போர் முடிந்து 2 நாள் கூட ஆகல.. சவுதியில் அப்படியே சரிந்த ஹெலிகாப்டர்.. 14 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

  • ரியாத்: உலகையே உலுக்கி வந்த அமெரிக்கா - ஈரான் இடையேயான மத்திய கிழக்கு மோதல் ஒருவழியாக முடிவுக்கு வந்து, அங்குள்ள முக்கிய எண்ணெய் முனையங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ள நேரத்தில், சவூதி அரேபியாவில் அரங்கேறியுள்ள ஒரு பயங்கர ஹெலிகாப்டர் விபத்து சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!

    Advertisement

    சவூதி அரேபியாவின் முன்னணி எண்ணெய் நிறுவனமான அராம்கோவிற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை காலை விழுந்து நொறுங்கியதில், அதில் பயணித்த 14 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    Advertisement

    விபத்து

    இதுகுறித்து சவூதி அரேபியாவின் அதிகாரப்பூர்வ அரசு செய்தி முகமையான சவூதி பிரஸ் ஏஜென்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், சவூதி எரிசக்தி அமைச்சகம் இந்த விபத்து மற்றும் உயிரிழப்புகளை உறுதி செய்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 6:00 மணியளவில், சவூதி அராம்கோ நிறுவனத்தால் இயக்கப்பட்டு வந்த அந்த ஹெலிகாப்டர் ராஸ் தனூரா (Ras Tanura) பகுதியில் பறந்துகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 14 பேரும் உயிரிழந்துள்ள நிலையில், அவர்கள் அனைவரும் சவூதி நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. ஹெலிகாப்டர் விபத்து நேரிட்டதற்கான துல்லியமான காரணம் என்ன என்பது தற்போதைக்குத் தெரியவில்லை. இது குறித்து சவூதி அரசின் அதிகாரிகள் மற்றும் சிவில் ஏவியேஷன் துறையினர் இணைந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்துக்கான பின்னணி மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகள் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    Advertisement

    ராஸ் தனூரா

    இந்த விபத்து நடந்துள்ள 'ராஸ் தனூரா' பகுதி, உலகப் பொருளாதாரத்தின் மிக முக்கிய பகுதியான ஹார்முஸ் ஜலசந்தியின் மேற்கு கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது. மத்திய கிழக்கில் கடந்த நான்கு மாதங்களாக நீடித்து வந்த அமெரிக்கா - ஈரான் போரின் காரணமாக, இந்த ராஸ் தனூரா முனையத்திலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் பணிகள் முற்றிலும் முடக்கப்பட்டிருந்தன.

    இந்தச் சூழலில், போர் பதற்றங்கள் தணிந்து நிலைமை சீரானதைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை தான் அராம்கோ நிறுவனம் தனது கச்சா எண்ணெய் ஏற்றும் பணிகளை ராஸ் தனூரா முனையத்தில் மீண்டும் தொடங்கியிருந்தது. பணிகள் தொடங்கி இரண்டே நாட்களில் இந்த விபத்து நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    சவூதி அரேபியா

    உலகிலேயே கச்சா எண்ணெய்யைப் பெருமளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக சவூதி அரேபியா விளங்கி வருகிறது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போரை நிறுத்துவதற்கான தற்காலிக அமைதி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு உள்ளதால், மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் தங்களது எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியையும், ஏற்றுமதியையும் அசுர வேகத்தில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.

    இதன் காரணமாகத் தேங்கிக் கிடக்கும் கச்சா எண்ணெய்யை உலக நாடுகளுக்கு மிக விரைவாகக் கொண்டு சேர்க்கும் போட்டியில் சவூதி அரேபியாவும் தீவிரமாக இறங்கியுள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் சந்தை மீண்டும் சூடுபிடித்துள்ள இந்த முக்கியமான காலகட்டத்தில், சவூதியின் பிரதான எண்ணெய் ஏற்றுமதி பகுதியில் நடந்துள்ள இந்த ஹெலிகாப்டர் விபத்து பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

    English Summary

    Saudi Aramco helicopter crashed near the strategic Ras Tanura oil terminal, killing all 14 people(சவுதி அரேபியா விமான விபத்தில் 14 பேர் உயிரிழப்பு): Saudi Aramco Helicopter Crash latest news in tamil.