சேலம்: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், டெல்டா விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,398 கன அடியிலிருந்து 6,250 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் தற்போது 83.67 அடியாக இருக்கும் நிலையில், நீர் இருப்பு 45.71 டி.எம்.சி ஆக உள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர் மற்றும் கடலூர் பகுதிகளில் குறுவை சாகுபடி முக்கிய பங்கு வகிக்கிறது.
ஜூன் முதல் செப்டம்பர் வரை நடைபெறும் இந்த சாகுபடி, தமிழகத்தின் முதல் நெல் பருவமாக கருதப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 3 லட்சம் முதல் 4.5 லட்சம் ஏக்கர் வரை குறுவை சாகுபடி நடைபெறுகிறது. நல்ல நீர்வரத்து உள்ள ஆண்டுகளில் இது 5 லட்சம் ஏக்கரை கூட தாண்டியுள்ளது. தமிழ்நாட்டின் மொத்த நெல் உற்பத்தியில் காவிரி டெல்டா பகுதியின் பங்கு மிகவும் முக்கியமானது. தமிழகம், ஆண்டுக்கு சுமார் 75 லட்சம் முதல் 85 லட்சம் டன் வரை நெல் உற்பத்தி செய்யும் நிலையில், குறுவை பருவத்தில் மட்டும் 10 லட்சம் முதல் 15 லட்சம் டன் வரை நெல் கிடைக்கிறது. இந்த நிலையில், நடப்பாண்டு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததாலும், கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கான காவிரி நீர் போதிய அளவில் கிடைக்காததாலும், ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. இதனால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. இதனிடையே, செப்டம்பர் 1-ஆம் தேதி தமிழக முதலமைச்சர் விஜய் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்தார். மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 45 நாட்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து முதற்கட்டமாக வினாடிக்கு 3000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் அன்று மாலையே நீர்வரத்து அதிகரித்ததால் நீர் திறப்பு 4000 கனடியாக அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து இரவில் 7000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அதன் பின்னர் கடந்த ஐந்து நாட்களாக காவேரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து 10,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. பின்னர் அது 12,00 கன அடியானது. தற்போதும், மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு 12,000 கன அடியாக தொடர்கிறது. கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்ததாக சொல்லப்படுகிறது. இன்று காலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,398 கன அடியிலிருந்து 6,250 கன அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்ததால் பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு 12000 கன அடியாக தொடர்கிறது. தொடர்ந்து நீர் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் அணையின் நீர்மட்டம் அதிகரித்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவும் அதிகரிக்கலாம் என சொல்லப்படுகிறது. இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 83.67 அடியாக உள்ளது. அணையில் தற்போது 45.71 டி.எம்.சி. அளவுக்கு நீர் இருப்பு உள்ளது. அணைக்கு வரும் நீர் 6,250 கன அடியாகவும், காவிரி டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு 12,000 கன அடியாகவும் உள்ளது.காவிரி டெல்டா
குறுவை சாகுபடி
மேட்டூர் அணை
நீர்வரத்து அதிகரிப்பு
அணையின் நீர்மட்டம்