சேலம் 8 வழிச்சாலை, பரந்தூர் விமான நிலையம், தர்மபுரி - மொரப்பூர் ரயில் பாதை .. அபாயகரமான பார்வை

  • சேலம்: சேலம் 8 வழிச்சாலை, பரந்தூர் விமான நிலையம், தர்மபுரி - மொரப்பூர் ரயில் பாதை திட்டம் என பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதில் சேலம் எட்டுவழிச்சாலை திட்டமும், பரந்தூர் விமான நிலைய திட்டமும் கைவிடப்பட்டிருக்கின்றன. தற்போது தர்மபுரி - மொரப்பூர் ரயில் பாதை திட்டத்தால் வீடு மற்றும் நிலத்தை ஒப்படைக்க வேண்டிய நிலையில் உள்ளவர்கள் அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துக் குமுறுகிறார்கள். இவர்களுக்கு ஆதரவாகவும் கருத்துக்களைச் சிலர் பதிவிடுகிறார்கள். உண்மையில் வளர்ச்சித் திட்டங்கள் எல்லாவற்றையும் விவசாயிகளுக்குப் பாதிப்பு என்ற பெயரைக் கூறி எதிர்ப்பது தமிழகத்தில் அதிகரித்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். அரசியல் கட்சிகளுமே குறுகிய கால லாபம் கருதி திட்டங்களை எதிர்ப்பதால், மத்திய அரசு தமிழகத்திற்குத் திட்டங்களை அறிவித்த பின்னர் பின்வாங்குவதாகவும் கூறப்படுகிறது.

    Advertisement

    சென்னை - சேலம் இடையே 8 வழிச்சாலை அமைக்கப்பட்டிருந்தால், கொங்கு மண்டல மக்கள் எளிதாக கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் போன்ற தொழில் நகரங்களுக்குச் சென்றிருக்க முடியும். அதேபோல் கேரளா செல்வதும் எளிதாக இருந்திருக்கும். மேலும் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி பெரிய அளவில் அதிகரித்திருக்கும். இன்று அந்தப் பகுதிகள் எல்லாமே தொழில் மண்டலங்களாக மாறியிருக்கும்.

    Advertisement

    சேலம் எட்டு வழிச்சாலை திட்டம்

    ஆனால் விவசாயம் பாதிக்கும் என்று கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் சேலம் எட்டுவழிச்சாலைத்திட்டம் கைவிடப்பட்டது. இப்போது ஒவ்வொரு வாரமும் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை என்ன பாடுபடுகிறது என்பதைப் பார்க்க முடியும். இந்தத் திட்டத்தை எதிர்த்த பல அரசியல்வாதிகள் விமானத்தில் சென்றுவிடுகிறார்கள். அவர்களை வெள்ளிக்கிழமைகளில் பயணிக்க வைத்தால், சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் எவ்வளவு முக்கியமான திட்டம் என்பது தெரிந்திருக்கும்.

    சென்னை விமான நிலையம்

    அதேபோல் பரந்தூர் விமான நிலைய திட்டமும் விவசாயிகளைப் பாதிக்கும், விவசாயத்தைப் பாதிக்கும் என்று கூறித்தான் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஏகானாபுரம் என்ற ஒரு கிராமத்தில் விவசாய நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்பதற்காக நன்கு திட்டமிட்டு செயல்படுத்தப்பட்ட பரந்தூர் விமான நிலைய திட்டம் அடியோடு கைவிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் கைவிடப்பட்டுள்ளதால், சென்னைக்குப் புதிய விமான நிலையம் அமைவது இன்னும் 10 ஆண்டுகள் தள்ளிப்போகப் போகிறது. சென்னையின் வளர்ச்சி 10 ஆண்டுகள் தேக்கநிலையை அடையும் அபாயத்தில் இருக்கிறது.

    Advertisement

    பரந்தூர் விமான நிலையம் கைவிடப்பட்டது சரியா

    சென்னை விமான நிலையத்தில் சரக்குகள் அனுப்புவதில் இப்போதே கடும் சிக்கல் நிலவுகிறது. லாரி கட்டுப்பாடுகள், சரக்குகளைக் கையாள்வதற்கான போதிய இடமின்மை, விமான நிலையத்தில் பல்வேறு குறைபாடுகள் என சென்னைக்குப் புதிய விமான நிலையத்தின் தேவைக்குப் பல காரணங்கள் உள்ளன. சென்னை விமான நிலையம் பற்றி பல்வேறு குறைகளை முதல்வர் விஜய்யே, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். அப்படி இருக்கும்போது, புதிய விமான நிலையத்தைத் தள்ளிப்போடுவது எந்த அளவிற்குச் சென்னைக்கு எதிர்காலத்தில் சிக்கலை ஏற்படுத்தும் என்பதைப் பலர் அறியவில்லை. விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறி முதல்வர் விஜய்யே இந்தத் திட்டத்தைக் கைவிட்டதுதான் பெரிய ஆச்சரியமான அரசியல் கலந்த முடிவு என்று அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

    Advertisement

    தர்மபுரி - மொரப்பூர் ரயில் பாதை

    அடுத்ததாகத் தற்போது தர்மபுரி - மொரப்பூர் ரயில் பாதை திட்டத்தினையும் சிலர் எதிர்க்கிறார்கள். இந்தத் திட்டம் என்பது தர்மபுரி மக்களின் கனவுத் திட்டம். இந்தத் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருவர் ஆக்ரோஷமாகப் பேசிய வீடியோவைக் காண முடிந்தது. இந்தத் திட்டத்தின் தாமதம் என்பது பின்தங்கிய நிலையில் உள்ள தர்மபுரியின் வளர்ச்சியை இன்னும் தாமதப்படுத்தும். ஏனெனில் இந்தத் திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால், ஓசூர் - சென்னை ரயில் போக்குவரத்து மிக எளிதாகும். தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு இந்தத் திட்டம் மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும். ஆனால் இந்தத் திட்டம் அப்படியே இழுத்துக்கொண்டே செல்கிறது.

