ரியாத் விமான நிலையத்தில் அட்டாக்? பயங்கர கரும்புகை.. ஹவுதி ஏவுகணையை சுட்டு வீழ்த்திய சவுதி!

  • ரியாத்: சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத் நகரை குறிவைத்து ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவிய சக்திவாய்ந்த பாலிஸ்டிக் ஏவுகணையை, சவுதி வான் பாதுகாப்பு படை நடுவானிலேயே இடைமறித்து வெற்றிகரமாக அழித்துள்ளது. அதே நேரத்தில், ரியாத்தில் உள்ள புகழ்பெற்ற கிங் காலித் சர்வதேச விமான நிலையத்திற்கு மிக அருகில் இருக்கும் எரிபொருள் கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு, விண்ணை முட்டும் அளவிற்கு கரும்புகை சூழ்ந்ததால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    Advertisement

    சமீப நாட்களாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் தீவிரமடைந்து வரும் நிலையில், சவுதியின் தலைநகரைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் உலக நாடுகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    நள்ளிரவில் ஒலித்த அபாய சங்கு

    சனிக்கிழமை அதிகாலை இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெறுவதற்கு முன்பாகவே, சவுதி அரேபிய அதிகாரிகள் தலைநகர் ரியாத் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீர் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கையை விடுத்திருந்தனர். இதனால் மக்கள் அனைவரும் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குள் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர்.

    அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துச் சில மணி நேரங்களிலேயே, ரியாத் நகரின் பல பகுதிகளில் அடுத்தடுத்து பயங்கர வெடிச்சத்தங்கள் கேட்டதாக அங்கு வசிக்கும் பொதுமக்கள் தெரிவித்தனர். வானில் ஏவுகணை வெடித்துச் சிதறியதால் ஏற்பட்ட அதிர்வு, வீடுகளின் ஜன்னல்களைக் கூட அதிர வைத்ததாக மக்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.

    Advertisement

    விமான நிலையம் அருகே என்ன நடந்தது?

    தாக்குதல் சம்பவம் நடந்த அதே நேரத்தில், ரியாத்தின் கிங் காலித் சர்வதேச விமான நிலையத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள சவுதி அராம்கோ நிறுவனத்தின் எரிபொருள் கிடங்கில் திடீரென பெரும் தீப்பிடித்தது.

    விமான நிலைய வளாகத்தை ஒட்டியுள்ள ஒரு பெரிய கச்சா எண்ணெய் சேமிப்பு தொட்டியில் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. வானளவு உயர்ந்த கரும்புகை மண்டலம் விமான நிலைய ஓடுதளங்கள் மற்றும் முனைய கட்டிடங்களின் மேல் திரண்டது.

    உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு படையினர் பல மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதமோ அல்லது பெரும் காயங்களோ ஏற்படவில்லை என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Advertisement

    விமான சேவைகள் முடக்கம்.. பயணிகள் அவதி

    விமான நிலையத்திற்கு மிக அருகில் தீப்பற்றி கரும்புகை சூழ்ந்ததால், பாதுகாப்பு கருதி விமானப் போக்குவரத்து உடனடியாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    உலகளாவிய விமானப் போக்குவரத்து கண்காணிப்பு தளமான 'பிளைட்ராடார்24' ரியாத் விமான நிலையத்தை அதிக பாதிப்பு கொண்ட குறியீட்டுப் பிரிவில் வைத்தது. பல விமானங்கள் நடுவானிலேயே திருப்பி விடப்பட்டன.. மேலும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. தீ முற்றிலும் அணைக்கப்பட்டு, பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின்னரே சில மணி நேரங்கள் கழித்து விமானங்கள் மீண்டும் படிப்படியாக இயங்கத் தொடங்கின.

    சவுதி ராணுவக் கூட்டணி அளித்த விளக்கம்

    இந்தச் சம்பவம் குறித்து சவுதி தலைமையிலான ராணுவக் கூட்டணியின் செய்தித் தொடர்பாளர் துர்கி அல்-மால்கி சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளார். அதில், "ஏமனில் உள்ள பயங்கரவாத ஹவுதி அமைப்பினர் சனிக்கிழமை அதிகாலை ரியாத் நகரத்தை குறிவைத்து ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவினர். ஆனால், நமது சவுதி வான் பாதுகாப்பு படை அந்த ஏவுகணையை வழியிலேயே இடைமறித்து முழுமையாக அழித்துவிட்டது" என்று தெரிவித்துள்ளார்.

