சேலம்: சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைப் பதிவாளராக இருந்த சரவணனை வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகக் கூறி பணிநீக்கம் செய்ததை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அரசு ஊழியரைப் பணிநீக்கம் செய்வது மரண தண்டனைக்குக் குறையாதது என்று குறிப்பிட்ட நீதிமன்றம், அவரை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட்டிருக்கிறது. ஆதாரமின்றிக் குற்றவாளியாக்கியது அநீதி என்றும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அரசு ஊழியரைப் பணியிலிருந்து நீக்குவது மிகக் கடுமையான தண்டனை என்று சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம். இதன் பாதிப்புகள் சம்பந்தப்பட்ட ஊழியருடன் முடிவதில்லை; அவரது குடும்பத்தினரையும் பாதிக்கின்றன. பணிநீக்க உத்தரவால், பணியுடன் தொடர்புடைய அனைத்து சலுகைகளையும் ஊழியர் இழக்க நேரிடுவதுடன், அவர் வருமானமின்றித் தவிக்கும் நிலையும் ஏற்படலாம் என்றும் கூறியுள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைப் பதிவாளராக இருந்த ஆர்.சரவணன் மீது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக, பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் குழு அமைத்த ஒரு நபர் விசாரணை ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில், அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். தனது பணிநீக்கத்தை எதிர்த்து சரவணன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி, இந்த பணி நீக்கத்தை ரத்து செய்து சரவணனை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட்டார். ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து, பல்கலைக்கழக நிர்வாகம், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றத்தின் அமர்வு நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து, ஆர்.சரவணனை பணிநீக்கம் செய்தது செல்லும் என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சரவணன், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனு மீது நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா, ஶ்ரீசந்திரசேகர் ஆகியோரைக் கொண்ட அமர்வு நேற்று தீர்ப்பளித்தது, சென்னை உயர்நீதிமன்றத்தின் அமர்வு நீதிபதிகள் பிறப்பித்த பணிநீக்க உத்தரவை ரத்து செய்து, சரவணனை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட்டது. நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் ஸ்ரீ சந்திரசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பில் கூறுகையில், "பணிநீக்கம் அல்லது பணியிலிருந்து நீக்குதல் என்ற தண்டனை, அரசு ஊழியருக்கு வழங்கப்படும் மிகக் கடுமையான தண்டனையாகும். இது அவருக்கு மரண தண்டனைக்கு நிகரானது" என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். "இத்தகைய தண்டனை ஊழியரின் குடும்பத்தினரையும் பாதிக்கிறது. பணிநீக்கம் செய்யப்படும் அரசு ஊழியர், பணிக்காலத்தில் பெற்ற அனைத்து சேவை சார்ந்த பலன்களையும் இழக்கிறார். இதனால் அவர் பொருளாதார ரீதியாக ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார். இவ்வளவு கடுமையான விளைவுகள் ஏற்படும்போது, உயர் நீதிமன்றம் அமைதியான பார்வையாளராக இருக்க முடியாது" என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். பல்கலைக்கழகம் அமைத்திருந்த ஒரு நபர் விசாரணைக் குழுவின் அறிக்கையை ஆராய்ந்த உச்ச நீதிமன்றம், சரவணன் போதுமான ஆதாரங்கள் இல்லாமலேயே குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருப்பதாகக் கூறியது."