    Advertisement

    மேட்டூர் அணை

    இந்தத் திட்டம் மட்டுமல்ல தூத்துக்குடி கப்பல் கட்டும் தளம், பல்வேறு நகரங்களில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பது என பல விஷயங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது தொடர்கிறது. வளர்ச்சித் திட்டங்கள் எல்லாவற்றிலும் யாராவது ஒருவர் பாதிக்கப்படத்தான் செய்வார்கள். யாருமே பாதிக்காத ஒரு திட்டத்தைக் கூட காட்டிவிட முடியாது. மேட்டூர் அணைக்காக எத்தனை கிராமங்கள் நிலங்களை, வீடுகளைப் பறிகொடுத்துள்ளன! மேட்டூரின் தியாகத்தால் தான் இன்று டெல்டா மாவட்டங்கள் வாழ்கின்றன.

    வைகை அணை

    அதேபோல் வைகை அணைக்காக அந்தக்காலத்தில் எத்தனை ஊர் மக்கள் மொத்தமாகக் காலி செய்யப்பட்டார்கள் தெரியுமா? எத்தனை ஏக்கர் விவசாய நிலங்களைப் பறிகொடுத்தார்கள் தெரியுமா? அவர்களின் தியாகம் காரணமாகவே இன்று ஐந்து மாவட்ட மக்கள் விவசாயம் செய்கிறார்கள்; குடிநீருக்குச் சிக்கல் இல்லாமல் இருக்கிறார்கள். எனவே வளர்ச்சித் திட்டங்களை வைத்துச் குறுகிய அரசியலுக்காக அரசியல்வாதிகள் எதிர்ப்பதும், சுற்றுச்சூழல் என்ற பெயரில் முடக்குவதும் தமிழகத்தில் பெரிய சிக்கலாக மாறியுள்ளது.

    Advertisement


    மதுரவாயல் துறைமுகம் சாலை திட்டம்

    தமிழ்நாட்டில் எப்போதோ முடிந்திருக்க வேண்டிய திட்டம் ஒன்றை மட்டும் கூறுகிறேன்; மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் 2009-இல் தொடங்கியது. அந்தத் திட்டம் செயல்பாட்டிற்கு வந்திருந்தால் இந்நேரம் எவ்வளவு பெரிய வளர்ச்சி பெற்றிருக்கும் தெரியுமா? 2011-இல் அன்றைய முதல்வர் ஜெயலலிதாவால் நிறுத்தப்பட்ட அந்தத் திட்டத்தை, மத்திய அரசு கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் காத்திருந்து 2017-க்குப் பின்னரே செயல்படுத்த முனைந்தது. இப்போது அதன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

    சென்னை திருச்சி புதிய அதிவிரைவு சாலை

    சென்னை - திருச்சி இடையே எப்போதோ புதிதாக ஒரு அதிவிரைவு 8 வழிச்சாலை அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அப்படியான எந்தவொரு சாலைத் திட்டமும் செயல்பாட்டில் இல்லை. கோவை மாநகரம் எதிர்காலத்தை உணர்ந்து நகரின் மையப்பகுதியிலிருந்து வெளியே செல்லும் நீலாம்பூர் வரை மேம்பாலச் சாலை கொண்டுவந்துவிட்டது. ஆனால் தமிழ்நாட்டிலேயே அதிக வாகனங்கள் செல்லும் தாம்பரம் - செங்கல்பட்டு இடையே உயர்மட்ட மேம்பாலச் சாலையை மத்திய அரசு இன்று வரை அமைக்கவே இல்லை.

    விவசாயிகளை அணுக வேண்டிய விதம்

    அதேநேரத்தில், நிலங்களை வழங்கித் தியாகம் செய்யும் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் வெறும் அரசு வழிகாட்டி மதிப்பின்படி அல்லாமல், தற்போதைய சந்தை விலையை விட உயர்த்தி நியாயமான இழப்பீடு வழங்கப்பட வேண்டியது அவசியம் ஆகும். அவர்களுக்கு மாற்று வாழ்வாதாரத்தையும், மாற்று நிலத்தையும் அரசு உறுதியளிக்க வேண்டியது அவசியம் ஆகும். சுற்றுச்சூழல் பாதிப்புகளை மிகக் குறைந்த அளவில் வைப்பதற்கான மாற்று வழிமுறைகளைக் கண்டறிந்து, வெளிப்படைத்தன்மையுடன் மக்களை அணுகினால் மட்டுமே இத்தகைய எதிர்ப்புகளைத் தவிர்க்க முடியும்.

    அரசியல்வாதிகள் எதிர்ப்பு

    எந்த வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தினாலும் விவசாய நிலங்களைக் கையகப்படுத்தாமல் செய்யவே முடியாது. எனவே குறைவான பாதிப்புடன், அதேநேரம் எதிர்காலத்தில் மக்களுக்கு இந்தத் திட்டம் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து, அதனைத் தொலைநோக்குடன் அரசியல்வாதிகள் அணுகினால்தான் பிரச்சனை குறையும். அதேபோல் சுயலாபத்திற்காகவும், ஆளுங்கட்சிக்கு நெருக்கடி கொடுத்து அரசியல் செய்யவும் வளர்ச்சித் திட்டங்களை எதிர்க்கத் தொடங்கினால், அது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத்தான் சிக்கலாக முடியும் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.

    English Summary

    Salem 8-lane highway, Parandur airport, and Dharmapuri-Morappur railway line project: A perspective on development projects turning hazardous.