    Advertisement

    மேலும், ரியாத் மட்டுமல்லாமல் பிஷா, தாயிப், ஃபராசான் மற்றும் யான்பு ஆகிய நகரங்களில் உள்ள அப்பாவி மக்கள் மற்றும் பொதுக் கட்டடங்களை குறிவைத்தும் தாக்குதல் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அந்த முயற்சிகள் அனைத்தையும் சவுதி பாதுகாப்புப் படைகள் முறியடித்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

    ஹவுதி பதிலடி

    இதற்கிடையில், இந்தத் தாக்குதலுக்கு ஏமனின் ஹவுதி அமைப்பினர் அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளனர். தங்கள் மீது சவுதி நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்த நடவடிக்கையை எடுத்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

    ஹவுதி ராணுவ செய்தித் தொடர்பாளர் யாஹ்யா சாரி வெளியிட்ட அறிக்கையில், ஒரே நேரத்தில் ஏராளமான பாலிஸ்டிக் ஏவுகணைகள், குரூஸ் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தி இரண்டு மிகப்பெரிய ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டதாகக் குறிப்பிட்டார்.

    Advertisement

    முதலாவது நடவடிக்கை சவுதி தலைநகர் ரியாத்தில் உள்ள முக்கிய ராணுவ தளங்களை குறிவைத்து நடத்தப்பட்டது என்றும், இரண்டாவது நடவடிக்கை யான்புவில் உள்ள அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை குறிவைத்து நடத்தப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

    அமெரிக்கா விடுத்த கடுமையான எச்சரிக்கை

    சவுதி அரேபியா மீதான இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் உடனடியாக அவசரப் பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளன.

    ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியா மீதும், பொது விமான நிலையங்கள் மீதும் தாக்குதல்களை அதிகரித்திருப்பது மிகவும் ஆபத்தானது என்றும், இந்த மோதல் விரைவில் ஒரு முழு அளவிலான பிராந்தியப் போராக உருவெடுக்க அதிக வாய்ப்புள்ளது என்றும் அமெரிக்கா எச்சரித்துள்ளது. அமெரிக்க அதிபர் கூட தனது வார இறுதிப் பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு வாஷிங்டன் திரும்பியுள்ளார்.

    ஜோர்டான், பஹ்ரைன் நாடுகள் கடும் கண்டனம்

    சவுதி அரேபியாவின் இறையாண்மையை அச்சுறுத்தும் வகையில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு ஜோர்டான் மற்றும் பஹ்ரைன் ஆகிய அண்டை நாடுகள் தங்களது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளன.

    ஜோர்டான்: பொதுமக்கள் மற்றும் பொது உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவது சர்வதேச சட்டங்களை அப்பட்டமாக மீறும் செயல். சவுதி அரேபியாவின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மைக்கு நாங்கள் எப்போதும் முழு ஆதரவு அளிப்போம்" என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

    பஹ்ரைன்: ஹவுதிகளின் இத்தகைய அத்துமீறிய தாக்குதல்களை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டும். இதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளது.

    ஏமனில் மீண்டும் தீவிரமடையும் உள்நாட்டுப் போர்

    கடந்த சில வாரங்களாக ஏமனில் ஹவுதி அமைப்பினர் தங்களது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். ஏமனின் சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசுக்கு சவுதி அரேபியா ஆதரவு அளித்து வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக ஒப்பீட்டளவில் அமைதியாக இருந்த ஏமனில், சமீபத்தில் ஹவுதிகள் செங்கடல் கடற்கரை ஓர நகரங்களை அதிரடியாகக் கைப்பற்றியுள்ளதால் அங்கு மீண்டும் கடுமையான உள்நாட்டுப் போர் வெடித்துள்ளது.

    தற்போது இந்த மோதல் மீண்டும் சவுதி அரேபியாவின் எல்லைக்குள் புகுந்து, தலைநகர் ரியாத் வரை ஏவுகணை தாக்குதலாக மாறியிருப்பது உலக எண்ணெய் சந்தையிலும் சர்வதேச அரசியலிலும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வரும் சவுதி ராணுவம், தனது வான் பாதுகாப்பு அரண்களை மேலும் பலப்படுத்தி உச்சகட்ட தயார் நிலையில் வைத்துள்ளது.

    English Summary

    Riyadh Airport Fire: Saudi Arabia Intercepts Yemen Houthi Ballistic Missile Amid Rising Middle East Tensions