வதந்திகளின் அடிப்படையில் ஒருவரைத் தூக்கிலிடுவதைவிடப் பெரிய அநீதி வேறு என்ன இருக்க முடியும்?" என்ற பொருளில் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். சரவணனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகக் கூறுவதற்குத் தேவையான அடிப்படை ஆதாரங்களே இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. ஒரு நபர் விசாரணைக் குழுவின் அறிக்கையைப் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் ஏற்றுக்கொண்டதற்கான காரணங்கள் பணிநீக்க உத்தரவில் குறிப்பிடப்படவில்லை என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினார்கள். விசாரணைக் குழுவின் முடிவுகள் ஊகங்கள் மற்றும் ஆதாரமற்ற அனுமானங்களின் அடிப்படையில் அமைந்திருந்ததை, ஒழுங்கு நடவடிக்கை அதிகாரி கவனிக்கத் தவறிவிட்டார் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் விதிகளின்படி, சரவணனுக்கு வேறு மேல்முறையீட்டு வழி இருந்ததால், அரசியலமைப்புச் சட்டத்தின் 226-வது பிரிவின்கீழ் உயர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்திருக்கக் கூடாது என்ற பல்கலைக்கழகத்தின் வாதத்தையும் உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. சில பொருத்தமான வழக்குகளில், தண்டனை உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்படும் மனுவை விசாரிப்பதற்காக, உயர் நீதிமன்றம் பொதுவாகத் தானே விதித்துக்கொண்டுள்ள கட்டுப்பாட்டைத் தாண்டிச் செயல்பட வேண்டியிருக்கும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். ஒரு நபர் விசாரணைக் குழுவின் அறிக்கை எந்த ஆதாரமும் இல்லாத முடிவுகளை அடிப்படையாகக் கொண்டது என்றும், சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியாத அனுமானங்கள் மூலம் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளன என்றும் தனி நீதிபதி கண்டறிந்திருந்தார் என்பதை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. அரசியலமைப்புச் சட்டத்தின் 226-வது பிரிவின்கீழ், நீதி, நியாயம் மற்றும் நேர்மையான நடைமுறைகளை நிலைநாட்ட உயர் நீதிமன்றம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்த முடியும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. துறைசார் அதிகாரிகள் பிறப்பிக்கும் உத்தரவுகளின் சட்டப்பூர்வத்தன்மை, பகுத்தறிவற்ற தன்மை மற்றும் நடைமுறைத் தவறுகள் ஆகியவற்றை ஆராய்வதற்கும் உயர் நீதிமன்றத்தின் நீதித்துறை மறுஆய்வு அதிகாரம் பயன்படுகிறது என்று நீதிபதிகள் விளக்கினார்கள். சட்டப்படி ஏற்றுக்கொள்ளத்தக்க ஆதாரங்கள் இல்லாமல் பணிநீக்கத் தண்டனை விதித்ததன் மூலம், ஒழுங்கு நடவடிக்கை அதிகாரி இயற்கை நீதிக் கோட்பாடுகளை மீறியுள்ளார் என்றும் நீதிமன்றம் கூறியது. எனவே, ஒரு நபர் விசாரணைக் குழுவின் அறிக்கையில் உள்ள முடிவுகளை ஆராய்ந்த உயர் நீதிமன்றத் தனி நீதிபதியின் அணுகுமுறை சரியானதே என்றும் தீர்ப்பளித்தது. "ஒரு முடிவு ஊகங்கள் மற்றும் ஆதாரமற்ற அனுமானங்களின் அடிப்படையில் அமைந்திருப்பது வெளிப்படையாகத் தெரியும்போது, அல்லது சட்டப்படி அனுமதிக்கப்படாத அனுமானங்களின் அடிப்படையில் முடிவு எடுக்கப்பட்டிருக்கும்போது, அரசு ஊழியருக்கு இழைக்கப்பட்ட அநீதியைச் சரிசெய்யும் அதிகாரத்தை உயர் நீதிமன்றம் இழந்துவிடாது" என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், விசாரணை அதிகாரி பதிவு செய்த குற்ற முடிவுக்கு எந்த ஆதாரமும் இல்லாவிட்டால், அந்த முடிவை Certiorari எனப்படும் நீதிப்பேராணை நடவடிக்கை மூலம் எதிர்க்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது. அத்தகைய சூழலில், கிடைத்த ஆதாரங்களை எவ்வாறு மதிப்பிடுவது என்பது மட்டும் பிரச்சினையல்ல. பதிவிலுள்ள ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுக்கு முரணான முடிவு எடுக்கப்பட்டுள்ளதா என்பதே முக்கியமான கேள்வியாகும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் விளக்கினர்.அரசியலமைப்புச் சட்டத்தின் 226-வது பிரிவின் அதிகாரம்