சேலம்: சேலம் மாநகரத்தின் கொண்டலாம்பட்டி பகுதியே அதிர்ச்சியிலிருந்து வெளிவரவில்லை.. 13 வயதே நிரம்பிய ஒரு பள்ளி சிறுமியை நாசம் செய்திருக்கிறது ஒரு கும்பல்.. சிறுமிக்கு மது பானத்தை பழக்கி, கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக பலர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாக வெளியான தகவல், தமிழகம் முழுவதையுமே உலுக்கியெடுத்துள்ளது.
சேலம் மாநகர் கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அந்த 13 வயது சிறுமி.. கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு, தனது தோழிகளுடன் சேர்ந்து அங்குள்ள ஒரு தனியார் பூங்காவுக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு நைசாக பேசி அறிமுகமான சிலர், அந்த சிறுமிக்கு திட்டமிட்டு மதுபானத்தை கொடுத்து பழக்கியுள்ளனர். நாளடைவில் அந்த மதுப்பழக்கத்தையே சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த கும்பல், சிறுமியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக பலமுறை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளது. சிறுமியின் நடத்தையில் திடீரென ஏற்பட்ட மாற்றங்களையும், அவரது உடல் ரீதியான பாதிப்புகளையும் கவனித்த பள்ளி தலைமை ஆசிரியர், உடனடியாக சிறுமியின் பெற்றோர வரவழைத்து பேசியுள்ளார். ஆசிரியர் கொடுத்த அந்த எச்சரிக்கை மணிதான், ஒரு வருடமாகவே மூடி மறைக்கப்பட்டிருந்த கொடூரத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் உடனடியாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, முதற்கட்டமாக 4 இளைஞர்களை கைது செய்து ஜெயிலில் அடைத்தது. மேலும் 14 பேரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. ஆனால், வழக்கின் உண்மையான திருப்பம் கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தின் வாசலில்தான் தொடங்கியது. கைது செய்யப்பட்ட இளைஞர்களின் பெற்றோர் கொந்தளிப்போடு போலீஸ் ஸ்டேஷனுக்கு திரண்டார்கள். "கஞ்சா போதைக்கு அடிமையான அந்த சிறுமிதான் எங்கள் பிள்ளைகளை வம்புக்கு இழுத்து சீரழித்துவிட்டாள்" என்று அவர்கள் தூக்கிப் போட்ட குண்டு, இந்த விவகாரத்தை முற்றிலும் வேறு ஒரு கோணத்திற்கு தள்ளியிருக்கிறது. 2 தரப்பும் மாற்றி மாற்றி குற்றச்சாட்டுகளை அள்ளி வீச, கொண்டலாம்பட்டி பகுதி இப்போது பெரும் பதற்றத்தில் உறைந்து போய் நிற்கிறது. இந்த சம்பவம் வெறும் ஒரு குற்ற வழக்காக மட்டும் முடியாமல், இப்போது கோட்டை வரை எதிரொலிக்க தொடங்கிவிட்டது. தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் உள்ள தமிழக வெற்றி கழக அரசுக்கு, இந்தச் சம்பவம் மிகப்பெரிய அரசியல் சவாலாக உருவெடுத்துள்ளது. மாநிலத்தில் ஏற்கனவே சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடப்பதாகவும், போதைப்பொருட்களின் புழக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டதாகவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போர்க்கொடி உயர்த்தி வந்தன. இப்போது 13 வயது சிறுமிக்கு மதுவும் கஞ்சாவும் மிக சுலபமாகக் கிடைத்ததும், ஒரு வருஷமாக இந்த கொடூரம் தொடர்ந்ததும் உளவுத்துறையின் மிகப்பெரிய தோல்வி என எதிர்க்கட்சிகள் சாடி வருகின்றன. சட்டமன்றத்திலும் இந்த விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்து அரசை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளன. "குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டாலும், சேலத்தில் வெடித்துள்ள இந்த சம்பவம் தவெக அரசின் நிர்வாகத் திறனுக்கு விழுந்த மிகப்பெரிய அடியாகவே பார்க்கப்படுகிறது.சேலம் 13 வயது சிறுமி
கொண்டலாம்பட்டி காவல் நிலையம்
எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு