்களால் ஏற்படும் டிராபிக் நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் அமைக்கப்படுகிறது. சாலை பணிகள் வேகமெடுக்க, அதை ஒட்டியுள்ள பகுதிகளிலும் நிலம் தொடர்பான வேலைகள் சுறுசுறுப்பாகி உள்ளன... ஏனென்றால் இங்கு சாலை வந்துவிட்டால் நிலத்தின் மதிப்பு கூடும் என்பதால், தனியார் நிலங்களை பிளாட்டுகளாக பிரித்து விற்பனை செய்வதற்கான பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. அரியாங்குண்டு, மெய்யம்புளி உள்ளிட்ட பல பகுதிகளிலும் இதற்கான பணிகள் ஜரூராக நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், பிளாட்டுகள் அமைப்பதற்காக நிலத்தை தயார் செய்யும் பணியில் அங்கிருந்த பனை மரங்களும் வெட்டப்பட்டு சாய்க்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.. அரியாங்குண்டு கிராமத்தில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாம்.. அரியாங்குண்டு, மெய்யம்புளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்த்து 200-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் மாவட்ட கலெக்டரின் அனுமதியின்றி வெட்டி அப்புறப்படுத்தப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பனை மரத்தை சாதாரண மரமாக கடந்து போய்விட முடியாது... தமிழகத்தின் மாநில மரமே பனைதான்.. அதன் வேர் முதல் உச்சி வரை மனிதர்களுக்கு பல்வேறு வகைகளில் பயன் தரக்கூடியது. குறிப்பாக கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தோடு பனை மரம் நெருங்கிய தொடர்புடையதாக இருக்கிறது. அதுமட்டுமல்ல.. பனை மரங்களுக்கு சுற்றுச்சூழலிலும் முக்கிய பங்கு இருக்கிறது. நிலத்தடி நீரை பாதுகாப்பதிலும், கடல் அரிப்பை தடுப்பதிலும் பனை மரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இப்படிப்பட்ட மரங்கள் அழிவதை தடுக்க தமிழக அரசு பனை மரங்களை வெட்டுவதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அப்படியிருக்கும்போது, அரசின் அனுமதியின்றி இவ்வளவு பனை மரங்கள் வெட்டப்பட்டதாக கூறப்படுவதுதான் அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பக்கம் ராமேஸ்வரத்தின் டிராபிக்கை நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்கும் வளர்ச்சிப் பணிகள் நடக்கின்றன. இன்னொரு பக்கம் அந்த சாலையை ஒட்டிய நிலங்களில் பிளாட்டுகள் அமைப்பதற்காக பனை மரங்கள் வெட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது. பனை மரங்கள் தொடர்ந்து வெட்டப்பட்டு அழிக்கப்பட்டால், ராமேஸ்வரம் பகுதியில் உள்ள பனை மரங்கள் முற்றிலும் அழியும் நிலைமை உருவாகிவிடுமோ என்ற அச்சமும், கவலையும் ஏற்பட்டுள்ளது. பனை மரம் என்பது வெறும் மரம் மட்டுமல்ல.. அது மக்களின் வாழ்வாதாரத்தோடும், மண்ணின் தன்மையோடும் தொடர்புடையது என்பதால், அதன் அழிவு கிராமப்புற மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இதனிடையே, பனை மரங்களை வெட்டுவதை தடுக்க வேண்டிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாகவும் பராமுகமாகவும் இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மாவட்ட கலெக்டரின் அனுமதியே இல்லாமல் வெட்டி எடுத்திருக்கிறார்கள், அதனால் சம்பந்தப்பட்டவர்கள் வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். வெட்டப்பட்ட பனை மரங்களின் எண்ணிக்கை குறித்து உரிய விசாரணை நடத்தி, விதிகளை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, மீதமுள்ள பனை மரங்களையும் பாதுகாக்க வேண்டும் என்பதும் அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.ராமேஸ்வரம் சுற்றுலா டிராபிக் நெரிசல்
வெட்டப்பட்ட பனை மரங்கள்
கடல் அரிப்பை தடுக்க உதவும்
கிராமப்புற மக்கள் வேதனை
கலெக்டரிடம் அனுமதி வாங்கவில்லை