சேலம்: சேலம் மாநகராட்சியில் மேயர்-துணை மேயர் இடையே இருக்கை விவகாரத்தில் வார்த்தை மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு எழுந்தது.
சேலம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மேயர் மற்றும் துணை மேயர் இருக்கை விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட கருத்து மோதலால், மக்கள் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க வேண்டிய கூட்டம் முடங்கியது.
திமுகவைச் சேர்ந்த மேயர் ராமச்சந்திரன் தலைமையில் கூட்டம் நடைபெற இருந்த நிலையில், துணை மேயர் சாரதா தேவியின் இருக்கை தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. துணை மேயர் இருக்கையை அகற்ற வேண்டும் என மேயர் வலியுறுத்திய நிலையில், தனது உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது என சாரதா தேவி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இருவரும் மேடையில் அமர மறுத்து, தனித்தனியாக போராட்டத்தில் ஈடுபட்டனர். துணை மேயருக்கு ஆதரவாக வந்த காங்கிரஸ் கட்சியினருக்கும், மாமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து, கூட்டத்தை நடத்தாமல் தனது அறைக்குச் சென்ற மேயர், பின்னர் மீண்டும் அரங்கிற்கு வந்து, கூட்டத்திற்கு இடையூறு செய்ததாகக் கூறி துணை மேயரை இரண்டு மாமன்ற கூட்டங்களில் இருந்து இடைநீக்கம் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து கூட்டம் முடிந்ததாகவும் அறிவித்துச் சென்றார். தன்னை இடைநீக்கம் செய்ய மேயருக்கு அதிகாரம் இல்லை என்றும், தனது உரிமைக்காக அகிம்சை வழியில் போராடுவதாகவும் துணை மேயர் சாரதா தேவி தெரிவித்தார்.