ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தனுஷ்கோடி அருகே மீன் பிடித்த போது அங்கு வந்த இலங்கை கடற்படை 7 மீனவர்களையும் அவர்களது ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளது.
கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்வது தொடர் கதையாக உள்ளது. வாழ்வாதாரத்திற்காக மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள், இலங்கை கடற்படையின் இந்த தொடர் அட்டுழியத்தால் பெரும் இன்னல்களை சந்திக்க வேண்டியுள்ளது.
மீன்வர்கள் பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வெண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு மீனவர்கள் கோரிக்கை வைத்து வந்தாலும் தற்போது வரை அவர்களுக்கு விடிவு கிடைத்தபாடில்லை. இதனால், கடலுக்கு மீன் பிடிக்க சென்றால் என்ன ஆகுமோ என்ற அச்சத்துடனேயே இருப்பதாக மீனவர்கள் குடும்பத்தினரும் வேதனை தெரிவிப்பதை பார்க்க முடிகிறது. இந்த சூழலில்தான் ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. தனுஷ்கோடி அருகே மீன் பிடித்துக்கொண்டு இருந்த போது எல்லை தாண்டி மீன் பிடித்தாக கூறி சிறைபிடித்து சென்றுள்ளது. மீன்வர்களையும் அவர்களது ஒரு விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்த மீனவர்களை மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்ற இலங்கை கடற்படை அங்கு வைத்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.