சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே புதுவித நோய் பரவி வருவதால் மொட்டை அடித்துக் கொண்டால் அரசு சார்பில் ரூ. 45 ஆயிரம் தருவதாகக் கூறி பெண்களிடம் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ளது புதுகொத்தாம்பாடி கிராமம். இப்பகுதியைச் சேர்ந்த பழனியம்மாள் என்பவரின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அப்போது பேசிய மர்ம நபர் ஒருவர் தாலுகா அலுவலகத்தில் இருந்து வட்டாட்சியர் பேசுவதாகக் கூறியதோடு அந்தப் பெண், அவரது குடும்ப உறுப்பினர்களின் பெயரையும் சரியாகக் கூறியுள்ளார்.
மேலும், கொரோனா போன்று புதுவித நோய் ஒன்று பரவி வருகிறது. இந்த நோய் தலைமுடி வழியாகப் பரவி வருகிறது. இந்த நோயிலிருந்து தப்பிக்க வெளிநாடுகளில் மொட்டை அடித்து பாதுகாத்துக் கொள்கின்றனர். மொட்டை அடித்துக் கொண்டால் இந்த நோயின் தாக்கத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இதுபோன்று மொட்டை அடித்துக் கொள்ளும் நபர்களுக்கு அரசு சார்பில் ஊக்கத் தொகையா பெண்களுக்கு ரூ. 15 ஆயிரம், பள்ளி கல்லூரி மாணவிகளுக்கு ரூ 45 ஆயிரம் மற்றும் லாப்டாப், ஆண்களுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த கிராமத்திற்கு 18 டோக்கன் மட்டுமே தற்போது உள்ளது. உங்கள் உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்துக் கொள்ளலாம். மொட்டை அடித்து தயார் நிலையில் உள்ளவர்களுக்கு அதிகாரிகள் பணம் வழங்குவார்கள் என்று கூறி ஆசை காட்டியுள்ளனர். இதை நம்பி 20 பேர் மொட்டை அடிக்க தயராகிய நிலையில், காவேரி, ராமாயி, சித்ரா ஆகிய 3 பேர் மொட்டை போட்டுள்ளனர். இதையடுத்து, அந்த நபரை தொர்பு கொண்டபோது போன் ஸ்விட்ச் ஆப் என்று வந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர், தாங்கள் ஏமாந்த சம்பவம் குறித்து ஆத்தூர் போலீஸில் புகார் அளித்தனர். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், புதுவித நோய் பரவுவதால் மொட்டை அடித்துக் கொள்பவர்களுக்கு பணம் வழங்கப்படும் என்று கூறி ஏற்கனவே இதுபோன்று மொட்டை அடித்த நபர்களின் புகைப்படங்கள், ரூ 500 நோட்டுகள் போன்றவற்றை வாட்ஸ் அப்பில் அனுப்பினர். பணம் வழங்குவதற்கு தகுந்தாற்போல் டேபில்,சேர் போட்டு தயார் நிலையில் என்று கூறினர். இதையடுத்து, உள்ளூர் நபரை வரவழைத்து 3 பேர் மொட்டை போட்டனர். அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது ஸ்பிட்ச் ஆப் என வந்தது. தங்களை ஏமாற்றிய மர்ம நபரை கண்டறிந்து அரசு, போலீஸார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.