மதீனா பல்கலை நூலகத்தில் முதல்முறையாக தமிழ் ஹதீஸ் நூல்: வரலாற்று சாதனை படைத்த “முஸ்னத் அஹ்மது”

  • ரியாத்: சவுதி அரேபியாவின் புனித நகரான மதீனாவில் உள்ள உலகப் புகழ்பெற்ற இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் (Islamic University of Madinah) தமிழ் மொழிக்குப் பெருமை சேர்க்கும் வகையில் ஒரு வரலாற்றுச் சாதனை நிகழ்ந்துள்ளது. அங்குள்ள மத்திய நூலகத்தில், முதல்முறையாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட பிரபல ஹதீஸ் தொகுப்பு நூலான "முஸ்னத் அஹ்மது" அதிகாரப்பூர்வமாக இடம்பெற்றுள்ளது.

    Advertisement

    இஸ்லாமிய மார்க்க நெறிகள், நபிகள் நாயகத்தின் வாழ்வியல் பொன்மொழிகள் (ஹதீஸ்கள்) மற்றும் இஸ்லாமிய அறிவியல் ஆய்வுகளுக்கு மதீனா பல்கலைக்கழகம் உலக அளவில் முன்னணி கல்வி மையமாகத் திகழ்கிறது. உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு பயின்று வருகின்றனர். இதுவரை அரபு மற்றும் பிற முக்கிய மொழிகளிலான நூல்களே இங்குள்ள நூலகத்தில் அதிகளவில் ஆதிக்கம் செலுத்தி வந்தன. இந்நிலையில், மிக முக்கியமான ஆதாரபூர்வ ஹதீஸ் தொகுப்புகளில் ஒன்றான "முஸ்னத் அஹ்மது" நூல் தமிழ் மொழியிலும் இடம்பெற்றிருப்பது உலகத் தமிழர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    இந்த நூலகத்தில் இஸ்லாமிய அறிவியல் பிரிவில், "722.9 TAM" என்ற நூலகக் குறியீட்டுடன் தமிழ் மொழிபெயர்ப்புப் புத்தகம் முறையாக வைக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழிக்கும், உலகளாவிய இஸ்லாமிய ஹதீஸ் ஆய்வுப் பணிகளுக்கும் இது ஒரு மிகப்பெரிய வரலாற்று மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அங்கு படிக்கும் தமிழ் பேசும் மாணவர்கள் மட்டுமின்றி, உலக ஆய்வாளர்களும் தமிழின் பங்களிப்பை நேரடியாக அறிய முடியும்.

    இஸ்லாமிய அறிவுச் செல்வங்கள் மற்றும் ஹதீஸ் கலை சார்ந்த நன்நெறிகளைத் தாய்மொழியான தமிழில் அனைவரும் எளிதாகப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மதீனா தமிழ் சங்கம் (Madina Tamil Sangam - MTS) இந்த வரலாற்று நிகழ்வை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளது.

    Advertisement

    தமிழ் மொழியில் அமைந்த இந்த நற்பணி, உலக அரங்கில் தமிழ் மொழிபெயர்ப்பு நூல்களுக்கான அங்கீகாரத்தை மேலும் உயர்த்தியுள்ளதோடு, எதிர்காலத்தில் இன்னும் பல நற்காரியங்கள் தொடங்குவதற்கும் இது ஒரு சிறந்த வழிகாட்டியாக அமையும் என்று பலரும் மனதாரப் பாராட்டி வருகின்றனர்.

    English Summary

    Historic First in Madinah: Tamil Translation of Hadith Book 'Musnad Ahmad' Placed in Islamic University Library